பொழுதுபோக்கு

பும்ராவுக்கே ஆட்டம் காட்டிய ஹர்ஷல் படேல்.. மலிங்காவின் அபார சாதனையை நெருங்கிய பவுலர்..

இந்திய அணியில் இளம் வீரர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் நடப்பு ஐபிஎல் தொடரில் கூட பந்து வீசி சிறப்பாக விக்கெட்டுகளை வீழ்த்தி வருகின்றனர். பேட்டிங்கிற்கு அதிக சாதகமாக இந்த ஐபிஎல் சீசன் விளங்கி வரும் சூழலில், இதற்கு நடுவே தங்களது திறனை நிரூபித்து பலரும் விக்கெட்டுகளை பார்ப்பதற்கே மிகவும் வியப்பாக தான் உள்ளது.

இந்திய அணிக்காக டி 20 உலக கோப்பை தொடரில் இடம்பெற்றுள்ள நம்பர் 1 பந்து வீச்சாளர் பும்ரா, இதுவரை 11 போட்டிகளில் ஆடி 17 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். அவரை போலவே மற்றொரு இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல், அதே போன்று 11 போட்டிகள் ஆடி 17 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக, 11 போட்டிகளில் ஆடியுள்ள வருண் சக்கரவர்த்தி 16 விக்கெட்டுகளையும், 8 போட்டிகளில் மட்டுமே ஆடி 15 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளார் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர் நடராஜன்.

பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோருக்கு சவால் கொடுக்கும் வகையில், தமிழக வீரர்களான வருண் சக்கரவர்த்தி மற்றும் நடராஜனும் டாப் லிஸ்டில் இருப்பது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. இதற்கிடையே, இந்த லிஸ்டில் தற்போது முன்னணியில் இருக்கும் ஹர்ஷல் படேலும் தற்போது பலரை வியந்து பார்க்க வைத்துள்ளார்.

இதற்கு முன்பாக, அவரது பந்து வீச்சு அதிக அளவில் விமர்சனத்தை தான் சந்தித்து வந்தது. ஒரு சில விக்கெட்டுகளை ஹர்ஷல் படேல் எடுத்தாலும் அதிக ரன்களை எதிரணியினருக்கு விட்டுக் கொடுப்பதை தான் வழக்கமாக வைத்திருந்தார். ஆனால், இந்த சீசனில் அப்படியே நேர்மாறாக புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ள ஹர்ஷல் படேல், ரன்கள் குறைவாக கொடுப்பதுடன் முக்கிய விக்கெட்டுகளையும் தொடர்ந்து கைப்பற்றி வருகிறார்.

சமீபத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி தோல்வி அடைந்திருந்தாலும், டேரில் மிட்செல், தாக்கூர் மற்றும் தோனியின் விக்கெட்டை கைப்பற்றி அசர வைத்திருந்தார் ஹர்ஷல் படேல். இதே ஃபார்ம் தொடரும் பட்சத்தில் வரும் நாட்களில் அவர் இந்திய அணிக்காகவும் தொடர்ந்து ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தான், ஐபிஎல் தொடரில் சிறந்த பந்து வீச்சாளராக இருக்கும் பும்ரா, சாஹல் ஆகியோரை முந்தி அசத்தலான சாதனைகளை சொந்தமாக்கி உள்ளார் ஹர்ஷல் படேல். ஐபிஎல் வரலாற்றில், 100 இன்னிங்ஸ்களில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் மலிங்கா முதலிடத்தில் உள்ளார் (146 விக்கெட்டுகள்).

இவருக்கு அடுத்த இடத்தில் 126 விக்கெட்டுகளுடன் ரஷீத் கான் இருந்து வந்த நிலையில், அதனை ஓவர் டேக் செய்த ஹர்ஷல் படேல், 128 விக்கெட்டுகளை 100 இன்னிங்ஸ்களில் எடுத்துள்ளார். இந்திய பந்து வீச்சாளர்களில் சாஹல் 121 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார் 120 விக்கெட்டுகளையும் எடுத்தது தான் அதிகபட்சமாக இருந்தது.

இதே போல, நடப்பு ஐபிஎல் சீசனில் டெத் ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பும்ராவின் சாதனையை தற்போது 11 விக்கெட்டுகள் எடுத்து முந்தி அசத்தி உள்ளார் ஹர்ஷல் படேல்.

Published by
Ajith V

Recent Posts