நடிப்பு, மிமிக்ரி தாண்டி கலாபவன் மணிக்கு இருந்த திறமை.. சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத கலைஞன்..

முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளாக இருப்பவர்களையும் தாண்டி, ஒரு திரைப்படத்தில் மற்ற குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் அதிகம் மக்கள் மனதை கவர்வது என்பது சற்று கடினமான ஒரு விஷயம் தான். அப்படி பல சவால்களை தங்களின் கடின உழைப்பால் நிஜமாக்கி பெயர் எடுத்த குணச்சித்திர நடிகர்கள் இங்கே ஏராளம்.

அந்த லிஸ்ட்டில் முக்கியமான ஒரு நடிகர் தான் மலையாள சினிமா பிரபலம் கலாபவன்மணி. மலையாளம் உட்பட தென் இந்திய சினிமாவில் சுமார் 20 ஆண்டுகள் பட்டையை கிளப்பிய இவர், 45 வயதிலேயே காலமானது இன்று வரையிலும் ரசிகர்களை வருத்தி தான் வருகிறது.

நடிகர் கலாபவன் மணிக்கு சிறு வயதிலேயே நடிப்பில் ஆசை இருந்ததால் அவரது பெற்றோர்களும் அதில் கவனம் செலுத்த அனுமதி அளித்தனர். முதலில் மிமிக்ரி கலைஞராக இருந்தவர், அதன் பிறகு ஏராளமான மலையாள படங்களில் நடிக்க தொடங்கினார்.

விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் என்ற திரைப்படத்தில் அவர் ஜூனியர் ஆர்டிஸ்ட்களில் ஒருவராக இருந்தார். அதன் பிறகு அவருக்கு குறிப்பிடத்தக்க வேடம் கிடைக்கவில்லை என்பதால் மிமிக்ரி கலைஞராகவே தொடர்ந்தார்.

kalabavan mani1

Kalabhavan Mani. Photo: Manorama Online

ஏழு வருடங்கள் கழித்து 1998 வருடம் தான் கலாபவன் மணிக்கு அடுத்த வாய்ப்பு தமிழில் கிடைத்தது. மம்முட்டியின் அடுத்த ’மறுமலர்ச்சி’ என்ற திரைப்படத்தில் வேலு என்ற கேரக்டரில் நடித்தார். அதன் பிறகு அவருக்கு தமிழில் பெரிய அளவு வாய்ப்புகள் இல்லை என்றாலும் மலையாளத்தில் வாய்ப்புகள் கிடைத்தது.

1999 ஆம் ஆண்டில் இருந்து மலையாளத்தில் அவர் உச்சத்தில் இருந்தார் என்பதும் குறைந்த பட்சம் ஒரு ஆண்டுக்கு 10 முதல் 15 படங்கள் நடித்து வந்த அவர், 1997 ஆம் ஆண்டில் மட்டும் 25 படங்களுக்கு மேல் நடித்தார்.

மலையாளத்தில் ஏராளமான படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்த அவருக்கு தமிழில் திருப்புமுனையாக படம் என்றால் அது விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படம் தான். சரண் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் வித்தியாசமான வில்லன் வேடத்தில் கலாபவன் மணி கலக்கி இருப்பார். காமெடி கலந்து வில்லத்தனம் செய்வதில் கலாபவன் மணிக்கு நிகர் யாருமில்லை என்ற அளவுக்கு தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருப்பார்.

kalabavan mani

இதனையடுத்து பந்தா பரமசிவன், விஜய் நடித்த புதிய கீதை உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னர் சிங்கார சென்னை, போஸ், ஜித்தன், அந்நியன், ஆறு, வேல், மோதி விளையாடு போன்ற படங்களில் நடித்த அவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்தும் அசத்தியிருப்பார்.

2016 ஆம் ஆண்டு புதுசா நான் பிறந்தேன் என்ற படத்தில் நடித்த நிலையில் அதே ஆண்டு அவர் பரிதாபமாக காலமானார். அவரது மரணம் பல சர்ச்சைகளை உருவாக்கியது. அவர் அளவுக்கு அதிகமாக குடித்ததால் அவருக்கு மரணம் ஏற்பட்டதாக கூறப்பட்டாலும் அவரது மரணம் குறித்த பல கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

நடிகர் கலாபவன் மணி குடிப்பழக்கத்தால் தான் காலமானார் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென அவருக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து அவருக்கு நெருக்கமானவர்களே கொலை செய்தார்கள் என்றும் கூறப்பட்டது. இது குறித்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட அவரது மரணம் குறித்த சில சர்ச்சை தகவல்கள் வெளியாகி இருந்தது.

நடிப்பு, மிமிக்ரி என்பதை தாண்டி கேரள நாடன் ஸ்டைலில் கலாபவன் மணி பாடிய பாடல்களும் கூட இன்றளவிலும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...