விஜயகாந்துடன் இணைந்து நிறைய படங்கள் நடித்தவர்.. 60 வருடங்கள் தமிழ் சினிமாவையே ஆண்ட நடிகர்..

தமிழ் திரை உலகில் பலர் தொடர்ந்து பல ஆண்டுகளாக சிறப்பாக நடித்து வந்தாலும் அதற்கான பெயரும் புகழும் கிடைக்காமல் இருப்பார்கள். அந்த வகையில், அதிகம் பேரால் கவனிக்கப்படாத ஒரு நடிகர் தான் பீலிசிவம். கிட்டத்தட்ட 60 வருடங்கள் நடித்த நடிகர் பீலிசிவம், நாடகம், திரையுலகம், தொலைக்காட்சி தொடர் என அனைத்திலும் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.

தன்னுடைய 18 ஆம் வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய பீலிசிவம், சோவின் ’முகமது பின் துக்ளக்’ உள்பட பல நாடகங்களில் நடித்து இதன் மூலம் திரையுலகிலும் அறிமுகமாகி இருந்தார். விஜயகாந்த் நடித்த ’தூரத்து இடிமுழக்கம்’ என்ற திரைப்படத்தில் இவர் தான் கிட்டத்தட்ட நாயகனாகவே நடித்தார். அதன் பின்னர் எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி உட்பட பல பிரபலங்களுடன் இவர் இணைந்து நடித்துள்ள சூழலில் இவர் பெரும்பாலும் குணச்சித்திரம் மற்றும் வில்லன் கேரக்டர்களை தேர்வு செய்து தான் நடித்து வந்தார்.

beelisivam1

குறிப்பாக விஜயகாந்தின் பல படங்களில் நடித்த நிலையில் அந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. கேப்டன் பிரபாகரன், நெஞ்சிலே துணிவிருந்தால், பெரிய மருது உட்பட சில படங்களில் நடித்திருந்தார். அதே போல் விஜயகாந்த் நடித்து இயக்கிய விருதகிரி என்ற திரைப்படத்தில் விஜயகாந்தின் தந்தையாகவும் பீலிசிவம் நடித்திருப்பார்.

கடந்த 1970 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடித்த எதிரொலி என்ற திரைப்படத்தில் டாக்டர் கேரக்டரில் அறிமுகமானார். அதன் பின் முகமது பின் துக்ளக், நேற்று இன்று நாளை, சிரித்து வாழ வேண்டும், நினைத்ததை முடிப்பவன், இதயக்கனி, நாளை நமதே, நீதிக்கு தலைவணங்கு என வரிசையாக எம்.ஜி.ஆரின் படங்களில் நடித்தார்.

கடந்த 1980கள் மற்றும் 90களில் இவர் ஏராளமான படங்களில் நடித்தார். 2000ஆம் ஆண்டுகளில் வயது முதிர்வு காரணமாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இருப்பினும் வல்லரசு, ஏழுமலை, தருமபுரி  உள்ளிட்ட படங்களில் நடித்தார். 2010 ஆம் ஆண்டு விஜயகாந்தின் தந்தையாக விருதகிரி என்ற படத்தில் நடித்த நிலையில் அந்த படமே அவரது கடைசி படமாக அமைந்தது.

beelisivam2

திரை உலகில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் பீலிசிவம் தனது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.  ஒரு பெண்ணின் காதல்,  கனா காணும் காலங்கள், பாசம், திருமதி செல்வம், உறவுகள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

திரையுலகில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு 1995 ஆம் ஆண்டு தமிழக அரசு சிறந்த நடிகருக்கான விருதை அளித்தது.  மேலும்  தமிழக அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது, கலைமாமணி விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி வயது முதிர்வு காரணமாக பீலிசிவம் காலமானார்.  தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து நடிப்பில் முத்திரை பதித்த பீலிசிவம் படங்கள் இன்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போது ரசிகர்கள் ரசிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...