வசனகார்த்தா ராசி. தங்கத்துரை மறைவு : பிரபலங்கள் இரங்கல்

பிரபலங்கள் மறைவால் அடுத்தடுத்த சோகங்களில் இருக்கும் தமிழ் சினிமா மேலும் ஒரு சோகத்தை இன்று கண்டுள்ளது. வசனகார்த்தாவும், இலக்கியவாதியுமான எழுத்தாளர் ராசீ. தங்கத்துரை உடல் நலக்குறைவால் இன்று காலமானார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, கதிர் நரசிங்கபுரத்தைச் சேர்ந்த ராசீ. தங்கத்துரை தனது பெற்றோர் மேல் கொண்ட பாசத்தால் அவர்களின் பெயருடன் தனது பெயரைச் சேர்த்து ராசீ. தங்கத்துரை என மாற்றிக் கொண்டார். பள்ளிப்படிப்பை மட்டும் முடித்த இவர் இலக்கியத்தின் மீது கொண்ட தீரா ஆர்வம் சினிமாவிலும் நுழைய வழிவகுத்தது.

அந்த வகையில் விஜய் சேதுபதியின் தயாரிப்பில் லெனின் இயக்கத்தில் உருவான மேற்குத் தொடர்ச்சி மலை படத்தில் இவர் வசனகார்த்தாவாக அறிமுகமானார். மிகவும் யதார்த்தமாக எடுக்கப்பட்ட இந்தப் படம் பல்வேறு விருதுகளையும், நல்ல விமர்சனங்களையும் பெற்றது.

இயல்பான நடையில் இருந்த வசனங்கள் இப்படத்திற்கு கூடுதல் வலு சேர்த்தது. இப்படம் மூலமாக திரையுலகை கவனிக்க வைத்தவர் தொடர்ந்து தேன் உள்ளிட்ட படங்களுக்கு வசனகார்த்தாவாக பணியாற்றினார். இப்படத்தில் முக்கிய ரோலிலும் நடித்திருந்தார்.

நீண்ட காலமாக இருதயப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த ராசீ. தங்கத்துரை இன்று காலை (நவ.13) தேனி ஆண்டிபட்டி அருகே உள்ள தனது கிராமத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 53. இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

திடீரென மாரடைப்பால் இறந்த தமிழ் சினிமா பிரபலம் : அதிர்ச்சியில் திரையுலகம்

மண்சார்ந்த கதைகளையும், வட்டார வழக்கு கதைகளையும் எழுதுவதில் வல்லவரான ராசி. தங்கத்துரை இலக்கிய உலகில் நன்கு பரிச்சயம் பெற்ற நபராக இருக்கிறார். மேற்குத் தொடர்ச்சி மலை, தேன் படங்கள் மட்டுமன்றி கெவி, தாக்கல், ஆதாரம் போன்ற படங்களுக்கும் வசனகார்த்தாவாக ராசி.தங்கத்துரை பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 200-க்கும் மேற்பட்ட கதைகளை எழுதிய ராசி.தங்கத்துரை ‘பொய்யா குலக்கொடி‘ என்ற நாவல் மூலம் எழுத்தாளர்களை கவனிக்க வைத்தவர். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

வணிக மயமாக்கல் கிராமங்களில் எப்படி நுழைகிறது என்பதை தனது யதார்த்த வசனங்களினால் மேற்குத் தொடர்ச்சி மலை படம் என்ற படம் மூலம் சொல்லி இவ்வுலக வாழ்விற்கு விடை கொடுத்துள்ளார் ராசி. தங்கத்துரை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...