ரஷ்ய மொழி படத்தில் நடித்த முதல் தென் இந்திய நாயகி.. ஆனா எம்ஜிஆர் கூட நடிச்ச படம் இவ்ளோ தான்!

சிவாஜி, எம்ஜிஆர் ஆகியோர் நடிகர்களாக பிரபலமான சமயத்தில் அவர்களுடன் பல படங்களில் இணைந்து நாயகியாக நடித்தவர் பத்மினி. தமிழ் சினிமாவின் சிறந்த கதாநாயகிகளில் ஒருவராக இருந்த பத்மினி, திருவனந்தபுரத்தை சேர்ந்தவர். இவரது இரண்டு சகோதரிகளும் கூட திரைப்படத்தில் நடிகைகளாக வலம் வந்தவர்கள் தான். இவர்கள் மூவரையும் சேர்த்து ‘திருவாங்கூர் சகோதரிகள்’ என்றும் குறிப்பிடுவார்கள்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகை பத்மினி, சிவாஜியுடன் நடித்த அளவுக்கு எம்ஜிஆருடன் இணைந்து அவர் நடித்ததில்லை. சிவாஜியுடன் சுமார் 54 படங்கள் வரை இணைந்து நடித்துள்ள பத்மினி, எம்ஜிஆருடன் 12 படங்களில் மட்டுமே இணைந்து நடித்துள்ளார். பிரபலமான நடிகையாக வலம் வந்த போதும் எம்ஜியாருடன் ஏன் நிறைய படங்களில் இணைந்து நடிக்க முடியவில்லை என்பது ஒரு புரியாத புதிராகவே உள்ளது.

நடிகர் எம்ஜிஆரின் திரைப்பட பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்த ‘மதுரை வீரன்’ திரைப்படத்தில், பத்மினி நாயகியாக நடித்திருந்தார். எம்ஜிஆருடன் பத்மினி இணைந்து நடித்த முதல் படமும் இது தான். மதுரை வீரன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி கண்டதுடன் அடுத்தடுத்து சில படங்களில் எம்ஜிஆருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பும் பத்மினிக்கு கிடைத்திருந்தது. ஆனால் அப்படி இருந்தும் மிக குறைந்த படங்களில் மட்டுமே அவருடன் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

அப்படி இருக்கையில், மற்ற எந்த தென் இந்திய நடிகைகளுக்கும் இல்லாத ஒரு சிறப்பு பத்மினிக்கு உள்ளது. பத்மினி ஹிந்தியில் நடித்து மிகப் பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பர்தேசி. இந்த திரைப்படம் ரஷ்ய மொழியில் வெளியான படத்தின் டப்பிங் ஆகும். ஒரு முறை ரஷ்யாவுக்கு பத்மினி சென்ற சமயத்தில் ஹிந்தி நடிகர் ராஜ் கபூரை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் தான், ரஷ்ய மொழி திரைபபடத்தில் நடிக்கும் வாய்ப்பு பத்மினிக்கு கிடைத்தது.

இந்த படத்தின் மூலம் ராஜ் கபூர் மற்றும் பத்மினி ஆகியோர், ரஷ்ய நாட்டில் பெரும் புகழ் பெற்று விளங்கினார்கள். அந்த படத்தில் வரும் ராஜ் கபூர் மற்றும் பத்மினி கதாபாத்திரத்தின் பெயரை பல குழந்தைகளுக்கு ரஷ்ய நாட்டில் வைத்ததாக தகவல் தெரிவிக்கின்றது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews