ஆடிப்பெருக்கு விழாவின் சிறப்புகள் என்னவென்று தெரிந்து கொள்வோமா…

By Meena

Published:

ஆடி மாதத்தில் தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புத்தம் புதிய நீர் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் தெய்வமாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ‘ஆடிப்பட்டம் தேடிவிதை’ என்ற பழமொழியும் விளைந்தது.

இந்த ஆற்று நீர் பெருக்கெடுத்து ஓடி வரும் நாளையே ஆடிப்பெருக்கு என்பர். ஆடி மாதம் 18 ஆம் தேதி இது நிகழ்வதால் இதை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவர். நீர் இருந்தால் தான் விவசாயம் செழிக்கும். அதனால் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடும் பண்டிகையை குறிக்கும் நாள் தான் ஆடிப்பெருக்கு என்பதாகும்.

ஆடிப்பெருக்கினைப் பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும், கொங்கு தமிழ் பேச்சு வழக்கில் ஆடி நோம்பி என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாகத் தமிழ் விழாக்கள் நாள்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுவதில்லை. விண்மீன்களை அடிப்படையாகக் கொண்டும், கிழமைகளையும் கொண்டும் நடத்தப்படுகிறது. ஆடி மாதத்தில் 18 வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா இதுவாகும்.

இந்த ஆடிப்பெருக்கு நன்னாளில் மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். கோயில்களில் சென்று வழிப்படவும் செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்து சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து அகல்விளக்கு ஏற்றி வைத்து இந்த வருடம் விவசாயம் செழிக்க வேண்டி வழிபடுவர்.

மேலும் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு நீருக்கு நன்றி செலுத்தி வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள்.அது மட்டுமல்லாமல் தங்கள் வீட்டில் பல விதமான கலப்பு சாதங்கள் ஆன தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம் ஆகியவற்றை செய்து அதை ஏதாவது ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள்.

ஆடிப்பெருக்கில் முக்கியமான ஒன்று தங்கம், வெள்ளி, வீடு, நிலம் போன்றவற்றை வாங்குவதும் புதுத் தொழிலை ஆரம்பிப்பதும் பன்மடங்கு பெருகும் என மக்களால் நம்பப்படுகிறது. மேலும் வியாபாரம் பெருகவும் வீட்டில் செல்வம் சேரவும் சிறப்பு யாகங்களை மக்கள் நடத்தி மகிழ்வர்.

Tags: ஆடி