நீட் தேர்வை ரத்து செய்தால் தமிழ்நாட்டின் 15% இடங்கள் வேறு மாநிலங்களுக்கு சென்றுவிடும்.. ஆனால் நீட் தேர்வு இருந்தால் இந்தியா முழுவதிலும் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு போட்டி போடலாம்.. தமிழ்நாட்டு மாணவர்கள் திறமையானவர்கள்.. தமிழ்நாட்டிற்கான 85% மட்டுமின்றி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள 15% இடத்தையும் பெறலாம்.. கொஞ்சம் மாற்றி யோசித்து, கடினமாக உழைத்தால் மருத்துவ கனவு சாத்தியமே.. கரப்பான்பூச்சி பின்னாடி போய் கனவை சிதைக்காதீர்கள்…

தமிழகத்தில் நீட் தேர்வு மற்றும் மருத்துவ மாணவர் சேர்க்கை குறித்த விவாதங்கள் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவர் சஞ்சய் தனது கல்வி அனுபவத்தையும், நுழைவுத்தேர்வு குறித்த தனது பார்வையையும் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர்…

neet 1

தமிழகத்தில் நீட் தேர்வு மற்றும் மருத்துவ மாணவர் சேர்க்கை குறித்த விவாதங்கள் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவர் சஞ்சய் தனது கல்வி அனுபவத்தையும், நுழைவுத்தேர்வு குறித்த தனது பார்வையையும் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் பத்தாம் வகுப்பு வரை கேந்திரிய வித்யாலயா மத்திய அரசு பள்ளியில் படித்த போது இரு மொழி கொள்கை காரணமாக தமிழ் மொழி அங்கு பயிற்றுவிக்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளை மாநில கல்வித் திட்டத்தின் கீழ் அவர் தொடர்ந்தார்.

2016 ஆம் ஆண்டு அப்போதைய கட்-ஆஃப் முறையில் பன்னிரண்டாம் வகுப்பில் 1200-க்கு 1116 மதிப்பெண்கள் பெற்றிருந்த போதிலும், உயிரியல் தேர்வில் ஏற்பட்ட சிறு மதிப்பெண் குறைவு காரணமாக அவருக்கு மருத்துவம் படிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. பொறியியல் படிக்க வாய்ப்பிருந்தும், மருத்துவத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் அவர் நுழைவுத்தேர்வு குறித்த விபரங்களைத் தேடத் தொடங்கினார். அப்போது ஏஐபிஎம்டி (AIPMT) என்ற பெயரில் இருந்த தேர்வு பின்னர் நீட் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வாக மாற்றப்பட்டது.

நீட் தேர்வு நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, தமிழ்நாட்டில் மருத்துவ இடங்கள் அனைத்தும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டே நிரப்பப்பட்டு வந்தன. ஆனால் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான 15% இடங்களுக்கு மாநில அளவில் நுழைவுத்தேர்வு இல்லாததால், கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களே அந்த இடங்களைக் கைப்பற்றும் நிலை இருந்தது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டு மாணவர்கள் கணிசமான மருத்துவ இடங்களை இழக்க நேரிட்டது.

இதனைத் தொடர்ந்து, நீட் தேர்வுக்கு முழுமையாகத் தயாராகி தேர்ச்சி பெற்று அவர் மருத்துவக் கல்லூரியில் இணைந்தார். நீட் தேர்வு அமலுக்கு வந்த பிறகு தமிழ்நாட்டு மாணவர்கள் நுழைவுத்தேர்வுக்குப் பயிலும் சூழல் உருவாகியதோடு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் மூலமாக ஏராளமான ஏழை எளிய மாணவர்களும் எளிதில் மருத்துவர்களாகி வருகின்றனர். மேலும், தேசிய அளவிலான 15% இடங்களிலும், பிற மாநிலங்களில் உள்ள இடங்களிலும் தமிழ்நாட்டு மாணவர்கள் தற்பொழுது வெற்றிகரமாகப் போட்டியிட்டு வருகின்றனர்.

நீட் தேர்வை முற்றிலும் நீக்கிவிட்டு மீண்டும் பழைய முறைக்குச் சென்றால், அகில இந்திய அளவில் ஒதுக்கப்பட்டுள்ள 15% இடங்களுக்கான சிக்கலுக்கு என்ன தீர்வு என்ற கேள்வி எழுகிறது. தமிழ்நாட்டு மாணவர்களின் திறமை மிகவும் உயர்வானது என்பதால், முறையான பயிற்சியின் மூலம் அவர்களால் மாநில மற்றும் அகில இந்திய அளவிலான இடங்களை வெற்றிகரமாகக் கைப்பற்ற முடியும். மாநில அரசு நீட் தேர்வை எதிர்த்தாலும், அகில இந்திய ஒதுக்கீட்டு முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்பதால், இத்தகைய சவால்களுக்குச் சரியான மாற்றுக் கோணங்களைச் சிந்தித்துத் தீர்வு காண வேண்டியது அவசியமாகிறது.