நடிகர் திலகம் சிவாஜியின் கோவிலாக விளங்கிய சாந்தி தியேட்டர்.. இத்தனை வரலாறு படைத்ததா?

நடிகர்களுக்கு ரசிகர்கள்தான் தெய்வங்கள் என்றால் ரசிகர்களுக்கோ தனது அபிமான கதாநாயகன்தான் தலைவனாகவும், தெய்வமாகவும் திகழ்கிறார். ஏனெனில் சினிமா அப்படியொரு காந்த சக்தி கொண்டது. தியாகராஜ பாகவதர் முதல் இன்று சிவகார்த்திகேயன் வரை தியேட்டரில் படங்கள் ரிலீஸ் ஆனாலே விழாக்கோலம் தான். அந்தவகையில் தனது அபிமான நடிகரின் படங்கள் ரிலீஸ் ஆகும் தியேட்டர்களே ரசிகனின் கோவிலாக விளங்குகிறது.

ஆனால் நடிகர் திலகம் சிவாஜி தனது படங்களைத் திரையிடுவதற்காகவே சென்னையில் தியேட்டர் ஒன்றை விலைக்கு வாங்கினார். சென்னையின் அடையாளமாகத் திகழும் சாந்தி தியேட்டர்தான் அது. தமிழகத்திலேயே அதிக இருக்கைகள் கொண்டதும், குறிப்பாக பால்கனியில் மட்டும் 450 இருக்கைகளைக் கொண்டு தென்னிந்தியாவின் மிகப்பெரிய தியேட்டராக விளங்கியது சாந்தி தியேட்டர்.

1961- ம் ஆண்டு, சென்னை அண்ணாசாலையில் தனது ஆசைப்படியே ஒரு தியேட்டரை வாங்கினார் சிவாஜிகணேசன். இதன் கூட்டுப்பொறுப்பாளர்களில் ஒருவரான ஆனந்த் தியேட்டர் அதிபரான ஜி.உமாபதிதான், அந்த தியேட்டருக்கு ‘சாந்தி’ என பெயர் சூட்டியிருந்தார். இந்த தியேட்டரை வாங்கிய சிவாஜியின் மூத்த மகளின் பெயரும் சாந்திதான். எனவே அந்த பெயரை அப்படியே வைத்துக் கொண்டார் சிவாஜி.

உலகநாயகனுக்கு இப்படி ஓர் அதிர்ஷ்டமா? கைவந்த கலையாக பரதமும், நடனமும் அமைந்தது இப்படித்தான்.

1961 ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தியேட்டரை திறந்து வைத்தவர் அப்போதைய முதல்வர் காமராஜ். இங்கு திரையிடப்பட்ட முதல்படம், பீம்சிங் இயக்கத்தில், சிவாஜி நடித்து வெளியாகி அக்காலத்தில் சக்கைப் போடு போட்ட ‘பாவ மன்னிப்பு’. சிவாஜி படங்கள் எங்கு திரையிடப்பட்டாலும் சென்னையின் இந்த தியேட்டரில் படத்தை காணவே ரசிகர்கள் பெரிதும் விரும்புவர். சென்னையின் முக்கிய அடையாளமாகவும், சிவாஜிக்கு பெருமையளிக்கும் விஷயங்களில் ஒன்றாகவும் இந்த தியேட்டர் கடந்த காலங்களில் விளங்கியது.

சிவாஜி ரசிகர்களைப் பொறுத்தவரை இந்த தியேட்டர் அவர்களுக்கு வெறும் தியேட்டர் மட்டுமல்ல; அவர்கள் ஒன்று கூடும் திருவிழா ஸ்தலம். திரையுலக போட்டியை தவிர்த்து, எம்.ஜி.ஆருக்கும் பிடித்தமான தியேட்டர் சாந்தி தியேட்டர். 2005 ம் ஆண்டு சாந்தி திரையரங்கம் புதுப்பிக்கப்பட்டு சாந்தி, சாய்சாந்தி என இண்டு திரையரங்குகளாக மாற்றப்பட்டது. அங்கு சிவாஜி புரொடக்க்ஷன்ஸ் தயாரித்து, ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி’ படம் 800 நாட்களை தாண்டி ஓடி சாதனை படைத்தது.

சென்னையின் அடையாளங்களாக விளங்கி, தங்கள் பணியை நிறுத்திக்கொண்ட கெயிட்டி, கேசினோ, சஃபையர், மேகலா போன்ற தியேட்டர்களின் வரிசையில் சாந்தியும் இப்போது சிவாஜி ரசிகர்களின் ‘சாந்தி’யை பறித்துக்கொண்டு தன் பணியை நிறுத்திக் கொண்டுவிட்டது, சிவாஜி ரசிகர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய விஐபிகள் பலரும் அதிகமுறை படம் பார்த்த திரையரங்கம் என்றால் அது சாந்தி திரையரங்கம் தான். தற்போது ரோகிணி திரையரங்கம் இந்த பெயரைப் பறித்துக் கொண்டது. சாந்தி திரையரங்கில் பாவமன்னிப்பு, பாலும் பழமும், இருவர் உள்ளம், கர்ணன், சாந்தி, திருவிளையாடல், சரஸ்வதி சபதம், ஊட்டிவரை உறவு உள்ளிட்ட பல சிவாஜி படங்கள் 100 நாட்களுக்கு மேலாக ஓடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...