பொதுவா வரலட்சுமி விரதம் ஆடி மாதம் தான் வரும். இந்த ஆண்டு ஆவணி மாதம் வருது. ஆடி அமாவாசைக்குப் பின்னால் வரக்கூடிய மாதத்தை ஷ்ரவண மாதம்னு சொல்வாங்க. இது ஆரம்பிச்ச பிறகு வரக்கூடிய பௌர்ணமி என்னைக்கு வருதோ அதுக்கு முன்பு வரக்கூடிய வெள்ளிக்கிழமை தான் வரலட்சுமி நோன்பு. அந்த வகையில் இந்த ஆண்டு நாளை (21.8.2026) வரலட்சுமி நோன்பு வருகிறது. இந்த பூஜையை செய்வதால என்ன சிறப்பு? வாங்க பார்க்கலாம்.
பொதுவா எல்லாரும் சொல்றது மகாலட்சுமியைக் கும்பிட்ட காசு வரும். எப்பவுமே அதை மட்டும் நான் உங்களுக்கு சொன்னதே கிடையாது. மகாலட்சுமி வெறும் செல்வத்தை மட்டும் தருகிற கடவுள் அல்ல. மனநிம்மதி, மனமகிழ்ச்சி, குடும்ப ஒற்றுமை, ஆரோக்கியம் என சகல விதமான ஐஸ்வரியங்களையும் தரக்கூடிய ஒரு ஆற்றல் மிகுந்த கடவுள்தான் மகாலட்சுமி.
இவரை வணங்கினால் இத்தனை நல்லதும் கிடைக்கும் என்பதால்தான் பெரியவங்க மகாலட்சுமியை சிறப்பான நாட்கள்ல வழிபடணும்னு சொன்னாங்க. அஷ்டலட்சுமிகளும் நம் வீட்டில் நிறைஞ்சு இருக்கணும்னு வழிபடக்கூடிய ஒரு விரத நாளாக இதை நாம் கடைபிடித்து வருகிறோம். அவரவர் வசதியைப் பொருத்து வரலட்சுமி நோன்பைக் கொண்டாடலாம். வெள்ளியில முகம் வச்சு வாங்கித்தான் வரலட்சுமி பூஜையைக் கொண்டாடணும்கற அவசியமே கிடையாது.
நீங்க ஒரே ஒரு தேங்காயில் மஞ்சள், குங்குமம் வச்சி வரலட்சுமி விரதம் கண்டிப்பா கொண்டாடலாம். இதுல ஒண்ணும் தப்பே இல்லை. பிறர் செய்ற மாதிரி தான் செய்யணுமா? அப்படி செஞ்சா தான் பூஜையான்னு நினைக்காதீங்க. அவங்க அவங்களுக்கு முடிகிற அளவுக்கு செஞ்சா போதும். ஆரம்பத்தில் எளிமையா கொண்டாடுனவங்க முழு பக்தியோட தொடர்ந்து இந்த பூஜை, விரதத்தைக் கடைபிடித்து வரும்போது நாளடைவில் நல்ல வசதியாகக் கொண்டாடுகின்றனர். இதுதான் உண்மையான பக்தி.
அதே போல பரம்பரை பரம்பரையா செஞ்சா தான் இந்த பூஜை பண்ணனும்னும் கிடையாது. உங்களால இந்த பூஜை செய்ய முடியும். தொடர்ந்து வரக்கூடிய வருடங்கள்ல மகாலட்சுமி அனுமதிச்சா நான் கும்பிடுவேன் என்கிற நம்பிக்கை இருந்தா புதுசா நீங்க இந்த பூஜையைத் தொடங்கலாம். திடகாத்திரமான மனம், மகாலட்சுமி மேல தீராத காதல் என இந்த இரண்டும் கண்டிப்பா இருந்தா யார் வேணாலும் இந்த விரதத்தை எடுத்துக்கலாம். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



