வாக்கு தவறும் பெண் – திருப்பாவை பாடலும், விளக்கமும் -14



பாடல்

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கற் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோவில் சங்கு இடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய், நாணாதாய்! நா உடையாய்!
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

பொருள்…

இளம் நங்கையே! உன் வீட்டின் பின்புறத் தோட்டத்தில் உள்ள தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் இதழ்களை விரித்து மலர்ந்துள்ளன. ஆம்பல் மலர்கள் இதழ்களை மூடிக் கிடக்கின்றன. காவி உடையும், வெண்பற்களும் கொண்ட துறவிகள் திருக்கோவில் சன்னிதியில் சங்குகளை ஊதச்சென்று விட்டனர். நாளை நீராட எங்களை முந்தி எழுப்புவேன் என்று சொல்லிவிட்டுச் சென்றவளே! வாக்குத் தவற வெட்கப் படாதவளே! சங்கு, சக்கரம் ஏந்தி நின்ற கைகளையும், தாமரை மலர்போன்ற கண்களையும் உடையவன் கண்ணன். அவனை போற்றிப் பாட எழுந்துவா!

விளக்கம்..

இரவில் மலரும் ஆம்பல் மலர்கள் இரவுவேளை முடிந்ததும், சுருங்க தொடங்கி, பகலில் மலரும் செங்கழுநீர், தாமரை மலர்கள்லாம் இதழ் விரிக்க தொடங்கிவிட்டது. துறவிகள்கூட கோவிலுக்கு சென்று சங்கூதி இறைவனை வழிபட ஆரம்பித்துவிட்டனர். நாளை உங்களுக்கு முந்தி எழுந்து காத்திருப்பேன் என சொன்னவள், வாக்கு தவறி உறங்கலாமா?! எழுந்து வா சங்கு சக்கரமேந்தி தாமரை மலர்பாதம் கொண்ட கண்ணனை தொழுவோம் என தோழியை எழுப்புவதாய் அமைந்துள்ளது இப்பாடல்..

திருப்பாவை பாடலும், விளக்கமும் தொடரும்…

Published by
Staff

Recent Posts