அனுமன் என்று சொன்னாலே அனைவருக்கும் பிடித்தமான கடவுள். ராமாயணம் என்ற இதிகாசத்தை இன்று படிக்குறோம்னா அதுக்கு ஆணிவேராக விளங்கியவர் அனுமன். நல்ல பக்தன், நல்ல தொண்டன். ஒரு தொண்டன் தலைவனை எப்படி போற்ற வேண்டும் என்று உலகிற்கு காட்டியவர். அற்புதமான ஆற்றல் மிக்கவர். அஞ்சனையின் மகன். கேசரியின் பலன்கள் அனைத்தும் பெற்று வாயுதேவனின் அம்சமாகவே விளங்கினார்.
சிவபெருமானின் ஆற்றல் பெற்றவராகவும் ஆஞ்சநேய சுவாமிகள் விளங்குகிறார். குழந்தையாக இருக்கும்போது அம்மா நான் பசிச்சா எதை சாப்பிடுறதுன்னு கேட்கிறார். பழத்தை சாப்பிடு என்கிறார். பழம் எப்படி இருக்கும்னு கேட்கிறார். அதற்கு சிவப்பா இருக்கும்னு சொல்கிறார். உடனே காலையில் சிவப்பாக வானத்தில் இருக்கும் சூரியனைப் பார்த்ததும் அதுதான் அம்மா சொன்ன பழமாக இருக்குமோன்னு நினைத்து அதை சாப்பிட செல்கிறார்.
அது தூரமாக இருக்கிறது. இருந்தாலும் போகலாம்னு முடிவெடுக்கிறார். சூரியனுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறார். இதனால் இந்திரன் சூரியனுக்கு ஆபத்து வந்துவிடுமோ என கருதி, தனது வஜ்ராயுதத்தை எடுத்து அனுமனை நோக்கி வீசுகிறார். அதில் அனுமனின் கன்னம் முறிகிறது. அனு என்றால் கன்னம். அது முறிந்ததால் அனுமன் என்ற பெயர் வந்தது. தன்னுடைய மகனை அடித்ததால் வாயு பகவான் தன் வலிமைகளை எல்லாம் சுருக்கிக் கொள்கிறார்.
காற்று இல்லாமல் இந்த உலகம் இயங்காது. அப்போதுதான் பிரம்மா உள்பட அத்தனை தேவர்களும் வந்து வாயுபகவானை சமாதானம் செய்கிறார்கள். என் மகனுக்கு யாரும் சாபம் கொடுத்துடக் கூடாது. தண்டிச்சிறக் கூடாது. என் மகனை நான்தானே காப்பாத்தணும். அதனால்தான் என் வலிமைகளை சுருக்கிக் கொண்டேன் என்கிறார் வாயுபகவான்.
அப்புறம் பிரம்மா உள்பட அத்தனை தேவர்களும் மிக உயர்ந்த அஸ்திரங்களையும், வரங்களையும் அழித்து உன்னுடைய மகன் போல் ஆற்றல் மிக்கவர் யாரும் இருக்க மாட்டார்கள் என சொல்கிறார்கள். அந்தளவு இளமையிலேயே ஆற்றல் மிக்க வரங்களைப் பெற்றவர்தான் அனுமன். அதனால்தான் அவருக்கு அனுமன் என்கின்ற பெயர் ஏற்பட்டது. மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



