குமரகுருபரர் தனது 5வயது வரை வாய் பேச முடியாதவர். அவரைப் பேச வைத்தவர் முருகர். சிறு வயது முதலே அவர்கள் செய்யாத வைத்தியம் இல்லை. ஒண்ணும் நடக்கல. இந்நிலையில் 48நாள் விரதம் இருந்து திருச்செந்தூர் முருகனை வழிபட்டால் பேசி விடலாம் என்று குமரகுருபரரின் பெற்றோரிடம் கூறினார் ஒருவர். அதன்படி குமரகுருபர் பெற்றோர் விரதம் இருக்க… 48 நாள் ஆகியும் பேசவில்லை.
இனி கடலில் சென்று விழ வேண்டியதுதான் என கிளம்பிச் செல்கையில் முருகர் வந்து அவரது முதுகைத் தட்டி இது என்ன என கேட்க பூ என்கிறார் குமரகுருபரர். வாய் பேச முடியாத தன் குழந்தைப் பேசியதை எண்ணி சந்தோஷப்படுகின்றனர் அவரது பெற்றோர்.
அதன்பிறகு மகனுக்கே இவ்ளோ கருணை என்றால் அம்மாவிற்கு எப்படி இருக்கும் என்று எண்ணி மதுரை சென்று மீனாட்சி அம்மையை வழிபடுகிறார் குமரகுருபரர். அப்போது வருகைப்பருவம் எழுதியதும் மீனாட்சி அம்மையே குழந்தை வடிவில் வந்து அவருக்கு முத்துமாலை பரிசளித்து மறைந்தாராம்.
அப்படி அவர் எழுதியதுதான் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ். உண்மையான பக்தியும், ஆத்மார்த்தமான அன்பும் இருக்கிறதா என்று கேட்டால் அம்பாளைப் பார்த்ததும் ரெண்டு சொட்டு கண்ணீர் வரும். அதைத் தான் மீனாட்சி அம்மையும் விரும்புகிறாள். உள்ளம் உருகி கண்ணீர் பெருகி அம்பாளை நிமிர்ந்து பார்த்தால் நான் இருக்கிறேன்.
நீ ஏன் கவலைப்படுற? சுவாமி எப்போதும் உன்னுடன் இருப்பார். போய்ட்டு வா என்று வழியனுப்புவது போல அவளுடைய மாணிக்க மூக்குத்தி பளீர் என்று இருக்கும். வார்த்தைகளால் விவரிக்க முடியாத பேரின்பம் இது. தொழுநோயால் பாதிக்கப்பட்ட அருணகிரிநாதரையே முற்றிலும் குணமாக்கிப் பாட வைத்தவர் முருகப்பெருமான் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



