தம்பதியர் ஒற்றுமைக்காக மதுராந்தகம் ஏரி காத்த கோதண்டராமனை வழிபடுங்கள்!! – ஆலயம் அறிவோம்.

குடும்ப ஒற்றுமை, தம்பதியர்கள் தங்களுக்கிடையிலான கருத்து வேற்றுமைகள் நீங்க, திருமண வரம் கிடைக்க வழிபட வேண்டிய தலம் ஏரி காத்த கோதண்ட ராமன் ஆலயம், மதுராந்தகம். ராம நவமியான இன்று இத்தலத்தினை பற்றி பார்க்கலாம்.


கிளியாற்றங்கரையில் மதுராந்தக சோழரின் நினைவாக இன்று மதுராந்தகம் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த ஊர் ஆதிகாலத்தில் “வகுளாரண்யம்” என்ற பெயர் பெற்றது. கல்வெட்டுக்களில் “மதுராந்தக சதுர்வேதி மங்கலம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ள இவ்வூர் சோழ மன்னனால் வேதம் ஓதும் அந்தணர்களுக்கு மான்யமாக அளிக்கப்பட்டது. பிரஹ்மவைர்த்தம், பார்க்கவம் போன்ற புராணங்களில் இந்தத் தலத்தின் பெருமைகள் சொல்லப்பட்டிருக்கு.


விபண்டக மகரிஷி என்பவர் கிளியாற்றின் கரையில் தவம் புரிந்தபோது இராமபிரானையும் இலட்சுமணரையும் தனது குடிலுக்கு வரவழைத்து உபசரிக்க விரும்பி, அழைப்பு விடுத்தார். சீதை ராவணன் பிடியில் இருந்த காலக்கட்டமது. சீதையை மீட்டு, அயோத்திக்கு செல்லும்போது வருகிறோம் என்று பதில் அனுப்பினார் இராமர். ராவணனை வீழ்த்தியபின் பரதன் தீக்குளிப்பதை தடுக்கவும், தாய்மார்களை காணவும், அயோத்தி மக்களின் துயர் துடைக்கவும் அவசரம் அவசரமாக இராமர் அயோத்திக்கு திரும்பும்போது தான் கொடுத்த வாக்கை மறந்து புஷ்பக விமானத்தினை நேராய் அயோத்திக்கு செல்ல உத்தரவிட்டார். புஷ்பக விமானம் இந்த இடத்தை கடக்க முடியாதவாறு மலையென உயர்ந்து மறித்து நின்றார் விபகண்ட மகரிஷி. மகரிஷியை கண்டதும் விருந்துக்கு வருவதாய் தான் அளித்த வாக்கு நினைவுக்கு வர, விமானத்திலிருந்து இறங்கி , சீதையின் கரத்தைப் பற்றியவாறு ராமன் காட்சிக் கொடுத்ததாகவும், விருந்து உபச்சாரங்களை ஏற்றுக்கொண்டதாகவும், அயோத்திக்கு செல்லும்முன் கல்யாண கோலத்தில் மகரிஷிக்கு காட்சியளித்ததாகவும் தலபுராணம் சொல்கிறது. விபண்டக மகரிஷியும் கருவறையிலேயே உள்ளார். மேலும், ஆழ்வார்களில் பக்திசாரர் என்றழைக்கப்பட்ட திருமழிசை ஆழ்வார் முக்தி அடைந்த தலம் இதுவே. சுகர் என்ற மகரிஷியும் தவம் செய்த இடம் இதே மதுராந்தகம்தான்.


வைணவ சித்தாந்தத்தின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டிய ஸ்ரீராமானுஜருக்கு வைஷ்ணவ தீட்க்ஷயாகிய பஞ்ச ஸம்ஸ்காரங்கள் செய்யப்பட்டது இத்தலத்தில் உள்ள மகிழ மரத்தடியில்தான். அந்த மகிழ மரம்தான் தல விருட்சமாக உள்ளது. 1967-ம்ஆண்டில் இக்கோவிலில் திருப்பணிகள் நடந்தபோது ஒரு சுரங்கத்தில் நவநீதக் கண்ணமூர்த்தியும், பஞ்சபாத்திரங்களும் சங்கு சக்ரங்களும் கிடைத்தன. இவை ராமானுஜரின் பஞ்சஸமஸ்காரத்திற்கு அவரது ஆசாரியர் பெரிய நம்பியால் உபயோகப்படுத்தப்பட்டவையாகும் என்பதால் இன்றும் அவை இராமானுஜரின் சந்நிதியில் வைக்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம்.


