இறைவனை வழிபாடு செய்யும்போது வேதங்களையே வழிபாடு செய்வதாகத்தான் சொல்கிறார்கள். அதுல சைவம், வைணவம், சாஸ்தம் எது உயர்ந்ததுன்னு பல விவாதங்கள் வருகிறது. அந்தப் பேதம் எப்போது எல்லாம் நம் மனதில் எழுகிறதோ அப்போது நாம் இறைவனின் இந்தத் தோற்றத்தை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இறைவன் ஒருவனே. அந்த ஒருவனாகிய இறைவன் பல்வேறு வடிவங்களாக, பல்வேறு நாமங்களாக, பல்வேறு வண்ணம் உடையவராக ஒவ்வொருவருக்கும் அருள்புரியக்கூடியவராக பல காலங்களில் பல தோற்றங்களில் நமக்குக் காட்சி அளிக்கிறார்.
அதனால்தான் இறைவனுக்கு இத்தனை வடிவங்கள், இத்தனை சிறப்புப்பெயர்கள் சொல்லப்பட்டுள்ளது. இதை ஒவ்வொரு நாளும் நாம நினைவுபடுத்திக் கணும்னா ஆடி மாதத்துல வரும் தபசை நாம் மறக்கக்கூடாது. இது அம்பாளுக்குத் தானே விசேஷம்னு கேட்கலாம். ஆதிசங்கரர் சமயங்களை 6 வகையாக வகுத்து வைத்தார். அதுல 3 சமயங்களை ஒரே நாளில் வழிபாடு செய்கிறோம்னா அது தான் ஆடித்தபசு. அன்று சைவ, வைணவராக சங்கர நாராயணர் வழிபாட்டையும், அம்பிகையின் வழிபாட்டையும் சேர்த்து செய்யக்கூடிய நாள்.
தெய்வத்தை வழிபாடு செய்யும்போது இது உயர்ந்தது, அது உயர்ந்ததுன்னு பேதைமை பார்க்கக்கூடாது. ஒரு காலத்துல சங்கனும், பதுமனும் சைவம் உயர்ந்தது, வைணவம் உயர்ந்ததுன்னு போட்டி போட்ட காரணத்தால் தான் இன்னைக்கு நமக்கு சங்கர நாராயணரே கிடைத்துள்ளார். சங்கர நாராயணர் அம்பாளின் தவத்திற்காக வெளிப்பட்டார். அம்பாளின் தவம் என்பது அவ்வளவு சாதாரணமானது அல்ல.
பொதுவாகவே நாம விரதம் இருக்கணும்னா ஒரு வாரத்துக்கு முன்பே தயாராகிடுவோம். சிலர் முதல் நாள் முன்பே நிறைய சாப்பிட்டு விடுவார்கள். ஆனால் அம்பாளின் தவம் சாதாரணமானது அல்ல. தான் நினைத்த காரியம் நிறைவேறும் வரை மிகக் கடுமையாகத் தவம் செய்து இறைவனின் அருள் எப்படிப்பட்டதுன்னு நிறைய இடங்கள்ல நிரூபித்துக் காட்டி இருக்கிறாள். அதுல ஒண்ணுதான் சங்கரன்கோவில்.
இங்கு தோழிகளுடன் அம்பிகை வந்து தேவாதி தேவர்களும் நலம் பெற வேண்டும் என்பதற்காக அம்பிகையே இங்கு வந்து தவம் செய்து இறைவனை சங்கர நாராயணராகக் காட்டினார். அரியும் அரனும் ஒன்றே என்று அம்பிகை நிரூபித்துக் காட்டிய கோவில் தான் இந்த சங்கர நாராயணர் கோவில். அதனால் தான் இங்கு ஆடித்தபசு விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் வரும் 29ம் தேதி ஆடித்தபசு வருகிறது. இறை அன்பர்கள் சங்கர நாராயணரை வழிபடத் தவறாதீர்கள்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



