என்னய்யா காசு… காசு… காசு… பணம்… பணம்…!? உலக உண்மையை பறைசாற்றிய கேப்டனின் வாழ்க்கை…!

ஒருவன் மண்ணை விட்டு மறையும் முன் அவன் வாழ்ந்ததற்கான சுவடுகளை விட்டுச் செல்ல வேண்டும். அதுவே வாழ்ந்ததற்கான அடையாளம். அப்போது தான் அவனுக்குப் பின்வரும் சந்ததியினரும் அந்த நல்லவழியைப் பின்பற்றுவர். அந்த வகையில் கேப்டன் விஜயகாந்த் அவரது சந்ததியினருக்கு மட்டுமல்லாமல் உலகிற்கே பல நல்ல வழிகளைக் காட்டிச் சென்றுள்ளார்.

வாழ்க்கையில் ஒருவன் பணம் சம்பாதிப்பதைக் காட்டிலும், நல்ல மனிதர்களை சம்பாதிப்பதே மேல் என்று கேப்டன் விஜயகாந்த் உலகிற்கு நிதர்சனமான உண்மையை உரக்கக் கூறி விட்டு இந்த மண்ணை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார். அவரது இறுதி ஊர்வலத்தில் திரண்டு வந்த மக்களே இதற்கு சாட்சி. தன்னைப் பார்க்க வரும் எவரையும் பசியோடு அனுப்ப மாட்டார்.

எப்போதும் அவரது அலுவலகத்தில் பசிப்பிணிப் போக்க அடுப்பு எரிந்துகொண்டே இருக்குமாம். சாதாரண நடுத்தர வர்க்கத்தில் கருப்பு நிறத்தில் பிறந்த விஜயராஜ் எப்படி வாழ்வில் முன்னேறினார் என்பதை இப்போது பார்ப்போம்.

கேப்டன் விஜயகாந்த், புரட்சிக்கலைஞர் என மக்களால் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் அடிமட்டத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னுக்கு வந்தவர். சாதாரண ரைஸ்மில் முதலாளியின் மகன் விஜயராஜ்… எம்ஜிஆரின் நடிப்பால் ஈர்க்கப்பட்டு சினிமா உலகுக்குள் நுழைந்தார்.

captain
captain

கருப்பு என்ற ஒரே காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டு, அவமானங்களை சந்தித்த கேப்டன், பின்னாளில் அதையே சவாலாகக் கொண்டு உத்வேகத்துடன் சினிமாவில் முன்னேறிக் காட்டினார். சினிமாவுக்காக விஜயகாந்த் என்ற பெயரை வைத்தார் அவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் காஜா.

கேப்டனின் முதல்படம் இனிக்கும் இளமை. மக்கள் மத்தியில் அவருக்கு பெரும் வரவேற்பைத் தந்த படம் தூரத்து இடி முழக்கம். அதன்பின் மெல்ல மெல்ல சட்டம் ஒரு இருட்டறை, சிவப்பு மல்லி, அலை ஓசை ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் என பட்டி தொட்டி எங்கும் இவர் புகழ் பரவத் தொடங்கியது.

ரொம்பவே யதார்த்தமாகவும், எளிமையாகவும் நடிக்கும் இவரைப் பார்த்தால் பக்கத்து வீட்டுக்கார பையன் போல இருந்ததால் தாய்மார்கள் அனைவரும் இவரை உச்சிமுகர்ந்து வரவேற்றனர். எந்த நடிகருக்கும் இல்லாத பெருமை இவருக்கு உண்டு. தனது 100வது படமான கேப்டன் பிரபாகரன் இவருக்கு மட்டுமே 200 நாள்களைக் கடந்து ஓடி வெற்றிவாகை சூடியது.

அதே போல இவர் தமிழைத் தவிர எந்த மொழிப்படங்களிலும் நடித்தது இல்லை. சத்ரியன், பரதன், வாஞ்சிநாதன், ரமணா என ஆக்ஷன் படங்களில் நடித்து அசத்தினார். சண்டைக்காட்சிகள் செம மாஸானவை. இவர் வானத்தைப் போல, சின்னக்கவுண்டர், சொக்கத்தங்கம் என குடும்பப்பாங்கான கதை அம்சம் கொண்ட படங்களிலும் நடித்து அசத்தினார்.

இதையும் படிங்க… தளபதி விஜயை தவறாக புரிந்து கொண்டு அதிரடியாக தாக்கிய விஜயகாந்த் ரசிகர்கள்! ஆனால் உண்மை அதுவல்ல?

80 மற்றும் 90 களில் கமல், ரஜினி படங்களுக்கே இவர் நடித்த படங்கள் டஃப் கொடுத்தன. படங்களில் இவர் பேசும் வீர வசனங்கள் சிங்கம் கர்ஜிப்பதைப் போல கம்பீரமாக இருக்கும். சிவாஜிக்கு அடுத்தபடியாக நீண்ட வசனங்களை அசால்டாகப் பேசி அசத்துவார் கேப்டன். அதே போல் வசன உச்சரிப்பில் இவரை மிஞ்ச ஆள் இல்லை. சினிமா, அரசியல் என இரண்டிலும் சாதித்துக் காட்டினார் கேப்டன். இவர் ஒருமுறை மேடைப் பேச்சொன்றில் பேசும்போது இவர் பேசிய வார்த்தைகள் அனைத்தும் உலகிற்கு இவர் விட்டுச் சென்ற போதனைகள் என்றே சொல்லலாம்.

எடுத்துக்கய்யா… எனக்கு தேவையில்ல… மக்கள் கொடுத்ததை எடுத்தா எடுத்துட்டுப் போய்யா… எனக்குத் தேவையில்ல. எனக்குன்னு ஏதோ ஒரு இடம் கொடுப்பேல்ல… அது இருக்கும்ல… என் மனைவிக்குன்னு சட்டத்துல ஒரு இடம் இருக்கும்ல… என் புள்ளைக்குன்னு இத்தனை இடம்னு இருக்கும்ல… அது கெடைச்சா போதும்…

இங்க இவ்ளோ பேரு இருக்க… நாலு பேருக்கு ஒருவேளை சோறு போட மாட்டேளா… அதுவே போதும். முடிஞ்சிரும்… இத்தனை பேரு வீட்டுக்கு நான் போயிட்டு வர்றதுக்குள்ள முடிஞ்சிரும்… என்னய்யா காசு… காசு… காசு… பணம்… பணம்…!? அட போங்கய்யா… நீங்களும் உங்க பணமும்…. என்னய்யா கோடி கோடியா சேர்த்து வச்சி எங்கய்யா கொண்டு போகப்போறீங்க…? செத்தா கூட அருணாக்கொடியை அறுத்துவிட்டுட்டுத் தான் உள்ளே தூக்கிக் கொண்டு போய் புதைக்கிறான்… காசே கிடையாது. ஒண்ணும் கிடையாது…

கேப்டன் விஜயகாந்த் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் கடந்த 28.12.2023 அன்று காலமானார். தொடர்ந்து மறுநாள் இவரது உடல் நல்லடக்கம் ஆனது. இவரது பூத உடல் நம்மை விட்டு மறைந்தாலும் அவரது சத்தியமான இந்த வார்த்தைகள் என்றுமே அழியாது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews