“அது மண்டையில ஓடிக்கிட்டே இருக்கு”.. சிறு வயதில் வெற்றிமாறனின் வாழ்க்கையையே மாற்றிய தந்தையின் அட்வைஸ்..

தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் வெற்றிமாறன். பொல்லாதவன் திரைப்படம் தொடங்கி விடுதலை படத்தின் முதல் பாகம் வரை அவர் இயக்கிய ஆறு திரைப்படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இதுவரை வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான எந்த படங்களும் தோல்வியை சந்திக்கவில்லை என்ற சூழலில் அடுத்ததாக விடுதலை படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகி வருகிறது.

வெற்றிமாறனின் முந்தைய திரைப்படங்களைப் போல இதுவும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் சில சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்த படம் திரையிடப்பட்டு வருகிறது. வெற்றிமாறனின் ஒவ்வொரு படங்கள் பற்றிய அறிவிப்பும் வெளிவரும் போது அதற்கு முந்தைய படங்களை விட அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதுடன் மட்டுமில்லாமல் அதை பூர்த்தி செய்வதையும் வழக்கமாகக் கொண்டு வந்துள்ளார்.

மேலும் மிக நுட்பமான ஒரு கதைகளத்தை தேர்ந்தெடுத்து அனைவரும் ரசித்து பார்க்கும் வகையில் அதனை தயார் செய்து மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணக்கூடிய வெற்றிமாறனின் வாழ்க்கையில், சிறு வயதிலேயே அவரது தந்தை கொடுத்த அசத்தலான அறிவுரையை பற்றி தற்போது பார்க்கலாம்.

இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் வெற்றிமாறன் பேசுகையில், “நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது தேர்வில் காப்பி எடுத்து மாட்டி விட்டேன். இது பற்றி என் தாயிடமும், சகோதரியிடமும் நான் பொய் சொல்லி அது வேறொருவர் காப்பி அடித்ததாகவும் தன்னை மாட்டி விட்டதாகவும் பொய் சொல்லி தப்பித்து விட்டேன். ஆனாலும் அன்று வேலை முடித்து விட்டு திரும்பி வந்த என் தந்தை, நான் தான் காபி அடித்து மாட்டி விட்டேன் என்பதை தெரிந்து கொண்டார்.

இரவு இரண்டு மணி அளவில் என்னை அவர் என்னை எழுப்பினார். அதிக நேரம் நான் தூங்குவது போல் நடித்தாலும் அதனை தொடர முடியாததால் எழுந்து விட்டேன். அப்போது என்னிடம், ‘நாம் படிப்பது பாஸ் ஆவதற்கு கிடையாது. என்ன கற்றுக் கொள்கிறோம் என்பதை தெரிந்து கொள்வதற்காக தான். உனக்கு ஒன்று தெரியாமல் நீ பாஸ் ஆக வேண்டும் என்று அவசியமில்லை. பாஸ் ஆக வேண்டும் என்பது நம் நோக்கமே இல்லை. கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் நம் நோக்கம்’ என்று என்னிடம் கூறினார். அது என் தலையிலே அப்படியே பதிந்துவிட்டது” என வெற்றிமாறன் கூறினார்.

பலரது பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகள் கற்றுக் கொள்வதை விட பாஸ் ஆக வேண்டும் என்பதில் முனைப்பு காட்டும் சூழலில், பல ஆண்டுகளுக்கு முன்பே வெற்றிமாறனின் தந்தை அவருக்கு கொடுத்த அறிவுரை பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...