பாரதிராஜா படத்தில் அறிமுகம்.. ரஜினி, கமலுக்கு ஜோடியாக பல படங்கள்.. ஹிந்தியில் ஒரு ரவுண்டு வந்த நடிகை..

புதிய வார்ப்புகள் என்ற திரைப்படத்தின் மூலம் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகை ஒருவர் அதன் பிறகு பல படங்களில் கமல்ஹாசன், ரஜினி உட்பட பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இந்தியிலும் பிரபல நடிகையாக பல ஆண்டுகள் இருந்தார். பாக்யராஜ் கதாநாயகனாக நடித்த புதிய வார்ப்புகள் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை தான் ரதி. பாரதிராஜா இயக்கத்தில் உருவான இந்த படம் கடந்த 1979 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் பாரதிராஜா இயக்கத்தில் உருவான ’நிறம் மாறாத பூக்கள்’ என்ற படத்தில் சுதாகர், ராதிகாவுடன் ரதி முக்கிய வேடத்தில் நடித்தார். இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்திருந்தது. ரதி நடித்த முதல் இரண்டு படங்கள் எதிர்பார்த்ததை விட வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு தமிழ் திரை உலகில் வாய்ப்புகள் குவிந்தது. உலக நாயகன் கமல்ஹாசனுடன் ’உல்லாச பறவைகள்’ என்ற படத்தில் நடித்தார். இந்த படம் பாடல்களுக்காகவே ஓடியதுடன் ரதியின் நடிப்பும் அருமையாக இருந்தது.

கமல்ஹாசனுடன் நடித்த ரதி அடுத்த படத்திலேயே ரஜினியுடன் நடித்தார். அந்த படம் தான் முரட்டுக்காளை. இந்த படத்தில் ரதி, கண்ணம்மா என்ற கேரக்டரில் நடித்தார். அதன் பிறகு ரஜினியுடன் மீண்டும் ‘அன்புக்கு நான் அடிமை’ என்ற படத்திலும் நடித்தார்.  அப்படி இருக்கையில், ரஜினியுடன் கழுகு படத்தில் மீண்டும் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பும் ரதிக்கு கிடைத்திருந்தது.

கமல்ஹாசன் நடிப்பில் பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான பாலிவுட் திரைப்படமான ’ஏக் துஜே கே லியே’ என்ற படத்தில் ரதி கதாநாயகியாக நடித்தார்.  இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதன் காரணமாக தொடர்ச்சியாக அவருக்கு ஹிந்தியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழில் முன்னணி நடிகையாக பெயர் எடுத்த ரதி, ஹிந்தியிலும் ஒரு ரவுண்டு வந்தார்.

இந்தியில் பிசியானதால் தமிழ், தெலுங்கு திரை உலகை கிட்டத்தட்ட அவர் மறந்து விட்டார் என்று சொல்லலாம். இதனையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் மஜ்னு என்ற திரைப்படத்தில் அம்மா கேரக்டரில் ரதி மீண்டும் ரீ என்ட்ரி ஆனார். ஆனாலும் அதன் பின்னரும் அவர் ஹிந்தியில் தான் கவனம் செலுத்தினார். இந்தி திரையுலகில் அவர்  கிட்டத்தட்ட 20 வருடங்கள் பிரபல நடிகையாக இருந்தார்.

நடிகை ரதி கடந்த 1985 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபர் அனில் விர்வானி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 1986 ஆம் ஆண்டு ஒரு மகன் பிறந்தார். ரதியின் மகனும் தற்போது இந்தி திரையுலகில் நடிகராக உள்ளார். இதனிடையே, நடிகை ரதி தனது கணவரை 2015 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார்.

தற்போது 62 வயதாகும் நடிகை ரதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நடித்துக் கொண்டிருந்தார். அவர் கடைசியாக நடித்தது  என்டிஆர் பாலகிருஷ்ணன் நடித்த டிக்டேட்டர் என்ற படத்தில் தான். இந்த படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை ரதி திரை உலகில் மட்டுமின்றி ஒரு சில ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.