தமிழக அரசியல் களம் தற்போது முற்றிலும் தி.மு.க மற்றும் தவெக என்ற இரு துருவங்களை நோக்கியே முழுமையாகத் திரும்பியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தி.மு.கவினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் குதித்துள்ள அதேவேளையில், தவெக தொண்டர்களோ பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி இந்த அதிரடி நடவடிக்கையைக் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். இந்த அதிரடி அரசியல் மாற்றங்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் அ.தி.மு.கவோ இந்த விவகாரத்தில் எந்தவித சத்தமும் இல்லாமல் மூலையில் முடங்கிப் போய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது ஒட்டுமொத்த அரசியல் பார்வையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
உதயநிதி பொதுவெளியில் நாகரிக வரம்பை மீறி ஆபாசமாகவும் இழிவாகவும் பேசியபோதே, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க உடனடியாகக் களமிறங்கி இருக்க வேண்டும். நேற்றே தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டனப் போராட்டங்களை முன்னெடுத்திருக்கலாம்; ஏன், உதயநிதி வீட்டின் முன்பே தர்ணா போராட்டம் நடத்தித் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்திருக்க வேண்டியது ஒரு எதிர்க்கட்சியின் அடிப்படை கடமையாகும். ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்போ எப்போதும் போல மௌனம் காப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது. மக்கள் மத்தியில் எழும் கோப அலைகளைப் பயன்படுத்திக் கொண்டு குரல் கொடுக்க வேண்டிய நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் அமைதியோ அமைதி என்று ஒதுங்கியிருப்பது அ.தி.மு.கவின் பலவீனத்தையே அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
மக்களின் பிரச்சினைகளுக்காகக் களத்தில் நின்று போராடாமல், ஏனோதானோவென்று அறிக்கைகளை மட்டும் வெளியிட்டுவிட்டு ஒதுங்கி நிற்கும் போக்கு அ.தி.மு.கவை மெல்ல மெல்ல அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தும் நிலைக்குத் தள்ளியுள்ளது. தி.மு.கவின் அராஜகங்களை எதிர்க்கத் திராணியில்லாமல், ஆளுங்கட்சியோடு ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் ‘அட்ஜெஸ்ட்மென்ட்’ அரசியல் செய்கிறதா என்ற சந்தேகம் இப்போதே தொண்டர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் வலுக்கத் தொடங்கியுள்ளது. ஒரு காலத்தில் ஆளுங்கட்சியைக் கிடுகிடுக்க வைத்த இயக்கம், இன்று மக்கள் பிரச்சினைகளுக்கான குரலாக இல்லாமல் வெறும் அறிக்கைப் போர் நடத்தும் இயக்கமாகச் சுருங்கிப் போனது தொண்டர்களைப் பெருத்த ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
மறுபுறம், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, தவறு செய்பவர்கள் எவராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி அதிரடி நடவடிக்கை எடுப்பதன் மூலம் ஒட்டுமொத்த தமிழக மக்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. வெறும் வார்த்தை வித்தைகளைக் காட்டாமல், செயலால் எல்லாவற்றையும் சாதித்துக் காட்டும் ஒரு புதிய மற்றும் துடிப்பான அரசியல் சக்தியாகத் தவெக இன்று உருவெடுத்துள்ளது. தி.மு.கவின் அடாவடித்தனங்களை எதிர்த்துத் தட்டிக் கேட்கும் ஒரே மாற்று சக்தியாகத் தவெக மாறிவருவதை மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். இந்த அதிரடி அரசியல் கள மாற்றத்தில், தன் பலத்தைக் காட்டத் தவறிய அ.தி.மு.க மெல்ல மெல்லத் தமிழக அரசியலின் விளிம்பிற்குக் தள்ளப்பட்டு வருவது மறுக்க முடியாத உண்மையாகும்.
எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை வைத்திருந்தும் கூட, சரியான நேரத்தில் உரிய எதிர்ப்பைக் காட்டத் தவறியதின் மூலம் அ.தி.மு.க தனது அரசியல் செல்வாக்கை ஒவ்வொரு நாளும் இழந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமியின் இந்தச் செயலற்ற தன்மையும் கோழைத்தனமான மௌனமும், எதிர்காலத்தில் அந்தக் கட்சியைத் தூக்கி எறியத் தமிழக மக்கள் தயாராகிவிட்டனர் என்பதற்கான தெளிவான அறிகுறியாகும். தி.மு.கவின் மலிவான அரசியலையும், உதயநிதியின் வரம்பு மீறிய பேச்சுகளையும் எதிர்க்கத் திராணியில்லாத ஒரு இயக்கம் எப்படி மக்களுக்கான கட்சியாக இருக்க முடியும் என்ற கேள்வி இப்போதே பலத்த ஒலியாக எழுந்துள்ளது.
காலம் மாறிவிட்டது, மக்களின் எதிர்பார்ப்புகளும் அரசியல் களத்தின் யதார்த்தங்களும் அடியோடு திசைமாறிப் பயணிக்கத் தொடங்கிவிட்டன. வெறும் மௌனத்தாலும் கண்துடைப்பு அரசியலாலும் இனி எங்குமே எடுபட முடியாது என்பதை அ.தி.மு.க தலைவர்கள் உணராதது அந்தக் கட்சியின் துரதிர்ஷ்டமே ஆகும். தி.மு.கவை எதிர்த்துத் தவெக அதிரடிப் படைகளை இறக்கி வெற்றிகரமாகக் களம் கண்டுள்ள இந்தச் சூழலில், கோழைத்தனமாய் ஒதுங்கி நிற்கும் அ.தி.மு.க அரசியலில் இருந்து முற்றிலுமாக அப்புறப்படுத்தப்படுவது உறுதியாகிவிட்டது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
