சில வாரங்களாக அமைதியாக இருந்த அமைச்சரவை மாற்றம் தொடர்பான பரபரப்பு, தற்போது மீண்டும் தலைமைச் செயலகத்தில் சூடுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்களை கடந்துள்ள நிலையில், அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் விஜய் தரப்பில் விரிவான மதிப்பீடு நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் செயல்பாடுகளில் பின்தங்கியதாக கருதப்படும் மூன்று அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்குவது குறித்தும், மேலும் சில அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றுவது குறித்தும் ஆலோசனை நடந்து வருவதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் வசம் உள்ள சில துறைகளும் பிற அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க உளவுத்துறை மற்றும் முதல்வரின் ஆலோசகர்களுக்கு ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. முதற்கட்ட அறிக்கைக்கு பிறகு தற்போது இரண்டாவது மதிப்பீடும் முதல்வரிடம் சென்றுள்ளதாக தகவல். அதில் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, கைத்தறி மற்றும் நெசவுத்துறை அமைச்சர் விஜய் பாலாஜி, வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் ஆகியோரின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஜெகதீஸ்வரி தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கியது, சட்டப்பேரவையில் துறை சார்ந்த கேள்விகளுக்கு தடுமாறிய விதம், சில கருத்துகள் சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்கு உள்ளானது போன்றவை முதல்வரின் கவனத்துக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கும் பட்டியலில் சேர்த்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் விஜய் பாலாஜியின் பேச்சுகளும் முதல்வர் தரப்புக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அரசு விழா ஒன்றில் ஆளும் கட்சிக்கு வாக்களித்த மக்களை விமர்சிக்கும் வகையில் அவர் பேசியது கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிகிறது. மேலும், டெல்லியில் மத்திய அமைச்சரை சந்திப்பதாக கூறிவிட்டு தொழிலதிபர்களுடன் தனியாக சந்திப்பு நடத்தியதாக எழுந்த தகவலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்பிறகு அமைச்சர்கள் வெளிமாநிலங்களுக்கு செல்லும்போது அவர்களுடைய சந்திப்பு மற்றும் பயண விவரங்களை முதல்வர் அலுவலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமாரைப் பொறுத்தவரை, துறையில் போதிய கவனம் செலுத்தவில்லை என்ற விமர்சனத்துடன், சட்டப்பேரவையில் அவர் தெரிவித்த சில கருத்துகளும் சர்ச்சையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக காட்டுப்பன்றி விவகாரத்தில் அவரது பதில் முதல்வரின் அதிருப்தியை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், அமைச்சர்களின் இலாகாக்களிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் வரலாம் என கூறப்படுகிறது. நிதித்துறையை கவனிப்பதில் சிரமம் இருப்பதாக கருதப்படும் மரிய வில்சனுக்கு தொழில்துறை வழங்கப்பட்டு, சமூக நலத்துறை கீர்த்தனாவிடம் ஒப்படைக்கப்படலாம் என்ற பேச்சு உள்ளது. அதேபோல் பள்ளிக்கல்வித்துறை ராஜ்மோகனிடம் இருந்து வேளச்சேரி குமாருக்கு மாற்றப்படலாம் என்றும், ராஜ்மோகனுக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதித்துறைகள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. நகராட்சி நிர்வாகத்துறையும் அவருக்கு கூடுதல் பொறுப்பாக செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாற்றங்களுடன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகம்மது பர்வேஸ், கனிம வளத்துறை அமைச்சர் பிரபு ஆகியோருக்கும் கூடுதல் இலாகாக்கள் வழங்குவது குறித்து ஆலோசனை நடப்பதாக கூறப்படுகிறது.
எனினும், இந்த அமைச்சரவை மாற்றத்தில் புதிதாக யாரையும் அமைச்சராக சேர்ப்பதற்கான திட்டம் தற்போதைக்கு இல்லை என தெரிகிறது. கட்சியில் அமைச்சர் பதவியை எதிர்பார்த்து பலர் காத்திருக்கும் நிலையில், புதிய நியமனங்கள் மேலும் உட்கட்சி போட்டியை உருவாக்கலாம் என்பதால் தலைமை அதில் அவசரம் காட்டவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் விஜய் லண்டன் செல்ல உள்ளதால், அவர் வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய பின்னரே அமைச்சரவை மாற்றம் தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது பட்டியல் தயாராக இருந்தாலும், அதில் இறுதி ஒப்புதல் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
மொத்தத்தில், அமைச்சர்களின் செயல்பாட்டை வைத்து மதிப்பீடு செய்து தேவையான இடங்களில் அதிரடி மாற்றங்களை கொண்டு வர முதல்வர் விஜய் தயாராகி வருவதாகவே அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. செயல்பாட்டில் சுணக்கம் காட்டுபவர்களுக்கு பதவி மாற்றம் அல்லது நீக்கம் மூலம் எச்சரிக்கை கொடுக்கவும், திறமையாக செயல்படுபவர்களுக்கு கூடுதல் பொறுப்புகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இறுதி நேரத்தில் அரசியல் கணக்குகள், மூத்த நிர்வாகிகளின் ஆலோசனைகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு ஆகியவற்றால் பட்டியலில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. லண்டன் பயணத்துக்குப் பிறகு முதல்வர் எடுக்கும் முடிவுதான், இந்த அமைச்சரவை மாற்றம் உண்மையிலேயே அதிரடி ஆட்டமா அல்லது வழக்கமான நிர்வாக மாற்றமா என்பதைத் தெளிவுபடுத்தும்.





