அஜித் இந்த படத்திற்கு சரிவர மாட்டார்… முன்பே கணித்த லிங்குசாமி!

லிங்குசாமி தமிழில் ஒரு முக்கியமான இயக்குனர். அவருக்கு  சினிமா மீது ஆசை ஏற்பட காரணமாக இருந்தவர்கள் இருவர். அவர்களில் ஒருவர் திரைக்கதை ஜாம்பவான் பாக்கியராஜ், மற்றொருவர் ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த்.

இயக்குனர் பாக்கியராஜின் கதை நேர்த்தியும், மணிரத்தினத்தின் கிளாசிக் ஸ்டைலையும் தன்னுடைய பாணியாக வைத்து படம் இயக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்திருக்கிறார் லிங்குசாமி.

பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக சேர்ந்து விடலாம் என்று சென்னை வந்து முயற்சித்திருக்கிறார். இருப்பினும், அவரிடம் இணைந்து பணிபுரியும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவே இல்லை.

அதை தொடர்ந்து கதையும் எழுதிக் கொண்டே இருந்திருக்கிறார். தன்னிடம் இருக்கும் கதையை பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறார்.

அப்போது, ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றும் வாய்ப்பினை பெற்றிருக்கிறார். விக்ரமனின் உதவி இயக்குனராக பணியாற்றினாலும், தன்னால் படம் இயக்க முடியவில்லையே என்ற தவிப்பு லிங்குசாமிக்கு தொடர்ந்து இருந்து கொண்டே இருந்திருக்கிறது.

அந்த சமயத்தில், தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியிடம் கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. லிங்குசாமி அப்படி அவருக்கு கிடைத்த வாய்ப்பினை தவற விடாமல், கதை சொல்லி தயாரிப்பாளரை அசத்தி இருக்கிறார். 4 சகோதரர்களை பற்றிய கதைக்களம், போதுமான சென்டிமெண்ட் அம்சங்களோடு படம் உருவானது. மம்முட்டி, முரளி, அப்பாஸ், சியாம் கணேஷ், தேவையானி, ரம்பா, சினேகா நடித்திருந்த அந்தப்படம் ‘ஆனந்தம்’.

முதல் படமே மாபெரும் வெற்றிப்படமாக லிங்குசாமிக்கு அமைந்தது. அடுத்த வருடமே அவர் இயக்கிய ‘ரன்’ படம் வெளியானது. முதல் படம் முழுவதும் குடும்பத்தை மட்டுமே மையமாக கொண்டது. இரண்டாவது படமான ‘ரன்’ காதல், ரவுடி கும்பல் என முற்றிலும் மாறுபட்ட அம்சங்களை கொண்டது. லிங்குசாமி அந்தப் படத்தின் மூலம் புகழின் உச்சியினை அடைந்தார்.

மாதவன், மீரா ஜாஸ்மின் காம்போ இந்த படத்திற்கு நல்ல பிளஸ்ஸாக அமைந்தது. மீண்டும் மாதவனுடன் இணைந்து, அரசியல் பின்னணி கதையை படமாக்கலாம் என திட்டமிட்டார் லிங்குசாமி.

மாதவன் உடல் இளைத்து விட்டால், கல்லூரி மாணவர் போலவே இந்த படத்திற்கு மிகவும் பொருத்தமாக இருப்பார் என நினைத்து மாதவனை அணுகி இருக்கிறார். மாதவன் கதையில் சில மாற்றங்களை விரும்பி இருக்கிறார்.

அது சரிவராததால், லிங்குசாமி நீண்ட நாட்களாக காத்திருந்திருக்கிறார். பின் ‘நிக் ஆர்ட்ஸ்’ சக்கரவர்த்தி, ‘தன்னிடம் அஜித்தின் கால்ஷீட் உள்ளது. அவரை வைத்து இந்த கதையை பண்ணுங்கள்’ என கூறியிருக்கிறார். படத்தின் தயாரிப்பாளரின் தூண்டுதலால், அஜித்தை அணுகியிருக்கிறார்.

அவரும் சரி என சொல்ல படப்பிடிப்பு துவங்கி இருக்கிறது. ஆனாலும், அஜித்தின் தோற்றம் கல்லூரி மாணவர் போல இல்லை என யோசித்து கொண்டே இருந்திருக்கிறார் லிங்குசாமி. படமும் சில காரணங்களால், இடையூறுகளுக்கு மத்தியில் படமாக்கப்பட்டு, சற்று கால தாமதமாகியே திரைக்கு வந்தது. ‘ஜி’ எனும் அப்படம் தோல்வியையே சந்தித்தது.

தனக்கு சரிவரவில்லை என்று தோன்றிய பின் படத்தை தொடர்ந்திருக்கக் கூடாது என்பது தாமதித்தே தனக்கு புரிந்ததாக லிங்குசாமி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். அதன் பின் ‘சண்டைக் கோழி’ மீண்டும் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. ‘பீமா’ படம் நெகடிவ் விமர்சனத்தை பெற்றது. ‘பையா’ கார்த்தி, தமன்னா நடிப்பில் சூப்பர் ஹிட்டானது.

the warrior

சண்டைக் கோழி படத்தின் 2 பாகம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. ‘தி வாரியர்’ எனும் தெலுங்கு படத்தை இயக்கினார் லிங்குசாமி. அதன்பின் தமிழ் படங்கள் எதுவும் இயக்கவில்லை. நல்ல படங்களை இயக்கிய லிங்குசாமி மீண்டும் ரன், சண்டைக் கோழி மாதிரியான மாஸ் படங்களை கொடுப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...