கருப்பு நிறம், கவரும் நடிப்பு… அனல் பறக்கும் சண்டைக்காட்சிகள்… 90களை மிரள விட்ட கேப்டன்!

நடிப்பு, அரசியல் என இருதுறைகளிலும் ஜெயித்துக் காட்டியவர் கேப்டன் விஜயகாந்த். மனிதாபிமானத்தின் மறு உருவம், வெளிப்படைத்தன்மை இவையே விஜயகாந்தை மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழச் செய்தது.

1979ல் தமிழ்த்திரை உலகில் காலடி எடுத்து வைத்தார் கருப்பு எம்ஜிஆர் என்று செல்லமாக அழைக்கப்படும் விஜயகாந்த்.

இனிக்கும் இளமை படத்தில் அறிமுகம் ஆனார். ஆனால் பெரிய அளவில் அவருக்கு வரவேற்பு இல்லை. 2 வருடங்களாக படத்தில் நடித்துப் பார்த்தார். எதுவும் எடுபடவில்லை. அப்போது தான் அவருக்கு ஆபத்பாந்தவனாக வந்து சேர்ந்தார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். சட்டம் ஒரு இருட்டறையைக் கொடுத்தார்.

வித்தியாசமான கதைகளம். சட்டங்களில் உள்ள ஓட்டையை வைத்து தப்பி ஓடும் குற்றவாளிகளை அவர்களது பாணியிலேயே போய் பழிவாங்கும் பரபரப்பான கதை. இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர் எஸ்.ஏ.சந்திரசேகர். விஜயகாந்த் என்றால் யார் என தெரியாதவர்களுக்கும் அவரை அடையாளம் காட்டிய படம் இதுதான். இருட்டறையைக் கொடுத்து விஜயகாந்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர் தான் எஸ்.ஏ.சி.

இவரது கலர் கருப்பு. இவரது குரல் இவருக்கு பிளஸ். முரட்டு தோற்றத்துடன் கத்துவது தான் இவரது நடிப்பாக இருந்தது.

மணிவண்ணனின் இயக்கத்தில் நூறாவது நாள் படத்தில் வில்லன் அவதாரம் எடுத்தார். சுந்தரராஜனின் இயக்கத்தில் வைதேகி காத்திருந்தாள் படத்தில் பார்ப்பதற்கு முரடனாக இருந்தாலும் உள்ளத்தில் மென்மையானவராகக் காட்டப்பட்டார். அம்மன்கோவில் கிழக்காலே வந்து தாய்க்குலங்களின் கவனத்தை ஈர்த்தது.

ஊமை விழிகளில் புரட்சிகரமான நடிப்பைத் தந்து முன்னணி நடிகர்களில் ஒருவரானார். கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு தான் 90களில் இவர் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அதன்பிறகு ரஜினி, கமல் படங்களுக்கே டஃப் கொடுத்தார் விஜயகாந்த்.

Ramana
Ramana

சி சென்டர் ரசிகர்கள் அத்தனை பேரையும் எளிமையான நடிப்பின் மூலம் தன் பக்கம் ஈர்த்தார். சண்டைக்காட்சிகளில் இவரது கை பேசுவதை விட கால்கள் தான் அதிகம் பேசின. பக்கம் பக்கமாக டயலாக் கொடுத்தாலும் பிசிறு தட்டாமல் அசால்டாக பேசி அசத்தி விடுவார்.

எஸ்.ஏ.சி.யின் வேண்டுகோளுக்கு இணங்க செந்தூரப்பாண்டி படத்தில் அவரது மகன் விஜய் உடன் நடித்தார். இதனால் விஜய்க்கும் நல்ல பெயர் கிடைத்தது.

புலன்விசாரணை படத்தில் நடித்ததன்மூலம் காக்கிச்சட்டை போட்ட போலீஸ் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தினார். சின்னக்கவுண்டர், வானத்தைப்போல படங்களில் அமைதியின் சின்னமாக வருவார். ரமணாவில் முற்றிலும் மாறுபட்ட அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தினார். சேதுபதி ஐபிஎஸ், தாயகம், வல்லரசு, வாஞ்சிநாதன் படங்களில் இவரது போலீஸ் வேடம் ரசிக்கும்படியாக இருந்தன.

இவர் தமிழ் தவிர வேறு மொழிகளில் நடிக்கவில்லை. கிட்டத்தட்ட 150 படங்கள் நடித்துள்ளார். தன்னை நாடி வரும் ரசிகர்கள், அரசியல் கட்சியினர் என யாராக இருந்தாலும் சாப்பாடு கொடுத்து அவர்கள் வயிறாற சாப்பிட்டதும்தான் அனுப்புவாராம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...