பள்ளி பாட புத்தகங்களில் அதிரடி மாற்றம்..கிளம்பிய புதிய சர்ச்சை

சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை உள்ளடக்கிய என். சி .இ. ஆர். டி பாட புத்தகங்களில் செய்யப்பட்டு வரும் அதிரடி மாற்றங்கள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சிலான என்.சி.இ.ஆர்.டி கொரோனா கால பாதிப்புகளை கருத்தில் கொண்டு மாணவர்களின் பாடசுமையை குறைக்கும் வகையில் ஏற்கனவே உள்ள பாடத்திட்டத்தில் சில பகுதிகளை அதிரடியாக நீக்கி வருகிறது.

என்.சி.இ.ஆர்.டி இந்த நடவடிக்கை கடும் சர்ச்சைக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகி இருக்கிறது. பிரிட்டன் உயிரியலாளர் மற்றும் எழுத்தாளரான ரிச்சர்ட் என்பவர் இந்தியாவில் மத நோக்கங்களுக்காக பாடப் புத்தகங்களில் இருந்து சில பகுதிகள் நீக்கப்படுவதாக குற்றம் சாட்டி செய்துள்ள டுவிட் தற்போழுது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுவரை எதிர்க்கட்சிகள் மட்டுமே இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த நிலையில் தற்போது கல்வி நிபுணர்கள் பலரும் நீக்கப்பட்டு வரும் பாடத்திட்டங்கள் குறித்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றன.

இதற்கு முன்பு கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்சி பாடப்புத்தகத்தில் இருந்து முகலாயர்கள் பகுதி நீக்கப்படுவதாக என்.சி.இ.ஆர்.டி அறிவித்து இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதே போல் பதினோராம் வகுப்பு சமூகவியல் பாடத்திலிருந்து சில பகுதிகள் நீக்கப்பட்டதும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

அந்த வகையில் குஜராத் கலவரம் தொடர்பான பகுதிகள் சில நீக்கப்பட்டதும் மகாத்மா காந்தியை கொன்ற கோட்சே மற்றும் சுதந்திரத்திற்கு பின்னரான காங்கிரஸ் கட்சி தொடர்பான பகுதிகளும் நீக்கப்பட்டு இருப்பது பல்வேறு விவாதங்களுக்கு உள்ளானது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் பத்தாம் ஆண்டு பாடத்திட்டத்தில் இருந்து பரிணாம கோட்பாடு என்ற பகுதி நீக்கப்பட்ட போதும் இது போன்ற விமர்சனங்கள் எழுந்திருந்தன. இந்நிலையில் நடப்பாண்டில் தனிம வரிசை அட்டவணை மற்றும் ஜனநாயகம் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த போராட்டங்கள் மற்றும் இயக்கங்கள் அரசியல் கட்சிகள் ,ஜனநாயகத்தின் சவால்கள் ஆகிய பகுதிகள் நீக்கப்பட்டு இருப்பது புதிய சர்ச்சைக்கு வழிவகைத்துள்ளது.

உயர்கல்வி செல்லும்போது வேதியியல் பாடத்திட்டத்தில் மிகவும் அடிப்படை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி தனிம வரிசை அட்டவணை என்பதை சுட்டிக்காட்டி கல்வியாளர்கள் பலரும் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதற்கு முன்பு டார்வின் பரிணாம கோட்பாடு அறிவியல் பாடப் புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டபோது இந்திய அறிவியல் கழகம் உள்ளிட்ட பல அறிவியல் நிறுவனங்கள் மற்றும் விஞ்ஞானிகள் சுமார் 1800 பேர் பகுத்தறிவு சிந்தனையை வளர்க்கக்கூடிய அறிவியலின் அடிப்படையான டார்வின் தியரியை பாடத்திலிருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்.சி.இ.ஆர்.டிக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரமாண்டமாக உருவாகியுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம்..என்னென்ன வசதிகள் உள்ளன?

எதிர்கால இந்தியாவை நிர்ணயிக்கும் மாணவர்களின் பாடப்புத்தக விவகாரத்தில் அரசு கவனத்தோடு செயல்பட வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews