எம்ஜிஆரின் வள்ளல் குணத்துக்கு அடித்தளம் போட்ட புட்டு கிழவி.. இப்படி ஓர் சம்பவமா?

மக்கள் திலகம் எம்ஜிஆர் சினிமாவிற்கு வருவதற்கு முன் நாடக கம்பெனிகளில் நடித்துக் கொண்டிருந்தார். குடும்ப வறுமை காரணமாக மூண்டார் வேளை சாப்பாடு கிடைக்குமே என் எண்ணி நாடக கம்பெனியில் சேர்ந்தவர் அவர். அதன் பின் படிப்படியாக தனது உழைப்பால் சிறிய கதாபாத்திரங்களில் சினிமாவில் தோன்றி ‘ராஜகுமாரி’ படத்தின் மூலம் முதன்முதலாக ஹீரோ ஆனார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு பின்பு அவருக்கு சினிமாவில் நிலையான இடம் கிடைத்தது.

அதற்குப்பின் 1975 வரை திரையில் எம்ஜிஆர், சிவாஜி ராஜ்ஜியம் தான். அன்று ஒரு காலத்தில் ஒருவேளை சோற்று காகவே கஷ்டப்பட்டவர் பின்னாளில் வாரி வழங்கும் வள்ளலாக மாறினார். மக்களும் எம்ஜிஆரை அன்புடன் ‘கலியுக கர்ணன்’ என்று அழைக்க ஆரம்பித்தனர். எம்ஜிஆரின் இந்த ஈகை குணத்திற்கு பின் ஒரு சுவாரஸ்ய சம்பவமே இருக்கிறது.

அப்போது எம்ஜிஆர் யானைகவுனிப்பகுதியில் வசித்துக் கொண்டிருந்தார். தினமும் அதிகாலையில் அவர் நடைபயிற்சி செல்வது வழக்கமாம். அவ்வாறு நடை பயிற்சி செய்து விட்டு அந்த வழியில் உள்ள ஒரு பாட்டியிடம் புட்டு வாங்கி உண்பது அவருக்கு பிடித்தமான ஒன்று. இவ்வாறு ஒரு நாள் எம்ஜிஆர் காலையில் நடைபயிற்சி செய்துவிட்டு அந்தப் பாட்டியிடம் புட்டு வாங்க சென்று இருக்கிறார். அப்போது அவர் தன் கையில் இருந்த பணத்தை எண்ணிப் பார்த்து பின்னர் கொஞ்சம் தயங்கி நின்றார்.

அந்தப் பாட்டியிடம், ”இன்றைக்கு எனக்கு புட்டு வேண்டாம் நான் நாளை வாங்கிக் கொள்கிறேன்” என்று கூறி இருக்கிறார். பாட்டியோ எம்ஜிஆரை பார்த்து, ”ஏன்?” என்று கேட்டிருக்கிறார். அப்போது எம்ஜிஆர், ” நான் இன்று எனக்கு மட்டும் வாங்க வரவில்லை. என்னோடு இருக்கும் மூன்று நண்பர்களுக்கும் சேர்த்து வாங்க வேண்டும் என்று வந்தேன். ஆனால் அதற்கு உரிய பணம் தற்போது என்னிடம் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

உடனே அந்தப் பாட்டி, ” பரவாயில்ல நாளைக்கு வரும்போது பணத்தை கொடுங்கள்” என்று சொல்லி அனைவருக்கும் சேர்த்து புட்டு பார்சல் செய்து எம்ஜிஆர் கையில் கொடுத்திருக்கிறார். ஆனால் இதை எம்ஜிஆர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை பாட்டி கொடுத்த அந்த பார்சலை வாங்காமல் ஏதோ சிந்தித்துக் கொண்டிருக்க பாட்டி, என்ன யோசிக்கிறாய்? என்று கேட்டாராம். அதற்கு எம்.ஜி.ஆர், ”ஒருவேளை நான் மறுநாள் பணம் கொண்டு வராமல் உங்களை ஏமாற்றினால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டிருக்கிறார்

அதற்குப் பாட்டி பதட்டமே இல்லாமல் சிரித்துக் கொண்டே, ” பணம் வந்தால் வியாபாரத்தில் சேர போகுது.. இல்லை என்றால் உங்கள் அனைவரின் பசியை தீர்த்த புண்ணிய கணக்கில் அது சேர்ந்துவிடும்” என்று கூறி இருக்கிறார். பாட்டி இவ்வாறு சொன்னது எம்ஜிஆரின் மனதில் ஆழமாகபதிந்தது.

பின்னாளில் இந்த ஒரு சம்பவமே எம்ஜிஆர், தன்னிடம் இல்லை என்று வந்தவர்களுக்கும் மேலும் ஏழைகளின் நிலை அறிந்து அவர்களுக்கு வாரி வழங்கியதற்கும் முக்கிய ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எம்ஜிஆரின் இறுதி மூச்சு வரை அந்தப் பாட்டி அவரின் நினைவிலேயே இருந்திருக்கலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...