கோலி, பாஃப் இல்ல.. ஆர்சிபி பிளே ஆப் போக காரணமா இருந்ததே தினேஷ் கார்த்திக் தான்.. எப்படி தெரியுமா..

நடப்பு சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டிருந்த நிலையில், அதனையே ஏதோ ஐபிஎல் ஃபைனல்ஸ் வென்றது போல அந்த அணியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்கு காரணம், லீக் சுற்றின் முதல் பாதி போட்டிகள் முடிவடைந்த போது அவர்கள் ஒரு போட்டியை மட்டும் தான் வென்றிருந்தனர்.

முதல் 8 போட்டிகள் ஆடி முடித்திருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்ததால் பல போட்டிகளாக தொடர்ந்து கடைசி இடத்தில் தான் இருந்து வந்தது. அப்படி இருக்கையில் தான் அடுத்த 6 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி கண்டு தற்போது பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

அதிலும் சென்னை அணிக்கு எதிராக பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த கடைசி லீக் போட்டியில், தாங்கள் அடிக்கும் ரன்களை விட 18 ரன்கள் குறைவாக சிஎஸ்கேவை மடக்க வேண்டும் என்ற நிலை தான் ஆர்சிபிக்கு இருந்து வந்தது. கொஞ்சம் சிரமமான விஷயமாக இருந்த நிலையில், சிஎஸ்கேவுக்கு எதிராக பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் மிரட்டிய ஆர்சிபி, அபார வெற்றியை ருசித்திருந்தது.

முதலில் பேட்டிங் செய்து 218 ரன்கள் எடுத்த ஆர்சிபி அணி, பந்து வீச்சில் மிக அபாரமாக செயல்பட்டிருந்தது. ரச்சின் ரவீந்திரா, ரவீந்திர ஜடேஜா மற்றும் தோனி ஆகியோர் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தாலும் மற்ற வீரர்கள் நல்ல பங்களிப்பை அளிக்காததால் சிஎஸ்கேவால் 191 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், ஆர்சிபி அணி வெற்றி பெற்றதுடன் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான ரன் ரேட்டையும் பெற்று பட்டையை கிளப்பினர்.

ஐபிஎல் வரலாற்றிலேயே மிகச் சிறந்த கம்பேக்காக ஆர்சிபியின் தொடர்ச்சியான 6 வெற்றிகள், பலரையும் மலைக்க வைத்துள்ளது. இந்த நிலையில், சிஎஸ்கே அணிக்காக ஆர்சிபி வெற்றி பெற்றதால் தான் பிளே ஆப் முன்னேறியதாக அனைவரும் கூறி வரும் நிலையில், இதன் பின்னால் தினேஷ் கார்த்திக் இருப்பது தான் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

இந்த சீசனிலே 250 ரன்களுக்கு மேல் 3 முறை குவித்து அனைவரையும் அசர வைத்திருந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். அதிலும், ஆர்சிபி அணிக்கு எதிராக 287 ரன்கள் குவித்து ஐபிஎல் தொடரின் அதிகபட்ச ஸ்கோரையும் பதிவு செய்திருந்தனர். கடின இலக்கை நோக்கி ஆடிய ஆர்சிபியில், தினேஷ் கார்த்திக் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டி 35 பந்துகளில் 83 ரன்கள் அடித்ததுடன் 262 ரன்களை எட்டவும் உதவி இருந்தார்.

287 ரன்களையே 25 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி தோற்றதால் அவர்களின் ரன் ரேட்டும் மிக சிறப்பாக அமைந்திருந்தது. இதனால், இன்று ரன் ரேட் வித்தியாசத்தில் ஆர்சிபி பிளே ஆப் முன்னேற முக்கிய காரணமாக தினேஷ் கார்த்திக் இன்னிங்ஸ் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews