எம்ஜிஆரிடம் அறிஞர் அண்ணா சொல்ல நினைத்த செய்தி.. கடைசி வரை தெரியாமலே போன சோகம்.. ஒரு மர்ம பக்கம்..

தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் ஹீரோக்கள் புதிதாக உருவாகிக் கொண்டிருந்தாலும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தொட்ட உயரத்தை எந்த நடிகராலும் இனி தொட்டுவிட முடியாது என்று தான் சொல்ல வேண்டும். சிறந்த நடிகராக மட்டுமே இருக்காமல் அதன் பின்னர் தனக்கு கிடைத்த புகழை வைத்து அரசியலிலும் ஒரு என்ட்ரி கொடுத்தார் எம்ஜிஆர். மெல்ல மெல்ல தன்னை முன்னிறுத்தி தமிழகத்தின் முதலமைச்சராகவும் பலமுறை பொறுப்பேற்ற எம் ஜி ஆர், கடைக்கோடி மக்கள் வரை உற்ற நண்பன் போல பழகி வந்தார்.

அது மட்டுமல்லாமல் அவர் தமிழக மக்களுக்காக கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் அனைவரையும் பயனடைய செய்ததுடன் பலரும் தங்களின் வாழும் தெய்வமாக எம்ஜிஆரை பார்த்திருந்தனர். அப்படி ஒரு சிறந்த வாழ்க்கை வாழ்ந்த எம்ஜிஆர், கடந்த 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி அன்று மறைந்தார். இந்த நிலையில் அவரிடம் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா சொல்ல நினைத்த செய்தி பற்றிய தகவல் ஒன்று பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அறிஞர் அண்ணா முதல்வராக இருந்த சமயத்தில் அவருடன் சகோதரன் போல இருந்தவர் எம்ஜிஆர். அப்படி இருக்கையில் அண்ணாவுக்கும் எம்ஜிஆருக்கும் இடையே ஒரு முறை நடந்த சந்திப்பு என்பது மறக்க முடியாத சந்திப்பாக அமைந்திருந்தது. அண்ணாவுக்கு உடல்நிலை சரியில்லாமல், புற்றுநோய் காரணமாக அவர் அவதிப்பட, அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. முதலில் சென்னையில் இருந்து மும்பைக்கும், பின்னர் அங்கிருந்து அமெரிக்காவிற்கும் விமானத்தில் செல்ல திட்டம் போட்டிருந்தது.

தொடர்ந்து மும்பையிலிருந்த அறிஞர் அண்ணாவை பார்க்க வேண்டாம் என்றும் அவரை பார்த்தால் அவர் முன்பே கண்ணீர் விட்டு கதறி விடுவோம் என்றும் நினைத்த எம்ஜிஆர், பின்னர் மனம் மாறி மும்பைக்கு கிளம்பிச் சென்றார். அப்போது அண்ணாவுடன் நிறைய நேரம் செலவிடும் வாய்ப்பு எம்ஜிஆருக்கு கிடைத்தது.

அந்த சமயத்தில் அமெரிக்காவுக்கு புறப்படுவதற்கு முன்பாக ஒரு புத்தகத்தின் அட்டையை கிழித்து எம்.ஜி.ஆர். கையில் கொடுத்தார் அறிஞர் அண்ணா. இது பற்றி எம்ஜிஆர் கேட்க, அதற்கு பதில் சொன்ன அண்ணா, இதை நீ கையில் வைத்துக்கொள் என்றும் ஒருநாள் நேரம் வரும் போது கண்டிப்பாக இதற்கான காரணம் என்ன என்று கூறுகிறேன் என்றும் தெரிவித்தார்.

அவர் வாக்கை கேட்டு அந்த அட்டையை பத்திரப்படுத்தி எம்ஜிஆர் வைத்திருந்தார். இருந்த போதும் எதற்காக அந்த அட்டையை அறிஞர் அண்ணா கொடுத்தார் என்பதும் அவர் எந்த செய்தியை சொல்ல நினைத்தார் என்பதும் கடைசி வரை ஒரு புரியாத புதிராகவே இருந்து முடிந்து விட்டது என்பது கூடுதல் தகவல்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews