சொல்வதெல்லாம் உண்மை டைட்டில்ல ஒரு படமா?.. 2 கே கிட்ஸை வியப்பில் ஆழ்த்திய தகவல்.. படத்தோட ரிசல்டில் காத்திருந்த ட்விஸ்ட்..

சொல்வதெல்லாம் உண்மை என்ற டைட்டிலை கேட்டவுடன் உடனே லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தான் ஞாபகம் வரும். ஆனால் இதே டைட்டிலில் கடந்த 1987 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடித்த திரைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது என்று சொன்னால் 2 கே கிட்ஸ் நம்ப மறுப்பார்கள். ஆனால் அதுதான் உண்மை.

விஜயகாந்த், ரேகா, ஜெய்சங்கர், ராதாரவி, பூர்ணம் விஸ்வநாதன், செந்தில், கோவை சரளா உள்பட பலரது நடிப்பில் உருவான சொல்வதெல்லாம் உண்மை என்ற படத்தை நேதாஜி இயக்கியிருந்தார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் இயக்குவதில் 80கள் மற்றும் 90களில் நேதாஜி பிரபலமான இயக்குனராக இருந்தார்.

தாயன்பன் இசையில் உருவான இந்த படம் கடந்த 1987 ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி வெளியானது. முதல் நாளே இந்த படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்ற நிலையில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்த படத்தின் கதை என்னவென்றால் பல ஆண்டுகளாக உண்மை செய்திகளை மட்டும் வெளியிட்டு வரும் ஒரு பத்திரிகை, தவறாக சரிபார்க்கப்படாத ஒரு செய்தியை வெளியிட்டு விடும். அதாவது அந்த நகரத்தில் உள்ள பிரபல டாக்டர் ஒருவர் மரணம் அடைந்து விட்டதாக செய்தி வெளியிடப்பட்டு விடும்.  அதன் பிறகு அந்த செய்தியை பொய் என்று தெரிந்தவுடன் நிறுத்த முயற்சி செய்வதற்குள் பத்திரிகை பொதுமக்கள் கைக்கு சென்று விடும்.

இந்த நிலையில் தன்னுடைய பத்திரிகையில் வந்த எந்த ஒரு செய்தியும் இதுவரை பொய்யானதில்லை என்ற நிலையில், இந்த செய்தி பொய்யாகிவிட்டால் பத்திரிக்கைக்கு மிகப்பெரிய கெட்ட பெயர் ஏற்படும் என்பதால், பத்திரிகை உரிமையாளர் அந்த செய்தியை உண்மையாக்க, அந்த டாக்டரை உண்மையாகவே கொன்று விடுவார். கொலை செய்யப்பட்ட டாக்டரின் மகனான விஜயகாந்த் தனது தந்தை சாவுக்கு காரணமானவர்களை தேடி பிடித்து பழிவாங்குவது தான் இந்த படத்தின் கதை.

விஜய் என்ற கேரக்டரில் விஜயகாந்த் நடித்திருப்பார். படத்தில் 15 ரீல்கள் என்றால் அதில் 10 ரீல்கள் சண்டை காட்சிகள் என்பது தான் ரசிகர்களுக்கு அலுப்பு தட்டியது. நாயகி ரேகா என்றாலும் அவர் பாடல் காட்சிகளுக்கு மட்டுமே வந்து செல்வார்.

பத்திரிகையாளராக ஜெய்சங்கர், கொலை செய்யப்பட்ட டாக்டர் சுந்தரமூர்த்தியாக பூர்ணம் விஸ்வநாதன் ஆகியோர் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் காமெடி என்ற பெயரில் கோவை சரளா மற்றும் செந்தில் ஆகிய இருவரும் சொதப்பி இருப்பார்கள் என்பதும் கல்லாப்பெட்டி சிங்காரம், சார்லி, குண்டு கல்யாணம் ஆகியோர் இருந்தும் காமெடி துளி கூட இல்லை என்பதே ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது.

இந்த படத்திற்கு தாயன்பன் இசையமைத்திருந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் கூட ஹிட் ஆகவில்லை என்பது துரதிஷ்டமே. மொத்தத்தில் தொடர்ச்சியாக வெற்றி படங்கள் கொடுத்து கொண்டிருந்த விஜயகாந்த்துக்கு சொல்வதெல்லாம் உண்மை என்பது ஒரு தோல்வி படமாக அமைந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...