காசிக்குப் போனா சன்னியாசின்னு சொல்வாங்க. அதெல்லாம் வயசானவங்க தான் போகணும். செஞ்ச பாவத்தை எல்லாம் தொலைக்க அங்குள்ள கங்கையில நீராடி காசி விஸ்வநாதரைத் தரிசித்தால் போதும். ஆனால் அங்கு போகறது அவ்வளவு சுலபம் இல்லை.
எல்லாருக்கும் அங்கு போகும் வாய்ப்பு கிடைக்காது. பணம் இருக்கும் போகறதுக்கு நேரம் இருக்காது. பணம் இருக்காது. போக மனம் இருக்கும். வசதி இருந்தும் கூட போக முடியாதவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். அப்படின்னா மற்றவங்க பாவம் எல்லாம் தீரவே தீராதா என்றால் தீரும். வாங்க என்ன விவரம்னு பார்க்கலாம்.
காசி சென்று வழிபட முடியாதவர்கள் சிவன்மலை முருகர் கோவில் வந்து வழிபட்டால் போதும். அதற்கு இணையான பலன் கிடைத்து விடும். அதற்கு சாட்சியாக இங்கு ஒரு தீர்த்தமே அமைந்துள்ளது. அதற்கு ஒரு தலவரலாறும் சொல்லப்படுகிறது.
ஒரு பெண் தினமும் இங்குள்ள முருகப்பெருமானைப் பிரார்த்தனை செய்கிறாள். அவளிடம் அனைவரும் காசிக்குப் போனா நாம எல்லா பாவத்தையும் தொலைச்சிடலாம்னு சொல்றாங்க. அவளுக்குப் பயம். எங்கடா என் பாவம் எல்லாம் போகாம போயிடுமோ..? காசிக்குப் போக பணம் இல்லையேன்னு வருந்துகிறாள்.
அதை முருகப்பெருமானிடம் போய் முறையிடுகிறாள். அப்போது அங்கு ஒரு ஊற்று தோன்றுகிறது. அது காசிக்கு இணையான தீர்த்தமாகிறது. அங்கு புனித நீராடி காசியில் நீராடிய பலனைப் பெற்று தன் பாவங்களை நீக்கிக் கொண்டாள். இன்றைக்கும் இந்தத் தீர்த்தத்தைக் காசி தீர்த்தம்னு சொல்றாங்க.
இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட தொலைவில் இருந்து காவடி எடுத்து வழிபாடு செய்வது ஒரு வழக்கமாக உள்ளது. கேட்பதைக் கொடுக்கும், நினைத்ததை நடத்தி வைக்கும் கடவுளாக முருகப்பெருமான் அருள்புரிகிறார். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



