விஜயகாந்தோட பல படங்கள் வெற்றி பெற காரணமா இருந்தவர் இவர் தான்.. தமிழ் சினிமாவின் சிறந்த வசனகர்த்தாவாக மாறியது எப்படி?

கடந்த 1980 மற்றும் 90களில் தமிழ் சினிமாவின் கதை மன்னன் என்றால் உடனே அனைவரும் கலைமணி என்று கூறுவார்கள். அந்த அளவுக்கு பல ஹிட் படங்களுக்கு அவர் கதை, வசனம் எழுதி உள்ளார். மேலும் அந்த படங்கள் வெற்றி பெறவும் கலைமணி முக்கிய காரணமாக அமைந்துள்ளார்.

கதை, வசனம் எழுதுவது மட்டுமின்றி சில படங்களை தயாரித்தும், சில படங்களை இயக்கவும் செய்துள்ளார். முதன் முதலாக பாரதிராஜா இயக்கத்தில் உருவான ’16 வயதினிலே’ என்ற திரைப்படத்தில் தான் கலைமணிக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. ’சந்தைக்கு போவனும் ஆத்தா வையும் காசு கொடு’ இது எப்படி இருக்கு’ உட்பட இன்றளவும் பிரபலமாக இருக்கும் பல வசனங்களை எழுதியவர் இவர்தான்.

முதல் படத்திலேயே அவர் எழுதிய வசனம் மிகப்பெரிய அளவில் பிரபலமானதை அடுத்து தமிழ் சினிமா அவரை அதிக அளவில் பயன்படுத்தி கொண்டது. கமல்ஹாசன் நடித்த நீயா திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதியவர், மங்கள வாத்தியம், எங்க ஊரு ராசாத்தி, வாலிபமே வா வா, காதல் ஓவியம், கோபுரங்கள் சாய்வதில்லை போன்ற படங்களுக்கும் கதை, வசனம் எழுதினார். இதில் கோபுரங்கள் சாய்வதில்லை படத்தை அவரே தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதிராஜாவின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றான மண்வாசனை படத்திற்கு கதை, வசனம் எழுதிய கலைமணி, மனைவி சொல்லே மந்திரம், இங்கேயும் ஒரு கங்கை, பிள்ளை நிலா, முதல் வசந்தம், பாரு பாரு பட்டணம் பாரு உட்பட பல படங்களுக்கு கதை வசனம் எழுதினார். அதே போல விஜயகாந்த் மற்றும் சத்யராஜ் நடித்த பல படங்களுக்கும் கதை, வசனம் கலைமணி தான்.

விஜயகாந்த் நடித்த ‘சிறைப்பறவை’, ‘கருப்பு நிலா’,  ‘தெற்கத்திக் கள்ளன்’, ‘என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்’ உள்ளிட்ட படங்களுக்கு கதை வசனம் எழுதினார். மேலும் சத்யராஜ் நடித்த மல்லுவேட்டி மைனர், பிரபு நடித்த சின்ன மாப்பிள்ளை, ஜெயராம், ரேவதி நடித்த பிரியங்கா உள்ளிட்ட பல படங்களுக்கு கதை வசனம் எழுதினார். அரசியல் அனல் கக்கும் வசனங்களை இவர் மம்மூட்டி நடித்த மக்களாட்சி திரைப்படத்திற்காக எழுதியிருப்பார். இந்த படம் ரிலீசான சமயத்தில் வசனங்களுக்காக மிகப்பெரிய அளவில் பாராட்டுக்கள் கிடைத்திருந்தது.

கடைசியாக அவர் விஜய் நடித்த குருவி திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதினார். கதை வசனகர்த்தா கலைமணி விஜயகாந்த் நடித்த தெற்கத்தி காளியம்மன் திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதியதுடன் அதனை தயாரித்து இயக்கவும் செய்திருந்தார். அதேபோல் பொறுத்தது போதும் என்ற படத்தையும், மனித ஜாதி என்ற படத்தையும் தயாரித்து இயக்கினார். இதில் மனித ஜாதி திரைப்படத்தில் சிவக்குமார் நடித்திருப்பார்.

16 வயதினிலே முதல் குருவி வரை ஏராளமான படங்களுக்கு கதை வசனம் எழுதிய கலைமணி, சிறந்த தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் இருந்தார். இந்த நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக திடீரென காலமானார். இன்றளவும் பாரதிராஜா, மனோபாலா, மணிவண்ணன் உள்பட பல கலைஞர்களின் படங்கள் வெற்றி பெறுவதற்கு கலைமணி தான் காரணம் என்று  திரை உலகினர் கூறுவார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.