மதுராந்தகத்தில் உள்ள பெரிய ஏரியானது மழைக்காலங்களில் உடைத்துக்கொண்டு பெருத்த சேதத்தை விளைவிக்கும். கிழக்கு இந்தியக் கம்பெனி கலெக்டராக இருந்த லயனல் பிளேஸ் பலமுறை கரையைச் சீர்படுத்தியும் பலனில்லை. மதுராந்தகத்தில் அப்பொழுது கனமழைப் பெய்துக் கொண்டிருந்தது. ஏரியில் நீர் ததும்பி நின்றது. இன்னும் கொஞ்சம் மழைப் பெய்தாலும் ஏரி உடைந்துவிடும் என்ற பதட்டமான சூழலில் ஏரியின் கரையைப் பலப்படுத்த வேண்டுமென கலெக்டர் முயன்றார். என்ன செய்யலாம் என அவர் யோசித்தபோது
ஜனகவல்லி தாயார் சந்நதியைப் சீர்படுத்தும் நோக்கத்தில் ஊர்பொதுமக்கள் கற்களை வாங்கிக் குவித்து வைத்திருந்தது நினைவுக்கு வந்தது. அதை ஏரியின் கரையைப் பலப்படுத்தப் பயன்படுத்திக்கொள்ளலாமா? என . ஊர் மக்களிடம் அனுமதி இராமபிரானின் மகிமையை எடுத்துச் சொல்லி, கற்களை கொடுக்க மறுத்தனர். கோபமடைந்த கலெக்டர் உங்கள் இராமர், அத்தனை வல்லமையுடையவர்! என்றால், இன்று இந்த ஏரி உடையாமல் காக்கட்டும்! நானே சீதைக்குச் சன்னதி அமைத்துத் தருகிறேன்! என்று சொல்லி இருக்கிறார். அதற்கு கலெக்டர், 1825-ம் ஆண்டில், இம்முறை மழைகாலத்தில் ஏரி உடையாமல் இக்கோவிலில் உறையும் ராமர் ஏரியையும், மக்களையும் பெரும் சேதத்தினையும் காப்பாற்றினால் ஜனகவல்லித் தாயார் என்ற தாயாரின் சந்நிதியைக் கம்பெனி செலவிலேயே கட்டித் தருவதாக எழுதி கையொப்பமிட்டு வாக்களித்தாராம்.


அன்றிரவு கனமழைப் பெய்ய, ஏரி உடைந்துவிடுமோ என நினைத்து குதிரையில் ஏறி, மதூராந்தகம் ஏரியைப் பார்வையிட்டாராம் கலெக்டர். ஆனால் என்ன அதிசயம்! இரவில் இரு ஆண்கள் கையில் வில், அம்புகளுடன் ஏரியைச் சுற்றி வந்து பாதுகாப்பதைக் கண்டாராம். நிலவொளியில் அவர் கண்ட தெய்வ தரிசனம் அவரை மெய்சிலிர்க்க வைத்தது. அப்படியே நெடுசாண்கிடையாக விழுந்து வணங்கிய கலெக்டர், இன்னொரு அதிசயத்தையும் கண்டார். அத்தனை கனமழைப் பெய்தும், சிறிது கூட நீர்மட்டம் உயராதிருப்பதையும் கண்டார். இதனால் மகிழ்ந்தக் கலெக்டர், ஜனகவல்லித் தாயார் சந்நிதியை தான் வாக்களித்தபடி கட்டிக் கொடுத்தாராம். இன்றும் தாயார் சந்நிதியில் கலெக்டரின் இந்தத் தர்மம் பற்றிய தகவல் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இதனால் இந்த தலத்து இராமபிரானை ஏரி காத்த கோதண்டராமர் என்றே அழைக்கப்படுகின்றார்.

கோவிலில் நின்ற திருக்கோலத்தில் மூலவராகக் கோதண்டராமர் கல்யாண கோலத்தில் சீதாதேவியின் கரத்தைப் பற்றியவாறு, திருமணக்கோலத்தில் இலட்சுணருடன், விபகண்ட மகரிஷிக்குக் காட்சி தருகிறார். உற்சவ மூர்த்தியான கோதண்டராமர் சற்றுப் பெரிய வடிவினராக சீதை, இலட்சுணருடன் காட்சித் தருகிறார்.
சற்றே சிறிய அளவில் உள்ள மற்றொரு உற்சவமூர்த்தியே கருணாகரப் பெருமாள். அவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி உள்ளார். இவரைத்தான் இராமபிரானாக விபாண்டக மஹரிஷி மரித்து தனக்குக் காட்சி அளிக்கும்படி வேண்டினாராம்.
கருணாகரப் பெருமாளின் நாச்சியாரே ஜனகவல்லித் தாயார். இவர் தனி சந்நிதியில் மூலவராகவும், உற்சவராகவும் உள்ளார். இவரது சந்நிதிதான் ஆங்கிலேய கலெக்டரால் கட்டிக் கொடுக்கப்பட்டது. எல்லா உற்சவங்களும் கருணாகரப் பெருமாளுக்கே.
ஸ்ரீராமநவமி வழிபாடு மட்டும் கோதண்டராமருக்கு நடைபெறும்.


ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜ கோபுரம் நம்மை வரவேற்கின்றது. சுவாமி சன்னதிக்கு வலப்புறம் ஜனகவல்லித் தாயார் சன்னதி உள்ளது. ஜனகராஜாவின் மகளாக வளர்ந்ததால் இப்பெயர் வந்தது.
மற்றும் பிற சந்நிதிகளில் ஆண்டாள், விஷ்வக்ஸேனர், இராமானுஜர், பெரியநம்பிகள், நிகமாந்த மகாதேசிகன், மணவாள மாமுனிகள் உளளனர். இராமர் திருமணக் கோலத்தில் விபகண்ட மகரிஷிக்குக் காட்சியளிபாபதால், அனுமன் இல்லை. ஆஞ்சநேயர், இராமபிரான் கோவிலுக்கு எதிரில் தனி சந்நிதியில் கோயில் கொண்டுள்ளார். சரித்திரப்புகழ் பெற்ற ஏரியைக் காணக்கோவில் அருகில் உள்ள பாதை வழியே படிகள் உள்ளது. ஏரிக்கும் இந்தப் படிகள் உள்ள நடைபாதைக்கும் நடுவில் வண்டிகள் செல்லும் பாதை உள்ளது.

அமைவிடம்: சென்னை – திருச்சி ஜி.எஸ்.டி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டிலிருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது ஏரி காத்த ராமர் கோவில்.

Published by
Staff

Recent Posts