கிளைமேக்ஸ் பாடலை டைட்டில் கார்டில் போட்ட இயக்குநர்.. கண்டபடி திட்டிய இளையராஜா.. ஆனாலும் ஹிட்தான்!

படத்தில் கதையே இல்லாவிட்டாலும் பரவாயில்லை இசையில் இளையராஜா பார்த்துக் கொள்வார் என்று கண்மூடிக்கொண்டு படங்களை எடுத்து இளையராஜா இசையால் புகழ்பெற்ற இயக்குநர்கள் ஏராளம். தன்னுடைய கைவண்ணத்தால் மொக்கைப் படங்களைக் கூட பின்னணி இசையிலும், பாடல்களிலும் மெருகேற்றி ஹிட் வரிசையில் சேர்த்து விடுவார்.

இளையராஜாவின் இசையில் அப்படி உருவான ஒரு பாடல்தான் ‘தேவனின் கோயில் மூடிய நேரம்’ இடம்பெற்ற படம் ‘அறுவடை நாள்’. சிவாஜி புரடக்ஷன்ஸ் சார்பில் பிரபு, பல்லவி, வடிவுக்கரசி, ராம்குமார் ஆகியோர் நடித்தருந்தனர். ‘இறைஞ்சுதல்’ என்கிற உணர்வை இசையாகவும் குரலாகவும் துல்லியமாகப் பதிவு செய்திருக்கும் பாடல் இது.

இயக்குநர் ஜி.எம்.குமாருக்கு இதுதான் முதல் படம். உதவி இயக்குநராக இருந்த போதே இளையராஜாவிடம் அவருக்குப் பழக்கம் உண்டு. எனவே தனது படத்தை இயக்கும் போது, ‘இளையராஜாவிடமிருந்து அற்புதமான பாடல்களை வாங்க வேண்டும்’ என்கிற நோக்கில் “க்ளைமாக்ஸில் ஒரு பாட்டு வேண்டும்… ‘அலைகள் ஓய்வதில்லை’யில் வரும் ‘காதல் ஓவியம்’ மாதிரியான பாடல்” என்று ராஜாவிடம் கேட்கிறார்.

மொய் விருந்தில் தாலியை வைத்த சின்னக் கவுண்டர்.. ’அந்த வானத்தைப் போல..’ பாடல் உருவான தருணம்

ஒரு கதையை நுனி முதல் அடி வரை ஆராயும் ஞானம் கொண்ட இளையராஜா “க்ளைமாக்ஸ்ல பாட்டுக்கு இடமே இல்லையே?” என்று கேட்க, பாடலை வாங்கிவிட வேண்டும் என்கிற ஆவலில், “இல்ல… நான் ஒரு திட்டம் வெச்சிருக்கேன்” என்று சொல்லி பாட்டை வாங்கிவிடுகிறார் குமார்.

படம் தயாராகி விட்டது. சிவாஜி கணேசன் படத்தைப் பார்க்கத் தயாரானார். “என்னென்ன கரெக்ஷன் சொல்வாரோ… எதை எதைத் தூக்க வேண்டியிருக்குமோ?” என்கிற ஒரேயொரு கேள்வி மட்டுமே அந்த அறிமுக இயக்குநரின் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. உற்சாகத்துடன் வெளியே வந்த சிவாஜி “ஒரு பிரேம் கூட வெட்டக்கூடாது. அற்புதமா வந்திருக்கு படம் என்று சொல்லி விட்டுச் சென்றதும் இயக்குநருக்கு மிக்க மகிழ்ச்சி.

படத்தின் பின்னணி இசை கோர்ப்புக்கான நேரம். க்ளைமாக்ஸில் வருவதாகச் சொல்லி வாங்கிய பாடல், ஆரம்பத்திலேயே டைட்டில் கார்டின் பின்னணியில் ஓடுகிறது. அதுவும் பாதி பாடல்தான். இளையராஜாவின் அற்புதமான ஹம்மிங் வேறு அதில் இல்லை. இசைக் கோர்ப்பு முடித்து விட்டு வெளியே வரும் ராஜா, செல்லக் கோபத்துடன் டைரக்டரை நோக்கிக் கேட்கிறார். “ஏன்யா… நான்தான் சொன்னேன்ல… அந்த இடத்துல பாட்டு வராதுன்னு. இப்ப என்ன செஞ்சு வெச்சிருக்கே… பாடலை அரையும் குறையுமா?” என்று கேட்கிறார். “படம் எப்படியிருக்குங்க?” என்று இயக்குநர் தயங்கியபடியே கேட்க “நல்லாயிருக்கு… நல்லாயிருக்கு” என்று புன்னகைத்த படி ராஜா கிளம்பிவிட்டார். அதுவே இயக்குநருக்குக் கிடைத்த பெரிய சான்றிதழ்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews