தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, விஜய்யின் தமிழக வெற்றி கழகம் எடுக்கப்போகும் அரசியல் நகர்வுகள் குறித்து பல்வேறு விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய அரசியல் சூழலில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிகின்றன. இந்த சூழலில், பாஜகவை கூட்டணியில் சேர்ப்பதால் அதிமுகவின் சிறுபான்மையினர் வாக்கு வங்கி கடுமையாக பாதிக்கப்படும் என்றும், அந்த வாக்குகள் இயல்பாகவே த.வெ.க-வை நோக்கி திரும்ப அதிக வாய்ப்புள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இது விஜய்யின் கட்சிக்கு ஒரு மிகப்பெரிய சாதகமான அம்சமாக அமையும் எனக் கருதப்படுகிறது.
ஏற்கனவே தமிழகத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாக்குகள் கணிசமான அளவில் த.வெ.க- பக்கம் சாய்ந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. விஜய்யின் ரசிகர் பட்டாளம் ஒருபுறம் இருந்தாலும், மாற்று அரசியலை எதிர்பார்க்கும் புதிய வாக்காளர்களின் கவனம் த.வெ.க மீது திரும்பியுள்ளது. குறிப்பாக, முதல்முறை வாக்காளர்கள் மற்றும் அரசியலில் அதிரடி மாற்றத்தை விரும்பும் பெண்களின் ஆதரவு விஜய்க்கு பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாக்குகள் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளின் வாக்கு வங்கியில் பெரிய ஓட்டையை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
ஆட்சிக்கு எதிரான ஓட்டுகள் வழக்கமாக பிரதான எதிர்க்கட்சிக்கு செல்லும். ஆனால், இந்த முறை அந்த ஓட்டுகள் சிதற வாய்ப்புள்ளது. ஆட்சிக்கு எதிரான ஓட்டுகளில் குறைந்தபட்சம் 50 சதவீதம் த.வெ.க-வுக்கு கிடைத்தாலே, அக்கட்சி சுமார் 100 இடங்களை கைப்பற்றுவது உறுதி என விமர்சகர்கள் கணிக்கின்றனர். விஜய் முதலமைச்சராகி ஆட்சி அமைக்கிறாரோ இல்லையோ, ஆனால் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரிய கூட்டணிகளும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதை தடுத்து நிறுத்தும் ஒரு ‘கிங் மேக்கராக’ உருவெடுப்பார் என்பதில் மாற்று கருத்தில்லை. இதுவே ஒரு புதிய கட்சிக்குக் கிடைக்கும் மிகப்பெரிய வெற்றியாக கருதப்படும்.
பாஜக இடம்பெற்றிருக்கும் அணியுடன் கூட்டணி அமைத்து, தமிழகத்தில் ஒரு பலவீனமான நிலையை அடைய விஜய் விரும்ப மாட்டார் என்றே தோன்றுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு அங்கமாக இணைந்து, மற்ற கட்சிகளுடன் ஒன்றாக பத்தோடு பதினொன்றாக போவதை விட, தனித்து நின்று தனது பலத்தை நிரூபிப்பதே விஜய்க்கு சரியான வியூகமாக இருக்கும். பாஜகவுடனான கூட்டணி என்பது தமிழகத்தின் திராவிட நிலப்பரப்பில் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதால், விஜய் அந்த பாதையை தவிர்க்க வேண்டும் என்பதே நடுநிலை அரசியல் விமர்சகர்களின் அட்வைஸாக உள்ளது.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே பலமான கூட்டணி கட்டமைப்பை கொண்டுள்ளன. இத்தகைய சூழலில், ஒரு மூன்றாவது சக்தியாக உருவெடுப்பது எளிதான காரியமல்ல. இருப்பினும், விஜய்யின் செல்வாக்கும், தற்போதுள்ள அரசியல் வெற்றிடமும் த.வெ.க-வுக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது. திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை தகர்த்து, ஒரு மாற்று சக்தியாக தன்னை நிலைநிறுத்தி கொள்ள வேண்டுமானால், எந்தவொரு தேசிய கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்துவமான அடையாளத்துடன் களமிறங்குவதே விஜய்க்கு நீண்ட கால பலனை தரும்.
சுருக்கமாக சொன்னால், 2026 தேர்தல் என்பது தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமையப்போகிறது. சிறுபான்மையினர் வாக்குகள், இளைஞர்களின் எழுச்சி மற்றும் ஆட்சிக்கு எதிரான ஓட்டுகள் ஆகிய மூன்றையும் சரியாக ஒருங்கிணைத்தால், விஜய் ஒரு மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுப்பார். மற்ற கட்சிகளின் தயவின்றி தனது சுயபலத்தில் தேர்தலை சந்திப்பதே த.வெ.க-வின் எதிர்காலத்திற்கு நலம் பயக்கும். பத்தோடு பதினொன்றாக இல்லாமல், தனித்து நின்று முத்திரை பதிப்பதே விஜய்யின் உண்மையான அரசியல் வெற்றியாக அமையும் என்பதுதான் தற்போதைய அரசியல் கள நிலவரம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
