பணக்கார வீட்டு பிள்ளை.. சினிமாவில் சாதிக்க ஹோட்டலில் வேலை பார்த்த நாயகன்.. டி. ஆர் கொடுத்த வாழ்க்கை!

பலரும் சினிமா வாய்ப்பு தேடி சென்னை வரும் சூழலில் தங்களுக்கு கிடைக்கும் வேலைகளை செய்து கொண்டே திறமைக்கான வாய்ப்புகளையும் தேடி கொண்டிருப்பார்கள். எந்த வேலையாக இருந்தாலுமே வருமானம் வருவதை மட்டுமே நோக்கமாக கொண்டு மிகவும் கடினமாக உழைத்து சினிமாவில் சாதித்த ஆட்களும் நிறைய பேர் உள்ளனர்.

அந்த வகையில் முக்கியமான ஒருவர் தான் நடிகர் ராஜீவ். இவர் நாயகனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பல படங்களில் தோன்றி உள்ளார். ராஜீவ் ஒரு நல்ல பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால் அவருக்கு படிப்பில் மீது நாட்டம் இல்லை, நடிக்க வேண்டும் என்று தான் சிறுவயதிலிருந்தே ஆசை. அதே வேளையில், அவரது பெற்றோர்கள் நடிக்க போக கூடாது என்று கூறினர். ஆனால் அதையும் மீறி அவர் நடிப்பு பயிற்சி கல்லூரியில் சேர்வதற்காக சென்னை வந்தார்.

பாலச்சந்தர் உட்பட பல முன்னணி இயக்குனர்கள் அவரை இன்டர்வியூ எடுத்தனர். இவ்வளவு நன்றாக படிக்கிறாய், நல்ல பணக்கார குடும்பத்தில் பிறந்த நீ ஏன் நடிக்க வந்தாய் என்று கேட்க நான் நடிப்பில் சாதிக்க வேண்டும் என்று கூறினார். இதனிடையே நடிப்பு பயிற்சி கல்லூரியில் அவருக்கு இடம் கிடைக்காமல் போனது. அதனால், ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டே நடிக்க முயற்சித்தார் ராஜீவ். அப்போதுதான் ஒருமுறை அவர் தற்செயலாக ரவீந்தரை சந்தித்த நிலையில் அவருக்கு டப்பிங் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘ஒருதலை ராகம்’ படத்தில் ரவீந்தருக்கு ராஜீவ் தான் டப்பிங் கொடுத்தார்.

இதனை அடுத்து டி ராஜேந்தர் இயக்கிய வசந்த அழைப்புகள் என்ற படத்தில் மீண்டும் ரவீந்தருக்கு டப்பிங் பேச அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் தான் டி ராஜேந்தர் இயக்கத்தில் உருவான ’ரயில் பயணங்களில்’ என்ற திரைப்படத்தில் ராஜீவுக்கு ஒரு முக்கிய கேரக்டரை கொடுத்தார்.

இந்த படத்தில் ராஜீவ் மிகவும் சிறப்பாக நடித்ததையடுத்து அவருக்கு ஏராளமான படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக ’பாலைவனச் சோலை’ ராஜீவ் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்திய ஒரு படம். அதன் பிறகு ’நாடோடி ராஜா’ ’நெருப்புக்குள் ஈரம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சில படங்களில் குணசத்திர கேரக்டர், சில படங்களில் வில்லன் மற்றும் கிடைக்கும் அனைத்து கேரக்டர்களையும் ஏற்று நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் இவர் டப்பிங் கலைஞராகவும் பணிபுரிந்துள்ளார். குறிப்பாக பாரதி திரைப்படத்தில் நடித்த சாயாஜி ஷிண்டேவுக்கு டப்பிங் குரல் கொடுத்தவர் இவர்தான். மேலும் அவருக்கு தமிழக அரசின் சிறந்த டப்பிங் கலைஞருக்கான விருதும் கிடைத்திருந்தது.

சென்னை தொலைக்காட்சியில் சிவாஜி கணேசன் நடித்த ஒரே டெலிவிஷன் தொடரான ’மீண்டும் கௌரவம்’ என்ற தொலைக்காட்சி தொடரிலும் இவர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். ஒருமுறை எம்ஜிஆரை சந்திக்கும் வாய்ப்பு ராஜீவுக்கு கிடைத்தது. அப்போது, ‘சினிமாவில் முன்னேறுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல, நானும் சிவாஜியும் பல கஷ்டங்களை சந்தித்த பிறகு தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறோம், எங்களைப் போல ஆக வேண்டும் என்று நினைக்க வேண்டாம், சினிமாவை மட்டும் நம்பி வராமல் ஏதாவது ஒரு வேலை பார்த்துக்கொண்டே சினிமாவில் நடி’ என்று எம்ஜிஆர் தனக்கு அறிவுரை கூறியதாக நடிகர் ராஜீவ் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.