போராளியாக புரட்டி எடுக்க வருகிறார் இசை அசுரன்!.. ரிபெல் டீசரை வெளியிட்ட சூர்யா!

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து நடித்துள்ள ரிபெல் படத்தின் டீசர் வெளியானது.

நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட ரிபெல் பட டீசரில் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள வெங்கடேஷ், ஷாலு ரஹீம், கருணாஸ், ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், சுப்ரமணிய சிவா ஆகியோர் மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

ஜிவி பிரகாஷின் ரிபெல் டீசரை வெளியிட்ட சூர்யா

வெயில், ஓரம்போ, கிரீடம், பொல்லாதவன், அங்காடித் தெரு, ஆயிரத்தில் ஒருவன், மதராசப்பட்டினம் போன்ற பல படங்களில் தன்னுடைய தனித்துவமான இசையின் மூலம் திரையுலகில் முக்கிய இடத்தை பிடித்தவர், ஜி.வி.பிரகாஷ்.

டார்லிங் படத்தின் மூலம் இசையமைப்பாளரிலிருந்து நடிகராக அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து திரிஷா இல்லனா நயன்தாரா, கடவுள் இருக்கான் குமாரு, பென்சில், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, புரூஸ்லீ, செம, ஜெயில் போன்ற பல படங்களில் நடித்து முக்கிய நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்தார் ஜி.வி.பிரகாஷ். இசையிலும் சரிவின்றி தன்னுடைய அதிரடி இசையின் மூலம் இசை அசுரன் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.

கதாநாயகனாக நடிப்பது ஒருபுறம் பல முக்கிய முன்னணி நடிகர்களுக்கு இசையமைப்பது ஒருபுறம் என இரண்டு இடங்களிலும் கலக்கிக்கொண்டு வருகிறார் ஜி.வி.பிரகாஷ். ரிபெல் டீசரில், தமிழுக்காகவே வாழ்ந்து இறந்தவன் என்ற வார்த்தைகளோடு காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஜி.வி.பிரகாஷ் ஒரு அதிரடி நாயகனாக இப்படத்தில் நடித்தள்ளார். ரிபேல் என்றால் கிளர்ச்சியாளர் என்பது பொருள் அதற்கேற்ப ஒரு கிளர்ச்சியாளர் போலவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். தன்னுடைய அதிரடியான காட்சிகளுக்கேற்ப பின்னணி இசைக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார், ஜி.வி.பிரகாஷ்.

நிக்கேஷ்.ஆர்.எஸ் என்பவர் அறிமுக இயக்குநராக இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். சில்லுனு ஒரு காதல், சிங்கம், சிறுத்தை, நான் மகான் அல்ல போன்ற வெற்றி படங்களை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ரிபெல் படத்தின் டீசரை நடிகர் சூரியா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று படத்தின் வெற்றிக்கு ஜி.வி.பிரகாஷின் இசை ஒரு முக்கிய காரணியாக அமைந்தது. அதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கி நடிகர் சூர்யா நடிக்கும் வாடிவாசல் என்ற படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...