கேமரா முன்னாடி நடிகனா மட்டுமில்லாம கேமரா பின்னாடி ஒளிப்பதிவாளராவும் ஜெயிச்ச இளவரசு..

தமிழ் திரை உலகில் காமெடி மற்றும் குணச்சித்திர கேரக்டர்களின் நடித்து பிரபலமானவர் நடிகர் இளவரசு என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் நடிப்பு என்பதை தாண்டி சினிமாவின் மிக முக்கியமான துறையிலும் பல படைப்புகளை கொடுத்துள்ளார் இளவரசு.

நடிகர் இளவரசு மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்தவர். சிறுவயதிலேயே அவர் சினிமாவில் சேர வேண்டும் என்பதுடன் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளராக வர வேண்டும் என்றும் விரும்பி உள்ளார். ஒளிப்பதிவாளராக அவர் கிட்டத்தட்ட 13 படங்களில் பணிபுரிந்துள்ளார். கடந்த 1994 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் உருவான கருத்தம்மா என்ற படத்தில் தான் அவர் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து பிரபு நடித்த பாஞ்சாலங்குறிச்சி, பெரிய தம்பி, அதன் பின்னர் விஜய் நடித்த நினைத்தேன் வந்தாய், பிரபு நடித்த இனியவளே, மனம் விரும்புதே உன்னை, பார்த்திபன் நடித்த சபாஷ், பிரபுதேவா நடித்த ஏழையின் சிரிப்பில் உள்ளிட்ட சில படங்களுக்கு அவர் ஒளிப்பதிவு செய்தார்.

இந்த நிலையில் ஒளிப்பதிவாளர் ஆவதற்கு முன்பே சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களிலும் அவர் நடித்து வந்தார். கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியான சிவாஜி கணேசன் நடிப்பில் உருவான முதல் மரியாதை என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு இதய கோவில், கடலோர கவிதைகள், கொடி பறக்குது, ராவணன், பசும்பொன், பூவெல்லாம் உன் வாசம், ஷாஜகான், ஜெமினி, ரமணா, ஈர நிலம், பாய்ஸ், சவுண்ட் பார்ட்டி, மதுர,  சேவல்,  அகரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

சமீபத்தில் வெளியான வாத்தி, விடுதலை, ராவணக்கோட்டம் ஆகிய படங்களிலும் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் இளவரசு நடித்த கதாபாத்திரம் மிக பெரிய அளவில் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது. மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்த ராகம் என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார்.

அதே போல, கருத்தம்மா திரைப்படத்தில் பொன்வண்ணனுக்கு பின்னணி குரல் கொடுத்ததும் இளவரசு தான் என்பது குறிப்பிடத்தக்கது. பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்தில் மகாநதி சங்கருக்கும் பின்னணி குரல் கொடுத்துள்ளார் இளவரசு. தமிழ் திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் இளவரசு இன்னும் பல படங்களில் நடித்து தனது முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews