தமிழக அரசியல் களம் என்பது கடந்த ஐம்பது ஆண்டுகளாக இருதுருவ அரசியலை மையப்படுத்தியே இயங்கி வருகிறது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளும் தலா 20% முதல் 30% வரையிலான ‘நிலையான வாக்கு வங்கியை’ தங்களுக்குள் பிரித்து வைத்துள்ளன. ஒரு தேர்தல் வெற்றி என்பது இந்த அடிப்படை வாக்குகளுடன் கூடுதலாக 10 முதல் 15 சதவீத வாக்குகளை பெறுவதில்தான் அடங்கியிருக்கிறது. இந்த சூழலில், நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் மூலம் ‘பூஜ்ஜியத்தில்’ இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். அரசியல் வல்லுநர்களின் கணிப்புப்படி, ஒரு புதிய கட்சி முதல் தேர்தலிலேயே 20 சதவீத வாக்குகளை பெறுவது என்பதே மிகப்பெரிய சாதனையாக கருதப்படும். ஆனால், அந்த 20 சதவீத வாக்குகள் விஜய்யை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்குமா என்பதுதான் இப்போதைய மிகப்பெரிய கேள்விக்குறி.
கடந்த கால வரலாற்றைப் பார்த்தால், 2006-ல் விஜயகாந்தின் தேமுதிக சுமார் 8 சதவீத வாக்குகளை பெற்றுப் பல தொகுதிகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது. ஆனால், ஆட்சி அமைக்க தேவையான இடங்களை அந்த வாக்கு சதவீதம் பெற்றுத்தரவில்லை. ஒரு கட்சி 20 சதவீத வாக்குகளை மாநிலம் முழுவதும் பரவலாக பெற்றாலும், அது தொகுதிகளாக மாற வேண்டுமானால் அந்தந்த தொகுதிகளில் மற்ற கட்சிகளை விட அதிக வாக்குகளை பெற வேண்டும். அதாவது, திமுக அல்லது அதிமுக கூட்டணி சுமார் 35 முதல் 40 சதவீத வாக்குகளை குறிவைக்கும் போது, விஜய் வெறும் 20 சதவீதத்தில் நின்றால் அவர் ‘கிங் மேக்கராக’ இருக்க முடியுமே தவிர, ‘கிங்’ ஆக முடிவது கடினம்.
விஜய் 2026-ல் ஆட்சி அமைக்க வேண்டுமானால், அவர் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்குகளை தாண்ட வேண்டும். அந்த ‘மேஜிக்’ நிகழ வேண்டுமானால், திராவிட கட்சிகளின் கோட்டையாக இருக்கும் அந்த 20 சதவீத நிலையான வாக்குகளில் ஒரு பெரும் பகுதியை அவர் உடைக்க வேண்டும். குறிப்பாக, முதல்முறை வாக்காளர்கள் மற்றும் இதுவரை எந்த கட்சிக்கும் வாக்களிக்காத நடுநிலை வாக்காளர்களின் ஒட்டுமொத்த ஆதரவும் அவருக்கு கிடைக்க வேண்டும்.
2026 தேர்தலில் இந்த அதிசயம் நடக்குமா என்பது விஜய்யின் தேர்தல் வியூகம், அவர் அறிவிக்க போகும் திட்டங்கள் மற்றும் மக்களின் அதிருப்தி அலை ஆகியவற்றை பொறுத்தே அமையும். ஒரு புதிய மாற்றத்தை மக்கள் தீவிரமாக விரும்பினால் மட்டுமே 30 சதவீதத்தை எட்டி பிடிப்பது சாத்தியமாகும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
