காமெடி, குணச்சித்திரம்னு எந்த கேரக்டர்னாலும் அசால்ட்டு.. 20 வருடம் ஆகியும் முன்னணி இடத்தில் இருக்கும் தேவதர்ஷினி..

பொதுவாக தமிழ் திரை உலகில் காமெடி நடிகர்கள் அதிகம் இருப்பார்கள். ஆனால் காமெடி நடிகைகள் மிகவும் குறைவாக இருக்கும் நிலையில் அவர்களில் ஒருவராக தேவதர்ஷினி இருந்து வருவதுடன் காமெடி மற்றும் குணச்சித்திரம் என அனைத்து கதாபாத்திரங்களிலும் பின்னி வருகிறார். இதனால், அவரது நடிப்பால் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

நடிகை தேவதர்ஷினி சென்னையை சேர்ந்தவர். இவர் சிறு வயதிலேயே பள்ளி மற்றும் கல்லூரிகளில்  நடிப்பு பயிற்சி பெற்றதால் இவருக்கு நடிப்பதற்கான வாய்ப்பு எளிதாக கிடைத்தது. கல்லூரி படிப்பு மற்றும் முதுநிலை படிப்பு முடித்தவுடன் அவர் வேலைக்கு செல்ல வேண்டும் என்று அவரது பெற்றோர் விரும்பினார்கள். ஆனால் டிவி தொகுப்பாளராக பணியில் சேர்ந்தார் தேவதர்ஷினி.

அதன் பிறகு தூர்தர்ஷனில் சில நாடகங்களில் நடித்த அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது மர்ம தேசம் என்ற சீரியல் தான். இதனைத் தொடர்ந்து தேவதர்ஷினியை அனைத்து தரப்பினரும் ரசிக்க தொடங்கியது ரமணி vs ரமணி பாகம் 2 என்ற தொடரில் தான். இதில் அவர் ராம்ஜி ஜோடியாக நடித்திருப்பார். முழுக்க முழுக்க காமெடி அம்சம் கொண்ட இந்த தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

devadharshini1

இதையடுத்து தான் அவருக்கு திரையுலகிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான பார்த்திபன் கனவு என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலக பயணத்தை தொடங்கினார். முதல் படத்திலேயே அவருக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த காமெடி நடிகை என்ற விருது கிடைத்திருந்தது.

இதன் பின்னர் சூர்யா நடித்த காக்க காக்க, பார்த்திபன் நடித்த காதல் கிறுக்கன், ஜெயம் ரவி நடித்த மழை, சிம்பு நடித்த சரவணா உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். அவருடைய நடிப்பு மிகவும் இயல்பாக இருக்கும் என்பதால் அம்மா, அக்கா, அண்ணி மற்றும் காமெடி கேரக்டர்கள் என எது கிடைத்தாலும் பட்டையை கிளப்பி விடுவார்.

அஜித், விஜய் உள்பட பல பிரபலங்களுடன் தேவதர்ஷினி இணைந்து நடித்துள்ள சூழலில் தன்னுடன் எத்தனை பேர் நடித்தாலும் ரசிகர்களை தன் பக்கம் இழுக்கும் அளவுக்கு நடிப்பால் முத்திரையை பதித்து விடுவார் தேவதர்ஷினி. கடந்த 20 ஆண்டுகளில் அவர் ஏராளமான திரைப்படங்கள் நடித்துள்ள சூழலில் காஞ்சனா படத்தின் பல பாகங்களில் அவர் ராகவா லாரன்ஸ் மற்றும் கோவை சரளா ஆகியோருடன் இணைந்து செய்த காமெடி காட்சிகள் எவர்க்ரீன் காமெடி ஆகும்.

தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பெயர் எடுத்த தேவதர்ஷினி, பிரபல ஹிந்தி வெப் தொடரான ஃபேமிலி மேன் தொடரிலும், ஹிந்தி திரைப்படமான சபாஷ் மித்து உள்ளிட்டவற்றில் நடித்திருந்தார்.

devadharshini

நடிகை தேவதர்ஷினி கடந்த  2002 ஆம் ஆண்டு நடிகர் சேட்டன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் சேர்ந்து ஒரு சில சீரியல்களில் நடித்த நிலையில் காதல் உண்டாகி அதன்பிறகு திருமணத்தில் இணைந்தது. இவர்களின் மகள் தான் ’96’ திரைப்படத்தில் சிறுவயது தேவதர்ஷினியாக நடித்திருப்பார்.

20 ஆண்டுகளாக தொடர்ந்து பல படங்களில் அற்புதமாக நடித்து வரும் தேவதர்ஷினி அடுத்ததாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் ரகு தாத்தா என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews