எங்கே தேடினாலும் கிடைக்காத பேரின்பம் உங்களுக்கு வேண்டுமா? ரொம்ப சிம்பிள்…இதுதான் வாழ்க்கை!!!

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் இன்பத்தைத் தேடித் தான் நாளும் ஓடிக்கொண்டே இருக்கிறான். கல்யாணம் பண்ணினால் தான் சந்தோஷம். படித்து அரசு வேலை பார்த்தால் தான் சந்தோஷம். வெளிநாடுகளுக்குப் போறது தான் சந்தோஷம். நம் பிள்ளைகளை நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்தால் தான் சந்தோஷம்.

நிறைய பணம் சம்பாதிப்பது தான் சந்தோஷம். பக்கத்து வீட்டார் போல ஆடம்பரமாக வாழ்வது தான் சந்தோஷம் என ஓடி ஓடி அதை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறார்கள். பக்கத்து வீட்டுக்காரன் கார் வாங்கினால் அதை விட பெரிய கார் வாங்க வேண்டும். மாடர்ன் டிரஸ்ஸாக போட்டு நம்மை நாலு பேர் பார்க்க வேண்டும்.

அல்லது பிரம்மாண்டமான வீடு கட்ட வேண்டும். இப்படித் தான் நிறைய பேர் சிந்தித்து செயல்படுகின்றனர். இது தவறல்ல. அதே நேரத்தில் இதனால் வரும் இன்ப துன்பங்களையும் நாம் ஏற்றே ஆக வேண்டும். இங்கு நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியத்துவம் என்னவென்றால் நம் சிந்தனைகள் முழுவதும் புறத்தே தான் விரிகிறது. மற்றவர்கள் பற்றி குறை சொல்வதில் தான் நம் மனம் லயிக்கிறது.

நம்மைப்பற்றி யாரும் கவனிப்பதுமில்லை. தெரிந்து கொள்வதிலும் அக்கறை கொள்வதில்லை. யாரும் யாரையும் திருத்த முடியாது. குழந்தைகளைத் திருத்த முடியாது. மனைவியை திருத்த முடியாது. நம்மால் நம்மை மட்டும் தான் திருத்த முடியும். பிறரை நாம் திருத்த முற்படும்போது நம் வாழ்நாள் முழுவதுமே துன்பமயமாகி விடுகிறது.

தினசரி உங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் முன்னேறுவதற்கு முயற்சி எடுங்கள். புரிந்து செயல்படுங்கள். அதுதான் ஆன்மிகம்.

கடவுள் மேல் மிகுந்த பக்தியாக இருந்தாலும் இன்பமே இல்லை எனவும் பலர் கவலைப்படுவதுண்டு. கடவுளிடம் எல்லோருமே வேண்டுவது நான் இன்பமாக இருக்க வேண்டும் என்றே வணங்கி வருகின்றனர். இது பக்தி அல்ல. எதிர்பாராத அன்பை ஒருவர் மீது செலுத்தும்போது தான் பக்தியாக மாறுகிறது. தேவையைத் துதிப்போர்க்கு முக்தி தான் இல்லையடி குதம்பாய்…என்று சொல்லியிருக்கிறார்கள்.

முக்தி அடையணும்கறதும் ஒரு தேவை தான். கடவுள்கிட்ட கோவில் கோவிலாகப் போய் நான் முக்தி அடையணும்னு வேண்டினாலும் முக்தி அடைய முடியாது. எல்லோரும் அவரவர் தேவைகளைத் தான் கடவுளிடம் வேண்டுகின்றனர். அப்படின்னா நாம என்ன தான் பண்ணனும்னு கேட்கிறீர்களா? எதிர்பார்ப்போடு எந்த ஒரு செயலை செய்தாலும் அது நமக்கு துன்பத்தைத் தான் தரும்.

கடவுளிடம் போய் இவ்வளவு வேண்டி இவ்வளவு காணிக்கை போட்டேன். ஆனால் எனக்கு எந்த நல்லதும் நடக்கவில்லை என உள்ளம் குமுறுகின்றனர். நாம் வாழ்க்கையில் எந்த நிலையில் இருந்தாலும் அதற்கு முழு காரணம் நாம் தான். இது தான் வாழ்வில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய அடிப்படை.

bungalaw
bungalaw

நாம் தான் கடவுள். வெளியில் தேடத் தேவையில்லை. நமக்குள் தான் இன்பம், துன்பம், நல்லது, கெட்டது, சரி, தப்பு எல்லாம் உள்ளது. இதை நாம் தான் உருவாக்குகிறோம். வெளியில் இருந்து வருவதில்லை. இந்த இன்ப துன்பங்களுக்கு நாம் தான் காரணம் என்பதை அறியாமல் பிறர் மீது பழியை சுமத்தி விடுகிறோம்.

நாம் நம்மால் முடிந்த சில உதவிகளை பிறருக்குச் செய்தாலே அது தான் சிறந்த பக்தி. அதற்கு காசு பணம் தேவையில்லை. சாலையோரத்தில் வழி தெரியாமல் நின்று கொண்டுள்ள பார்வையற்ற ஒருவரை சாலையைக் கடக்க உதவினால் அதுவே பக்தி.

இது எந்தவித பலனையும் எதிர்பாராமல் செய்யும் உதவி. நடந்து செல்லும் பாதையில் ஒரு முள் கிடந்தால் அதை எடுத்து ஓரமாகப் போடுங்கள். அதுதான் பக்தி. எதையும் வெளியில் தேடாதீர்கள். அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்திலும் உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

help blind man
help blind man

பிறர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறோமோ அதை நீங்களே உங்களுக்குச் செய்யுங்கள். அடுத்தவரின் டிரஸ் சரியில்லை என்பதை விட நமது டிரஸ் எப்படி உள்ளது ஒழுங்காக உள்ளதா அதை எப்படி சரிசெய்வது என்று அதற்கான செயலைச் செய்யுங்கள். உங்களுக்குள் இருந்து கிடைக்கும் அன்பு எனும் ஊற்றுதான் பரமானந்தம். அதுவே பேரானந்தத்தைத் தரும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

இயற்கையிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். அது தினமும் உங்களுக்கு ஏராளமான பாடங்களைக் கற்றுத் தரும். சூரியன் யாரிடமும் கேட்டா தினமும் ஒளியைத் தருகிறது. நல்லவர், கெட்டவர் என்று பேதம் பார்க்கிறதா? கடல் நீர் யாருக்கு உரிமையானது? நிழல் தரும் பெரிய மரங்களை எடுத்துக் கொள்ளுங்கள். வாசனை உள்ள மலர்களைப் பாருங்கள்.

இவ்வளவு ஏன், மிருகங்களும், பறவைகளும் கூட எந்த பிரதிபலனும் பார்ப்பதில்லை. தனக்குத் தேவையான உணவைத் தானே தேடிக்கொள்கின்றன. இவை தான் நமது வாழ்வை செம்மையாக வழிநடத்திச் செல்ல உதவி செய்யும் ஆசான்கள். இன்னும் சொல்லப்போனால் பிரதிபலன் பாராமல் அன்பு செலுத்துகையில் நாம் பார்க்கும் அனைவருமே குருக்கள் தான். எல்லோரிடம் இருந்தும் நம்மால் பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews