விஜய்யை வீழ்த்த வேண்டும் என்று திமுகவே அமைதியாக இருக்கிறது… ஆனால் தினகரன் மட்டும் ஏன் இவ்வளவு அவசரமாக காய்களை நகர்த்துகிறார்? விஜய்யை எதிர்க்க வேண்டும் என்பதுதான் நோக்கமா? இல்லை… விஜய் நல்லாட்சி கொடுத்துவிடக்கூடாது என்பதுதான் பயமா? விஜய் ஆட்சி நீடித்தால் எதிர்க்கட்சிகளுக்கு எதிர்காலம் பூஜ்யம் என்று இப்போதே கணக்கு போடுகிறார்களா? மக்கள் ஓட்டுப்போட்டு ஆட்சியை தேர்ந்தெடுத்தார்கள்… அரசியல் சதுரங்கத்தில் அதை கவிழ்க்க நினைத்தால், அடுத்த நகர்வை மக்கள் போடுவார்கள்!
தமிழக அரசியலில் இப்போது பரபரப்பை கிளப்பியிருப்பது டிடிவி தினகரனின் அடுத்த அரசியல் நகர்வு பற்றிய பேச்சுதான். விஜய் தலைமையிலான ஆட்சி தொடர்ந்து நீடிக்கக் கூடாது என்ற கணக்கில் தினகரன் சில முக்கிய அரசியல் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் உலா வருகின்றன. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியுடன் அவர் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், அமமுகவை அதிமுகவுடன் இணைப்பது அல்லது இரு தரப்பும் ஒரே பாதையில் பயணிப்பது குறித்து ஆலோசனை நடப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் திமுக தரப்புடனும் சில விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
விஜய் ஆட்சி இன்னும் வலுப்பெற்று விட்டால், எதிர்க்கட்சிகளுக்கு அரசியல் ரீதியாக மிகப்பெரிய சிக்கல் உருவாகும் என்பதே தினகரனின் கணக்கு என்கிறார்கள். குறிப்பாக, கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த சில முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கும் முன்னாள் அமைச்சர்களுக்கும் தற்போதைய ஆட்சி நீடிப்பது எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையும் அவர் எடுத்துச் சொல்வதாக கூறப்படுகிறது. “இப்போது காய் நகர்த்தவில்லை என்றால், நாளைக்கு களம் நம் கையில் இருக்காது” என்ற ரீதியில் அவர் தனது அரசியல் கணக்குகளை முன்வைத்து வருவதாகவும் தகவல்.
ஒருவேளை விஜய் அரசு கவிழும் நிலை ஏற்பட்டால், அதிமுக–திமுக உள்ளிட்ட கட்சிகளை வைத்து புதிய ஆட்சி அமைப்பது பற்றிய ஒரு மாற்று திட்டமும் பேசப்படுவதாக கூறப்படுகிறது. அதில் திருமாவளவனை முதலமைச்சராகவும், சௌம்யா அன்புமணியை துணை முதலமைச்சராகவும் முன்னிறுத்தும் யோசனையும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டசபையில் சௌம்யா அன்புமணி காட்டிய செயல்பாடுகளை வைத்து அவருக்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பை இந்த கணக்கில் பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், அரசியல் கணக்கு போடுவது வேறு; அதை சட்டசபையில் செயல்படுத்துவது வேறு. ஒரே ஒரு எம்எல்ஏவை வைத்திருக்கும் தினகரனால் மட்டும் இவ்வளவு பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியுமா என்பதுதான் முக்கிய கேள்வி. அதிமுக, திமுக போன்ற பெரிய கட்சிகள் உண்மையில் இந்த முயற்சிக்கு கைகொடுக்குமா என்பதும் தெளிவாகவில்லை. “எண்ணிக்கை இல்லாமல் ஆட்சிக் கவிழ்ப்பு என்பது வெறும் அரசியல் பேச்சுதான்” என்ற விமர்சனமும் எழுகிறது.
அதுமட்டுமல்லாமல், மக்கள் அளித்த தீர்ப்புக்கு மாறாக கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க முயன்றால், அது மக்களிடையே எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பும் இருக்கிறது. ஆட்சியை கவிழ்க்க நினைத்து உருவாக்கப்படும் கூட்டணி, தேர்தல் வந்தால் அதே கட்சிகளுக்கே எதிராக திரும்பக்கூடும். குறிப்பாக முயற்சி தோல்வியடைந்து மீண்டும் தேர்தல் நடந்தால், அனுதாப வாக்குகள் விஜய் பக்கம் செல்வதற்கான வாய்ப்பையும் நிராகரிக்க முடியாது. “ஆட்சியை கவிழ்ப்பது சுலபம்… மக்கள் மனசை மாற்றுவது அவ்வளவு சுலபமில்லை” என்பதுதான் இங்கே முக்கியமான விஷயம்.
எப்படியிருந்தாலும், டிசம்பருக்குள் ஏதாவது ஒரு பெரிய அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தினகரன் தீவிரமாக செயல்படுவதாக வெளியாகும் தகவல்கள் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் இந்த முயற்சிக்கு யார் துணை நிற்பார்கள், எத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுப்பார்கள், எதிரெதிர் முகாம்களில் இருக்கும் கட்சிகள் ஒரே முடிவுக்கு வருமா என்பதுதான் உண்மையான சவால். “சதுரங்கத்தில் காய்களை நகர்த்தலாம்… ஆனால் செக் வைக்க தேவையான காய்கள் கையில் இருக்கிறதா?” என்பதுதான் இப்போது எழும் பெரிய கேள்வி.





