துரோகம், இழப்பால் சறுக்கலைச் சந்தித்த சசிக்குமார்.. அயோத்தி மூலம் மீண்ட கதை

தமிழ் சினிமாவில் நட்புக்கு இலக்கணம் வகுக்கும் எத்தனையோ திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இயக்குநரும், நடிகருமான சசிக்குமார் அளவிற்கு நட்பினைப் பற்றி பேசிய இயக்குநர்கள் வேறுயாரும் இல்லை என்றே சொல்லலாம். தான் நடிக்கும் பெரும்பாலான படங்களில் நட்புக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து ‘மூழ்காத ஷிப்பே பிரண்ட்ஷிப்’ தான் என்று நட்பு புராணம் பேசி வருபவர். இயக்குநர் பாலாவின் மாணவரான சசிக்குமார் சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக என்ட்ரி கொடுத்தவர்.

தனது முதல் படத்திலேயே துரோகம், நட்பு, காதல் என சினிமாவை மதுரைப் பக்கம் திருப்பி மாபெரும் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தவர். நடிகர் ஜெய்க்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த படமாகவும் விளங்கியது சுப்ரமணியபுரம். அதற்கு அடுத்த வருடமே பசங்க படத்தினை தயாரித்து இயக்குநர் பாண்டிராஜுக்கு முதல்பட வாய்ப்பினைக் கொடுத்தார். அந்த வருடமே மீண்டும் தனது நண்பர் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான நாடோடிகள் படத்தில் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து அந்தப் படத்தினையும் ஹிட் ஆக்கினார்.

இப்படி நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என சுழன்று கொண்டிருந்த சசிக்குமாரை தமிழ் சினிமாவிற்கு அடுத்த பார்த்தீபன் கிடைத்து விட்டார் என ரசிகர்கள் கொண்டாட திடீரென அவரது திரை வாழ்வில் இறக்கத்தைச் சந்தித்தார். 2010-ல் சமுத்திரக்கனி இயக்கத்தில் மீண்டும் பேராளி என்ற படத்தில் நடித்தார். அந்தப் படம் தோல்வியைத் தழுவியது. இதற்கு அடுத்ததாக ஈசன் என்ற படத்தினை சமுத்திரக்கனி முக்கியக் கதாபாத்திரமாக வைத்து இயக்கினார். இந்தப்படமும் சுமாரான வெற்றியைப் பெற்றது. இதற்கு அடுத்தாக பிரம்மன் போன்ற படங்களில் நடிக்க ஒரே மாதிரியாக நடிக்கிறார் என்ற முத்திரை அவர்மேல் விழுந்தது.

ஆசையாய் மல்லிப்பூ கேட்ட மனைவி.. தோட்டத்தையே உருவாக்கிய பிரபல பாடகர்

மேலும் அவரே சற்று மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க முயற்சி செய்தாலும் இயக்குநர்களும் அதையே விரும்பியதால் ஒரே மாதிரியாக நடித்தார். அதன்பின் சுந்தர பாண்டியன், வெற்றிவேல் போன்ற படங்கள் மீண்டும் ஹிட்டாகி கை கொடுக்க அடுத்த ரவுண்டு வர ஆரம்பித்தார்.

அதன்பின் தனது குருநாதர் பாலாவின் இயக்கத்தில் இளையராஜவின் 1000வது படமான தாரை தப்பட்டை படத்தினை மீண்டும் தயாரித்தார். இந்தப் படத்தில் வரும் ஒரு காட்சிக்காக இயக்குநர் பாலா கிட்டத்தட்ட 18 நாட்கள் ஷுட்டிங் நடத்த ஒருகட்டத்தில் தயாரிப்பாளராய் பொறுமையிழந்து எப்போது இதனை முடிப்பீர்கள் என்று கேட்டிருக்கிறார். இதனால் அவர்களுக்குள் சிறு கருத்து வேறுபாடு நிலவியது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தாரை தப்பட்டை படம் சுமாரான வெற்றியையே பெற்றதால் இந்தப் படத்தின் மூலம் கடனாளி ஆனார் சசிக்குமார். இந்நிலையில் அவரின் மைத்துனர் அசோக்குமார் கந்துவட்டி தொல்லையால் தற்கொலை செய்து கொள்ள இச்சம்பவம் அவரது வாழ்வில் பேரிடியாய் விழுந்தது.

சசிக்குமாரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது. இதனால் மனம் நொந்து மதுரைக்கே சென்று விட்டார். தொடர்ந்து சென்னைப் பக்கமே வராமல் இருந்தவரை கார்த்திக் சுப்புராஜ் தனது பேட்ட படத்தின் மூலம் ரஜினியின் நண்பராக நடிக்க வைக்க மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

அதன்பின் மெல்ல மெல்ல அதிலிருந்து மீண்டு வெகு நாட்களுக்குப் பின் அயோத்தி படத்தில் நடித்தார். விளம்பரமே இல்லாமல் வந்த அயோத்தி படத்தினை முதலில் யாரும் கொண்டாடவில்லை. ஆனால் ரசிகர்கள் படத்தினைப் பற்றி பேச இந்தப் படம் சசிக்குமாரை வேறோரு தளத்தில் நிறுத்தியது. இதுவரை அவர் நடித்த படங்களிலேயே அயோத்தி மிகப்பெரும் வரவேற்பைப் பெற சசிக்குமாருக்கு புத்துணர்ச்சி கிடைக்க தற்போது மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews