சிரி.. சிரி.. கிரேஸி! கடினமான தருணங்களையும் நகைச்சுவையாக மாற்றிய மோகன் கிரேஸியானது எப்படி?

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, கலை நிகழ்ச்சி ஒன்றிற்காக ‘கிரேட் பேங்க் ராபரி’ என்ற ஸ்கிரிப்ட்டை எழுதியிருக்கிறார். அந்த ஸ்கிரிப்டிற்காக சிறந்த எழுத்தாளர் என்ற விருதை பெற்றிருக்கிறார்.

பின் தன்னுடைய தம்பி மாது பாலாஜியின் டிராமா ட்ரூப்பிற்காக ஸ்கிரிப்ட் எழுத தொடங்கியிருக்கிறார். இப்படித்தான் கிரேஸி மோகனின் நகைச்சுவை பயணம் ஆரம்பமாகி இருக்கிறது. சிறு ஸ்கிரிப்ட்களை எழுதி வந்த கிரேஸி மோகன், ‘கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’ என்ற முழு நீள நாடகத்தை எழுதினார். இதன் பின்னரே அவர் மோகனில் இருந்து ‘கிரேஸி’ மோகனாக மாறினார்.

பிறரின் டிராமா ட்ரூப்பிற்காக ஸ்கிரிப்ட் எழுதி வந்த கிரேஸி மோகன், தன்னுடைய சொந்த டிராமா ட்ரூப்பை ஆரம்பித்தார். கிரேஸி கிரியேஷன்ஸ் என்று வழங்கப்பட்ட அந்த ட்ரூப்பின் கதாநாயகன் மாது பாலாஜி. ஸ்கிரிப்ட் கிரேஸி மோகனுடையது. சாக்லேட் கிருஷ்ணா எனும் இவருடைய நாடகம் 3 வருடத்தில் 500 தடவை போடப்பட்டது.

கிரேஸி மோகனின் டிராமா டிரூப் அவரின் சொந்த ஸ்கிரிப்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 6,500 நாடகங்களை அரங்கேற்றியுள்ளனர். இவருக்கு முதல் சினிமா பரிட்சயம் கே.பாலச்சந்தரின் பொய்கால் குதிரை எனும் படம்.

கிரேஸ் மோகனின் ‘மேரஜ் மேட் இன் சலூன்’ எனும் நாடகத்தை கொண்டே ‘பொய்க்கால் குதிரை’ படமானது. கமல்ஹாசன் இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். இதன் மூலம் கிரேஸி மோகனுக்கு கமலின் நட்பு கிடைத்தது. கிரேஸி மோகனின் டைமிங் காமெடி கமலுக்கு மிகவும் பிடித்து போகவே தன்னுடைய படங்களில் தொடர்ந்து வசனம் எழுத வைத்தார்.

சதி லீலாவதி, காதலா காதலா, மைகேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்ச தந்திரம் மற்றும் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் என தொடர்ந்து பணியாற்றி வந்தார். கமலின் வாக்குறுதியை நம்பி தான் பார்த்து வந்த வேலையை விட்டு முழு நேரமாக சினிமாவில் இறங்கினார். அதற்கான பேரும், புகழும் ஒவ்வொரு படத்திற்கும் உயர்ந்து கொண்டே சென்றது.

தான் வசனம் எழுதும் எல்லா படங்களிலும் ஒரு சீன் வந்து நடித்து கைதட்டல் வாங்கி விட்டு போய்விடுவார். வாழ்க்கையில் இருக்கும் துயரங்களையும், நகைச்சுவையோடு கையாண்டு வாழ்க்கையை நம் வழிக்கு பழக்கப்படுத்த வேண்டும் என்பதை உணர்த்திய கிரேஸி மோகன் 2019 வருடம் ஜூன் மாதம் 10 ம் தேதி இறந்தார். இன்றைய சூழலில் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க இவரின் காமெடிகளை பார்த்தால் போதும் என ஒரு ‘ஸ்டிரெஸ் பஸ்டர்களை’ கொடுத்த கிரேஸி மோகனுக்கு இன்று(அக்டோபர் 16) பிறந்த நாள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews