தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று நடைபெற இருக்கும் நிலையில், லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டு திடலுக்கு குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகம் முழுவதும் இருந்து நேற்று முதலே தொண்டர்கள் வர குவிந்து விட்டதாகவும், இன்று காலை 10 மணிக்கு தொண்டர்கள் மாநாட்டு திடலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்ட நிலையில், கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் 7 மணிக்கே தொண்டர்கள் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், இன்று காலை புதுச்சேரியில் இருந்து மாநாட்டு திடலுக்கு விஜய் வருவதாக திட்டமிட்ட நிலையில், மாநாட்டு திடலுக்கு விஜய் வந்து விட்டதாகவும், நேற்று இரவு புஸ்ஸி ஆனந்த் உள்பட, தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை விஜய் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இன்றைய மாநாட்டில் விஜய் பேசும் போது, தனது கட்சியின் கொள்கைகள், எதிர்கால திட்டங்கள், தமிழ்நாட்டில் நடக்கும் ஊழல்கள், அந்த ஊழலை சரிசெய்யும் விதங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசுவார் என்று தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும், இன்றைய மாநாட்டின் போது சில முக்கிய பிரமுகர்கள் கட்சியில் இணையும் விழா நடைபெறும் என்றும், காணொளி மூலம் வாழ்த்து தெரிவித்த சில முக்கிய பிரபலங்களின் வீடியோக்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
மொத்தத்தில், தமிழக வெற்றி கழகத்தின் இந்த மாநாடு தமிழக அரசியலை புரட்டிப் போட வைக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.