வாக்கு சதவீதத்தில் எம்ஜிஆரை மிஞ்சிய விஜய், இப்போது மக்கள் மனதில் இடம் பிடிப்பதிலும் முடிந்திவிட்டாரா? மக்களோடு மக்களாக இணைந்து பழகும் முதல்வரை பார்த்து பல வருஷமாச்சு. .. ஸ்டாலின் மக்களோடு பழகுவது போன்ற வீடியோக்களில் செயற்கைத்தனம் இருக்கும்.. ஆனால் விஜய் மக்களிடம் அணுகும் முறையில் ஒரு அன்பு, பாசம், இவர் நம்ம வீட்டு பிள்ளை என்ற உணர்வு இருக்கிறது.. அந்த உணர்வு தான் விஜய்யை உச்சத்தில் உட்கார வைத்துள்ளது.. விஜய்யை இப்போதைக்கு அந்த இடத்தில் இருந்து இறக்குவது என்பது முடியாத காரியம்…
எம்ஜிஆரை முதலமைச்சர் விஜய் மிஞ்சிவிட்டாரா? என்ற விவாதம் தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. காரணம், விஜய் மக்களை சந்திக்கும் விதமும், அவர்களோடு பழகும் விதமும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. எம்ஜிஆர் ஒரு பொது நிகழ்ச்சிக்கு சென்றால், பாதுகாப்பு வளையத்துக்குள் மட்டும் நிற்காமல் மக்களோடு மக்களாக கலந்து பழகுவார். அவர்களை கட்டிப்பிடிப்பது, அன்பாக பேசுவது, முத்தம் கொடுத்து பாசத்தை வெளிப்படுத்துவது என மக்களுடன் நெருக்கமான உறவை உருவாக்கியவர். அந்த பாணியை இன்றைய காலத்துக்கு ஏற்ற வகையில் விஜயிடமும் பார்க்க முடிகிறது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்ட விதமும் இதற்கு உதாரணமாக பேசப்படுகிறது. வழக்கமான அரசியல் தலைவர்கள் மேடையில் நின்று மக்களை பார்த்துவிட்டு செல்வார்கள். ஆனால் விஜய் அங்கிருந்த மக்களோடு சகஜமாக கலந்து கொண்டு, அவர்களுடைய உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஒரு பாட்டிக்கு கூலிங் கிளாஸ் கொடுத்து, அதை அவர் அணிந்தபோது அவருடன் இயல்பாக பழகிய விதம் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. பெரிய பதவி, அதிகாரம் என்ற பந்தாவை காட்டாமல் சாதாரண மனிதரைப் போல நடந்து கொள்வது மக்களிடம் வேகமாக சென்றடைகிறது என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.
அதேபோல், தனக்கு துண்டு அணிவிக்க வந்த விவசாயியிடம் விஜய் நடந்து கொண்ட விதமும் கவனம் பெற்றுள்ளது. அந்த விவசாயி கொண்டுவந்த துண்டை அந்த விவசாயிக்கே அணிவித்து மரியாதை செய்த சம்பவம் பலராலும் பாராட்டப்பட்டது. அரசியலில் பதவி உயர்ந்தவர் என்ற எண்ணத்தை காட்டுவதற்கு பதிலாக, எதிரில் நிற்பவருக்கும் மரியாதை கொடுப்பதுதான் முக்கியம் என்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது. இதுபோன்ற சிறிய நிகழ்வுகள்தான் ஒரு அரசியல்வாதியின் மக்கள் தொடர்பை வலுப்படுத்தும். அதனால்தான் விஜயின் இந்த அணுகுமுறை எம்ஜிஆர் காலத்து மக்கள் நெருக்கத்தை நினைவுபடுத்துவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
தமிழக அரசியலில் கடந்த சில ஆண்டுகளாக முதலமைச்சர் மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான நேரடி தொடர்பு குறைந்து விட்டதாக ஒரு விமர்சனம் இருந்து வருகிறது. பாதுகாப்பு, அதிகார நடைமுறை, அரசியல் இடைவெளி என பல காரணங்களால் தலைவர்களுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு தூரம் உருவாகிறது. தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்தித்து, கைகுலுக்கி, புகைப்படம் எடுத்துக் கொள்வது மக்களிடம் சில நேரங்களில் செயற்கையான உணர்வை ஏற்படுத்துகிறது. ஆனால் விஜய் மக்களை சந்திக்கும் தருணங்களில் எந்தவிதமான அரசியல் கணக்கையும் வெளிப்படையாக காட்டாமல், இயல்பாக பழகுகிறார் என்ற தோற்றம் உருவாகியுள்ளது.
இதுதான் எம்ஜிஆர் மற்றும் விஜய் ஆகியோரின் மக்கள் அணுகுமுறையை ஒப்பிடுவதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மக்கள் மனதில் இடம் பிடிப்பதற்கு வெறும் பேச்சு மட்டும் போதாது; அவர்களுடன் நேரடியாக கலந்து, அவர்களின் வாழ்க்கையை புரிந்துகொண்டு, அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். எம்ஜிஆர் இதை தனது அரசியல் பயணத்தில் ஒரு பெரிய பலமாக மாற்றினார். அதேபோன்ற ஒரு மக்கள் நெருக்கத்தை விஜயும் உருவாக்கி வருகிறார் என்ற கருத்து தற்போது எழுந்துள்ளது. ‘மக்களிடம் இருந்து விலகி நிற்கும் தலைவர் அதிகாரத்தில் இருக்கலாம்; ஆனால் மக்களோடு நிற்கும் தலைவர்தான் மக்கள் மனதில் இருப்பார்’ என்பதே இந்த விவாதத்தின் மையமாக உள்ளது.
வரலாற்றை திரும்பிப் பார்த்தால், மக்களோடு நெருக்கமாக இருந்த தலைவர்களுக்குத்தான் நீண்ட கால அரசியல் ஆதரவு கிடைத்திருக்கிறது என்ற கருத்து உள்ளது. மக்கள் பிரச்சினைகளை நேரில் கேட்பது, அவர்களுடைய உணர்வுகளை மதிப்பது, சாதாரண மனிதரைப் போல அவர்களோடு கலந்து பழகுவது ஆகியவை அரசியல்வாதியின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கின்றன. அந்த வகையில், விஜயின் தற்போதைய மக்கள் சந்திப்புகள் அரசியலில் அவருக்கு தனித்த அடையாளத்தை உருவாக்குகின்றன. ‘தலைவர் மக்களுக்காக இருக்க வேண்டும்; மக்கள் தலைவருக்காக அல்ல’ என்ற அணுகுமுறையை அவர் தொடர்ந்து கடைப்பிடித்தால், எம்ஜிஆர் உருவாக்கிய மக்கள் அரசியலின் புதிய தலைமுறை முகமாக விஜய் உருவெடுக்கலாம் என்பதே தற்போது அரசியல் வட்டாரங்களில் முன்வைக்கப்படும் கருத்தாக உள்ளது.





