வாழ்க்கையை புரட்டிப் போட்ட பாலசந்தர்.. கமல் படத்தையே இயக்கி ரமேஷ் அரவிந்த் சாதிக்க காரணம்

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்தை சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர். அப்படிப்பட்ட இயக்குனரின் திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் ரமேஷ் அரவிந்த். இவர் கும்பகோணத்தை சேர்ந்தவராக இருந்தாலும்0 சிறு வயதிலேயே கர்நாடக மாநிலத்திற்கு சென்று செட்டிலாகி விட்டார்.

கன்னட படங்களில் ஆரம்ப காலத்தில் நடித்துக் கொண்டிருந்தார். கடந்த 1986 ஆம் ஆண்டு முதல் பல கன்னட படங்களில் நடித்த அவர் இன்று வரை தனக்கான சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கிறார் ரமேஷ் அரவிந்த். 1987 ஆம் ஆண்டு ’மனதில் உறுதி வேண்டும்’ என்ற திரைப்படத்தில் ரமேஷ் என்ற பெயரிலேயே தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு அவர் பாலச்சந்தர் இயக்கத்தில் மீண்டும் ‘உன்னால் முடியும் தம்பி’ என்ற படத்தில் நடித்தார்.

இந்த நிலையில் ’வசந்தகால பறவைகள்’ என்ற திரைப்படத்தில் அவருக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இதய வாசல், உரிமை ஊஞ்சலாடுகிறது, பாட்டு வாத்தியார் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்தார்.

ramesh arvind1

கமல்ஹாசனுடன் இணைந்து அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம், மும்பை எக்ஸ்பிரஸ், மன்மதன் அம்பு போன்ற படங்களை நடித்ததால் அவர் கமல்ஹாசனுடன் மிகவும் நெருக்கமானார். இந்த நெருக்கமான நட்பு காரணமாக தான் கமல்ஹாசன் நடிப்பில் உருவான உத்தம வில்லன் என்ற திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பும் ரமேஷ் அரவிந்த்திற்கு கிடைத்திருந்தது. மேலும் அவர் கன்னடத்திலும் பல படங்களை இயக்கி உள்ளார்.

தமிழில் உருவான கமல்ஹாசனின் ’சதி லீலாவதி’ படத்தை கன்னடத்தில் இயக்கினார் ரமேஷ் அரவிந்த். தற்போது அவரது இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் உருவான ‘பாரிஸ் பாரிஸ்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. பாலச்சந்தர் பள்ளியில் இருந்து வந்த ரமேஷ் அரவிந்த் நடிப்பு மட்டுமின்றி இயக்கம், திரைக்கதை, வசனத்திலும் திறமையாளராக இருந்தார். இயக்கம் மற்றும் நடிப்புக்காக கன்னடத் திரையுலகில் பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

நடிகர் ரமேஷ் அரவிந்த், அர்ச்சனா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தமிழ், கன்னட மொழிகளில் கிட்டத்தட்ட 140 திரைப்படங்களில் நடித்துள்ள ரமேஷ் அரவிந்திற்கு தற்போது 60 வயது ஆகிறது என்றாலும் இன்னும் திரையுலகில் பிசியாக நடித்துக் கொண்டும் திரைப்படங்களை இயக்கி கொண்டு இருக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews