வாழைக்காயை வைத்து டேஸ்ட்டான சைடிஷ் செய்வது எப்படி?

வாழைக்காயை வைத்து பல சைடிஷ்கள் எளிமையாக செய்யலாம். அந்த வகையில் இப்போ நாம் வாழைக்காய் பொரியல் சுவையாக செய்வது எப்படின்னு பார்ப்போம்.

தேவையான பொருள்கள்

வாழைக்காய் – 4
கேரட் துருவி- 1

கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
பாமாயில் – ஒரு டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
மிளகு – அரை டீஸ்பூன்
கொத்தமல்லி – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
உப்பு தேவைக்கு
பூண்டு – 4 பல்
பல்லாரி – 1
பெருங்காயம் – சிறிது

எப்படி செய்வது?

4 வாழைக்காயை கொதிக்கும் நீரில் போடுங்க. போடுவதற்கு முன் அதன் முனைகள் இரண்டையும் வெட்டி விடுங்க. நல்லா வெந்ததும் வாழைக்காயை கத்தியால் குத்திப் பாருங்க. கத்தி இறங்கினால் நல்லா வெந்து விட்டது என்று அர்த்தம்.

வாழைக்காய் நல்லா ஆறுனதும் அதன் தோலை உரிச்சி எடுத்துடுங்க. இப்போ கேரட் துருவியை எடுத்துக்கோங்க. அதில் உரித்து வைத்த வாழைக்காயை நல்லா துருவுங்க. இப்போ ஒரு வாணலியை எடுத்து அடுப்பில் வைத்து சூடு பண்ணுங்க.

vaalaikkai
vaalaikkai 4

சிறிதளவு பாமாயில் ஊற்றி காய விடுங்க. அதனுடன் அரை டீஸ்பூன் கடுகு, உளுந்தம்பருப்பு போடுங்க. கடுகு பொரிந்ததும் ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு போடுங்க. பருப்பு சிவந்து வந்ததும், ஒரு பல்லாரியை பொடிதாகக் கட் பண்ணி போடுங்க. அதனுடன் 4 பச்சை மிளகாயைக் கீறி போடுங்க. 5 பூண்டை சிறிதாகக் கட் பண்ணிப் போடுங்க. இப்போ நல்லா கிளறி விடுங்க.

அதனுடன் சிறிது பெருங்காயம் போட்டு வெங்காயத்தை நல்லா வதக்குங்க. வெங்காயம் நல்லா வதங்குனதும் திருகி வைச்சிருக்குற வாழைக்காயை அதில் போட்டு நல்லா கிளறி விடுங்க.

இப்போ தேவையான அளவு உப்பு போட்டுக்கோங்க. நல்லா கிளறி அதை ஒரு மூடி போட்டு 5 நிமிடம் சிம்மிலேயே வைத்து வேகவிடுங்க.

இப்போ இன்னொரு வாணலியை அடுப்பில் வைத்து காயவிடுங்க. ஒரு ஸ்பூன் உளுத்தம்பருப்பு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் துவரம்பருப்பு போட்டு நல்லா வறுத்துக்கோங்க.

கொஞ்சம் சிவந்ததும் அரை ஸ்பூன் மிளகு போடுங்க. அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் கொத்தமல்லியும் போட்டு நல்லா வறுங்க. இது நல்லா ஆறியதும் மிக்சியில் போட்டு பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

valaikkai poriyal
valaikkai poriyal

அரைத்து வைத்த பொடியை வாழைக்காயில் போட்டு நல்லா கிளறி விடுங்க. இப்போ ஒரு கால் கப் அளவு தேங்காய்த் துருவலைப் போட்டு கிளறி விடுங்க. இப்போ ஒரு ஸ்பூன் அளவு எலுமிச்சம்பழச்சாறைப் பிழிந்து விடுங்க.

இப்போ அடுப்பை அணைத்து விடுங்க. சிறிதளவு கொத்தமல்லி இலையைத் தூவி விடுங்க. சுவையான வாழைக்காய் பொரியல் தயார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.