மார்க் ஆண்டனிக்காக பயந்து ஓடவில்லை.. சந்திரமுகி 2 ரிலீஸ் தாமதத்திற்கு இதுதான் காரணம்.. பி. வாசு பளிச்!

இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி சந்திரமுகி 2 திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி சந்திரமுகி 2 வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படம் மட்டுமே அந்த தேதியில் சோலோவாக வெளியானது.

நடிகர் விஷால் மற்றும் லைகா தயாரிப்பு நிறுவனம் இடையே மோதல் ஏற்பட்டு இருந்த நிலையில், அதன் காரணமாகத்தான் மார்க் ஆண்டனி திரைப்படத்துடன் சந்திரமுகி 2 வை போட்டி ரிலீசாக வெளியிடவில்லை என சினிமா வட்டாரத்திலேயே பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் பி வாசு சந்திரமுகி 2 திரைப்படம் தள்ளிப் போனதற்கு உண்மையான காரணம் என்ன என்பது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

ரஜினிகாந்தின் சந்திரமுகி:

பி. வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, மாளவிகா, வடிவேலு, பிரபு, நாசர், மனோபாலா, வினித் உள்ளிட்ட பலர் நடிப்பில் 17 ஆண்டுகளுக்கு முன்னதாக சந்திரமுகி திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது.

வித்யாசாகர் இசையில் அந்த படத்தில் இடம் பெற்ற பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. தேவுடா பாடலில் தொடங்கி ராரா பாடல் வரை எல்லாமே வெறித்தனமாக வெற்றி பெற்றன. படமும் சுமார் 1000 நாட்கள் ஒரு குறிப்பிட்ட தியேட்டரில் ஓடி சாதனை படைத்தது.

ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2:

இந்நிலையில், மீண்டும் பி வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 திரைப்படம் உருவாகியுள்ளது. முருகேசன் கதாபாத்திரத்தில் நடித்த வடிவேலுவை தவிர மற்ற எல்லோருமே புதிய நடிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இந்தப் படத்தில் சந்திரமுகி யாக நடித்துள்ளார். வேட்டையனாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். மேலும், ராதிகா சரத்குமார், வடிவேலு, லட்சுமி மேனன், மகிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே, மறைந்த நடிகர்களான மனோபாலா, ஆர் எஸ் சிவாஜி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

480 ஷாட்கள் காணவில்லை:

ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடித்த ஆர்ஆர்ஆர் படத்திற்கு இசையமைத்து ஆஸ்கர் விருதை வென்ற மரகதமணி கீரவாணி இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான சந்திரமுகி 2 டிரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், சந்திரமுகி 2 திரைப்படத்தின் ரிலீஸ் தாமதம் குறித்த கேள்விக்கு திடுக்கிடும் பதிலை பி வாசு கூறியுள்ளார். அந்த படத்தில் இருந்து சுமார் 480 ஷாட்கள் கடைசி நேரத்தில் காணாமல் போய்விட்டது. அதை தேடி கண்டுபிடித்து மீண்டும் எடிட் செய்யத்தான் இரண்டு வார கால தாமதம் ஆகிவிட்டது என கூறியுள்ளார்..

இத்தனை பெரிய படத்திற்கு பணியாற்றும் எடிட்டர் சொன்ன நேரத்தில் சரியாக எடிட் செய்யாமல் 480 ஷாட்களை எப்படி மிஸ் செய்தார் என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் தற்போது எழுப்பி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews