அப்படி ஒரு வெறியில் ரத்னம் படத்தை இயக்கியிருக்கிறேன்… இயக்குனர் ஹரி விளக்கம்…

இயக்குனர் ஹரி அதிரடி மற்றும் மசாலா திரைப்படங்களை எடுத்து பிரபலமானவர். 2002 ஆம் ஆண்டு ‘தமிழ்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் 2003 ஆம் ஆண்டு நடிகர் விக்ரமை வைத்து இவர் இயக்கிய ‘சாமி’ திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக இருந்தது என்றே சொல்லலாம். இரண்டாவது படமான ‘சாமி’ மாபெரும் வெற்றி பெற்று அனைவராலும் கவனிக்கப்பட்டார் இயக்குனர் ஹரி.

அடுத்தடுத்து இவர் இயக்கிய படங்களான ‘கோவில்’, ‘அய்யா’, ‘தாமிரபரணி’, ‘வேல்’, ‘சிங்கம் பாகம் 1,2,3’ அனைத்தும் வெற்றி படங்கள் ஆனதால் இயக்குனர் ஹரி முன்னணி இயக்குனர்களில் ஒருவரானார். இவர் படங்கள் குடும்ப பாங்கானதாகவும், அதிரடி ஆக்க்ஷன்கள் நிறைந்ததாகவும் இருக்கும். மேலும் இவர் பெரும்பாலும் கோவை, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி சார்ந்த படங்களை அதன் சுற்றுவட்டாரத்திலே படம் பிடித்திருப்பார்.

தென்தமிழகத்தை சுற்றியே இவரது கதைக்களம் அமைந்திருப்பதால் இவர் படங்களில் வரும் ஆக்க்ஷன் காட்சிகளில் அதிகமாக அரிவாளை பயன்படுத்தி இருப்பார். அதனால் இயக்குனர் ஹரிக்கு ‘அருவா இயக்குனர்’ என்ற செல்லப் பெயரும் உண்டு.

இந்நிலையில் இயக்குனர் ஹரி நடிகர் விஷாலை வைத்து இயக்கியிருக்கும் ஆக்க்ஷன் திரைப்படம் ‘ரத்னம்’. இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அதில் முதலாவதாக இயக்குனர் ஹரி பத்திரிகையாளர்களிடம் பேசியுள்ளார். அதில் ‘ரத்னம்’ திரைப்படத்தைப் பற்றி சில விளக்கங்களை கொடுத்துள்ளார்.

அவர் கூறியிருப்பது என்னவென்றால், நம் சமூகத்தில் நல்லவர்களை விட கெட்டவர்கள் அதிகமாக இருப்பார்கள். நம் கண் முன்னே கூட சில அநியாயங்கள் நடக்கும். அதை நம்மால் தட்டி கேக்க இயலாமல் இருக்கும். அப்போது நமக்குள் ஒரு வேகம் வரும். அந்த வேகத்தை ‘ரத்னம்’ மாதிரி படங்களை பார்த்து நாம் தணித்துக் கொள்ளலாம். அந்த வெறியில் தான் நான் இந்த படத்தை இயக்கியுள்ளேன். எந்த இடத்தில் அநியாயம் நடந்தாலும் உடனே தட்டி கேக்கிறவன், அதனால் வரும் பிரச்சனைகளை சமாளிப்பவன் தான் ஹீரோ. அதை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளேன். கண்டிப்பா எல்லாருக்கும் பிடிக்கும், மக்கள் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று இயக்குனர் ஹரி கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews