சிவபுராணம் 2 முக்கிய ஆன்மிகத் தொகுப்புகளை உள்ளடக்கியது. இதன் முதல் பகுதியை இயற்றியவர் மாணிக்கவாசகர். அடுத்து வியாச முனிவர் இயற்றிய 18 மகா புராணங்களில் ஒன்றான சிவமகாபுராணம். இவை இரண்டும் சேர்ந்ததுதான் நாம் படிக்கும் சிவபுராணம்.
மாணிக்கவாசகர் 9ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சிவபுராணம் என்றால் சிவனின் பழமையான வரலாறு. குறிப்பாக சிவனின் பெருமைகளை இந்தப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன. ‘நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க’ என்ற பஞ்சாட்சர மந்திரத்துடன் பாடல் துவங்குகிறது.
குறிப்பாக சிவபுராணம் விளக்கும் முக்கிய கருத்து இதுதான். அதாவது, உயிர்கள் இப்பிறவித் துன்பத்தில் இருந்து விடுபட்டு இறைவனின் திருவடியை அடையும் வழியைக் காட்டுகிறது. இந்தப் பாடல்கள் யாவும் கல்லையும் கனிய வைக்கும் அற்புத சக்தி படைத்தவை. இறைவனின் எண்குணங்களையும், அடியவர்களுக்கு சிவன் செய்யும் அருளையும் பற்றி விவரிக்கிறது.
அதேபோல வியாசமுனிவர் சமஸ்கிருதத்தில் பாடிய பாடல்கள் தான் சிவமகாபுராணம். இவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சிவபெருமானின் தோற்றம், அவதாரங்கள், அண்டசராசரங்களின் படைப்பு, காத்தல் மற்றும் அழித்தல் பற்றிய செயல்பாடுகளை இவை விரிவாக எடுத்துரைக்கின்றன.
இந்தப் பாடல்களில் வித்யேஸ்வர சம்ஹிதை, ருத்ர சம்ஹிதை மற்றும் கைலாச சம்ஹிதை உள்ளிட்ட பல பகுதிகள் உள்ளன. சிவபெருமானை வழிபடும் முறைகள், விரதங்கள், மந்திரங்களின் பெருமைகளை இந்தப் பாடல்கள் விரிவாக எடுத்துரைக்கின்றன. அதெல்லாம் சரி. சிவபுராணம் படிப்பதால் நமக்கு என்ன நன்மைன்னு தானே கேட்கிறீர்கள்.
பாவவிமோசனம் கிடைக்கும். மன அமைதி அதாவது குடும்பத்தில் ஒற்றுமையும், மன நிம்மதியும் கிடைக்கும். இறுதியில் இறைவனின் திருவருளால் முக்தி கிடைக்கும் வழி பிறக்கும்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



