நடுரோட்டில் ஆதரவற்று உயிரை விட்ட நடிகர்.. சின்னத்தம்பியில் கவனம் ஈர்த்தும் ஒரே காரணத்தால் பறிபோன வாழ்க்கை..

தமிழ் திரையுலகில் சிறந்த படங்கள் என்ற பட்டியலை போட்டால், அதில் நிச்சயம் இடம்பெறும் ஒரு திரைப்படம் தான் சின்னத்தம்பி. அனைத்து தரப்பிலான ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருந்த சின்னத்தம்பி திரைப்படத்தை பி. வாசு இயக்கி இருந்தார். 200 நாட்களுக்கு மேல் ஓடியிருந்த இந்த திரைப்படத்தில் பிரபு, குஷ்பு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இதில், குஷ்புவின் ஒரு அண்ணனாக நடித்திருந்தவர் தான் உதய பிரகாஷ். இவருக்கு தமிழ் திரைப்படங்களில் அதிக வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருந்த நிலையிலும் அவர் செய்த ஒரே ஒரு காரியத்தால் அவர் வாழ்க்கையே பறிபோனது.

நடிகர் உதய பிரகாஷ் 1964 ஆம் ஆண்டு ஊட்டியில் பிறந்தார். அவரது தந்தை ஒரு கண்டிப்பான ராணுவ அதிகாரி. ஊட்டியில் பள்ளி படிப்பை முடித்த அவர் அதன் பிறகு வேலூரில் கல்லூரி படிப்பை முடித்தார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு கலை ஆர்வம் மட்டுமின்றி விளையாட்டிலும் ஆர்வம் இருந்தது. வேலூர் கால்பந்து குழுவின் கேப்டனாகவும் அவர் இருந்துள்ளார்.

இந்த நிலையில் கலை ஆர்வம் அதிகமாகவே, நடிப்பதற்காக சென்னை வந்தார். பெற்றோரின் எதிர்ப்பை மீறி அவர் சென்னை வந்து வாய்ப்புகள் தேடிக் கொண்டிருந்த நிலையில் தான் அவருக்கு ’வருஷம் 16’ என்ற திரைப்படத்தில் வில்லனின் நண்பர்களில் ஒருவராக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த படம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்த நிலையில் விஜயசாந்தி நடித்த ’வைஜயந்தி ஐபிஎஸ்’ என்ற திரைப்படத்தில் வில்லனின் மகனாக நடித்தார். இந்த படம் மேலும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்க உதவி இருந்தது.

அதன் பிறகு அவர் தொடர்ச்சியாக பல படங்களில் வில்லனாக நடித்தார். புது புது ராகங்கள், சின்னதம்பி, கிழக்குக்கரை, மன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சரத்குமாரின் பேண்ட் மாஸ்டர், கார்த்திக் நடித்த சின்ன ஜமீன் போன்ற படங்களில் அவர் வில்லன் மற்றும் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்தார்.

மேலும் மேட்டுக்குடி, மிஸ்டர் ரோமியோ, அரசியல், பெரிய தம்பி, புதையல், தடயம் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருந்த போது தான் அவருக்கு திடீரென மதுப்பழக்கம் ஆரம்பமானது. அதன் காரணமாக அவர் தனக்கு வந்த வாய்ப்புகளை எல்லாம் இழக்கவும் நேர்ந்தது.

ஒரு கட்டத்தில் திரையுலகிலிருந்து ஒதுக்கப்பட்ட அவர் வறுமையில் வாடிய போது தான் சரத்குமார் அவரை மீண்டும் தான் நடித்த திவான் என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். இதனை அடுத்து காதல் கிறுக்கன், ஜெய் சூர்யா உள்ளிட்ட படங்களில் நடித்த நிலையில் மது பழக்கம் காரணமாக அவரது உடல்நிலை மிகவும் மோசமானது.

இதையடுத்து பி. வாசு உள்ளிட்ட திரையுலகினர் அவரை மருத்துவமனையில் சேர்த்து மதுப்பழக்கத்திலிருந்து விடுபட முயற்சித்தனர். ஆனால் சிகிச்சையில் இருந்த போதே அவர் திடீரென மருத்துவமனையில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியே சென்று குடித்தார். அப்போது அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி நடுரோட்டில் இறந்து கிடந்தார்.

அவரது உடலை பி வாசு மற்றும் நெப்போலியன் ஆகிய இருவர் தான் அவரது சொந்த ஊரான ஊட்டிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர். கண்டிப்பான ராணுவ அதிகாரியின் மகனாக இருந்து, திரையுலகில் ஜெயிக்க வேண்டும் என்ற கனவுடன் சென்னை வந்து ஓரளவு ஜெயித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென மதுப்பழக்கம் காரணமாக நடிகர் உதய பிரகாஷ் 40 வயதில் உயிரிழந்தது அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி திரை உலகினர்களுக்கும் பெரும் சோகமாக இருந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews