இப்டி எல்லாமா காமெடி ஷோல பேசுவீங்க.. ராமர், அன்சிதா சொல்லிய வார்த்தை.. குக் வித் கோமாளியால் கொந்தளித்த ரசிகர்கள்..

By Ajith V

Published:

சின்னத்திரை சீரியல் மற்றும் பல ரியாலிட்டி ஷோக்கள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைவதற்கு காரணம் அவை அனைத்தையும் குழந்தைகளுடன் கண்டுகளிக்க முடியும் என்பதால் தான். திரைப்படங்களில் கூட சில வன்முறையான அல்லது கிளாமர் காட்சிகள் வரும் சூழலில் அதனை குடும்பத்தோடு பார்க்க முடியாது என்பதால் வீட்டில் இருக்கும் அனைவரும் தொலைக்காட்சிகளில் வரும் சின்னத்திரை தொடர்களையோ அல்லது சிரிப்பு வரவழைக்கக் கூடிய ரியாலிட்டி ஷோக்களையோ மிக ஆவலாக இருந்து பார்ப்பார்கள்.

ஆனால் தற்போது அப்படிப்பட்ட நிகழ்ச்சியிலேயே அருவருக்கத்தக்க அல்லது கூச்சமான விஷயங்கள் இருந்து வருவது தான் ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் சில சீரியல்களில் நெருக்கமான காட்சிகள் இடம் பெற்றிருக்க அதனை பார்ப்பதற்கே கூச்சமாக இருந்தது என்றும் பலரும் தெரிவித்தனர்.

வீட்டில் இருக்கும் குழந்தைகள் வரை இதை பார்க்க பார்ப்பது தெரிந்தே இப்படி செய்யலாமா என்பது போன்ற கேள்விகளையும் அவர்கள் எழுப்பாமல் இல்லை. இதனிடையே தற்போது அப்படி ஒரு சம்பவம் தான் மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அரங்கேறி உள்ளது.

சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களிலேயே மிக அதிகமான ரசிகர்கள் பட்டாளமும் குழந்தைகள் அதிகம் பார்க்கும் நிகழ்ச்சியாக இருந்து வருவது தான் குக் வித் கோமாளி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி அனைத்துமே காமெடி கலந்த சமையலை வெளிப்படுத்துவதால் பலரையும் எளிதாக இந்த நிகழ்ச்சி கவர்ந்திழுத்து வருகிறது.

நான்கு சீசன்கள் தொடர்ச்சியாக பெற்ற வெற்றியின் காரணமாக தற்போது ஐந்தாவது சீசனும் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதில் வரும் ஒரு வசனம் தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. குக் வித் கோமாளி ஐந்தாவது சீசனில் குரேஷி, ராமர், புகழ், கெமி, அன்சிதா உள்ளிட்ட பலரும் கோமாளிகளாகவும், சுஜிதா, ப்ரியங்கா, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் போட்டியாளர்களாகவும் களமிறங்கி வருகின்றனர்.

அப்படி ஒரு சூழலில் சமீபத்தில் அரங்கேறி இருந்த எபிசோடு ஒன்றில், பாகுபலி படத்தில் வரும் தேவசேனா வேடம் போட்டு அன்சிதா வந்த சமயத்தில் அவரிடம் பேசிய ராமர், “கத்தியை கொடுடி தேவ..” என இழுத்து பின்னர் தேவசேனா என கூறினார். இந்த வார்த்தையே மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்ப, இந்த எபிசோடு முடிந்து அடுத்த சில வாரம் கழித்து, ராமரிடம் பேசி இருந்த அன்சிதா, “வாயை மூடுறா சு..” என இழுத்து பின்னர் சுண்ணாம்பு என ராமரை பார்த்து கூறுகிறார்.

தொலைக்காட்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்ப்பார்கள் என்ற புரிதலே இல்லாமல், மோசமான வார்த்தைகளை சொல்ல வந்தது போல குறிப்பிட்டு பின்னர் வேறு வார்த்தையை பேசிய ராமர் மற்றும் அன்சிதாவையும், விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியையும் தற்போது ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.