விஜய்யின் அடுத்த படத்தில் விஜயகாந்தின் கேமியோ.. பலரையும் வியப்பில் ஆழ்த்திய பின்னணி..

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி அரசியலில் என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகர் விஜய். நீண்ட காலமாகவே விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என ஒரு ஊகம் இருந்து வந்த சூழலில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து ரசிகர்கள் ஆதரவுடன் கலக்கலாக அரசியலில் காலடி எடுத்து வைத்ததுடன், 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒரு பக்கம், அவரது ரசிகர்களில் பலர் விஜய்யின் அரசியல் வரவால் மகிழ்ச்சி அடைந்தாலும் இன்னொரு பக்கம், சிலர் வேதனையிலும் ஆழ்ந்துள்ளனர். இதற்கு காரணம், அரசியலில் நுழைவதால் சினிமாவிற்கு எண்டு கார்டு போட்டுள்ள விஜய்யின் முடிவு தான். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வரும் தளபதி விஜய், அடுத்ததாக ஒப்பந்தமாகி உள்ள ஒரு படத்தில் நடித்து முடித்ததும் சினிமா பயணத்தை முடித்து விட்டு முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்த போவதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் இந்த ஆண்டு தீபாவளி விருந்தாக படம் வெளியாகும் என்றும் தெரிகிறது. இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் நிலையில் நடிகர் விஜய்யுடன் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், அஜ்மல், பிரபுதேவா, மைக் மோகன், யோகி பாபு, சினேகா, லைலா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

மேலும் கோட் திரைப்படம் சயின்ஸ் பிக்ஷ்ன் திரைப்படமாக உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், நடிகர் விஜய் இரு கதாபாத்திரங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கோட் திரைப்படத்தில் மறைந்த நடிகர் மற்றும் அரசியல் தலைவர் விஜயகாந்த் தோன்ற உள்ளது பற்றிய கருத்து ரசிகர்கள் பலரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக மட்டுமில்லாமல் சிறந்த மனிதராகவும் இருந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாத இறுதியில் உடல்நல குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் சென்னையில் கூடி கண்ணீர் மல்க விடை கொடுத்திருந்தனர். அவரது மறைவால் இன்னும் சில ரசிகர்கள் கலங்கிக் கொண்டிருக்க தற்போது கோட் படம் பற்றிய தகவல் அவர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தியுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் வளர்ந்து வரும் AI தொழில்நுட்பம் மூலம் நடிகர் விஜயகாந்த் கேமியோ கதாபாத்திரத்தில் கோட் படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றது. ஏற்கனவே AI தொழில்நுட்பம் மூலம் பலரது குரல்களைப் போல பாடல்களும், பலர் பேசுவது போல வீடியோக்களும் உருவாகி வரும் சூழலில் நிச்சயம் இந்த விஷயம் ரசிகர்களை இன்பக்கடலில் ஆழ்த்தும் என்று தான் தெரிகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.