நடிகர் திலகத்துக்கே வசன உச்சரிப்பில் வந்த சந்தேகம்.. சொல்லிக் கொடுத்த முஸ்லிம் பிரமுகர்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் எண்ணற்ற பிளாக் பஸ்டர் ஹிட் படங்களில் வித்தியாசமான பாத்திரம் ஏற்று வசூல் சாதனை படைத்த படம் பாவ மன்னிப்பு. 1961-ல் வெளியான இப்படத்தில் சிவாஜியுடன், சாவித்திரி, ஜெமினி கணேசன்,தேவிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனவை. முக்கியமாக காதலர்களின் கீதமாக விளங்கும் காலங்களில் அவள் வசந்தம் பாடல், மத நல்லிணக்கப் பாடலான எல்லோரும் கொண்டாடுவோம் போன்ற பாடல்கள் இன்றும் பல இடங்களில் ஒலித்துக் கொண்டிருக்கும் காவியப் பாடல்கள்.

இப்படத்தில் சிவாஜி கணேசன் முஸ்லிம் பாத்திரமேற்று மிகச் சிறப்பாக நடித்திருப்பார். உண்மையில் இப்படத்தின் மூலக்கதை நடிகர் சந்திரபாபு எழுதியது. தான் கதாநாயகனாக நடிக்க வேண்டி “அப்துல்லா” என்ற பெயரில் தானெழுதி வைத்த கதையை இயக்குனர் ஏ.பீம்சிங்கிடம் சென்று கதை சொன்னார். அவரும் சம்மதிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சந்திரபாபுவே நடித்தார். கிட்டத்தட்ட 3,000 அடி எடுத்த பிறகு பீம்சிங்குக்கு ஒரு சந்தேகம் வந்தது. கதாநாயகனாக சந்திரபாபு நடித்தால் படம் ஓடுமா என்று.

பின்னர் சிவாஜி கணேசனின் சகோதரர் வி.சி.சண்முகத்தின் திருமண விழாவில் கலந்துக் கொள்ள பீம்சிங் சென்ற போது சிவாஜி கணேசனை சந்தித்து இப்படத்தில் அவரே கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். கதையும் பிடித்துப் போகவே சிவாஜியும் சம்மதிக்கிறார்.

நடிகர் திலகத்துக்கே வசன உச்சரிப்பில் வந்த சந்தேகம்.. சொல்லிக் கொடுத்த முஸ்லிம் பிரமுகர்

“பாவமன்னிப்பு” படத்தை பிரமாண்டமாக விளம்பரம் செய்ய ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்து, சென்னை சாந்தி தியேட்டருக்கு மேலே AVM என்று எழுத்துடன் பறக்கவிடப்பட்ட ஹைட்ரஜன் பலூன் நிகழ்வு 50+ வயதினருக்கு நன்றாக நினைவிருக்கும். சிவாஜிக்கு சொந்தமான “சாந்தி” திரையரங்கில் திரையிடப்பட்ட முதற்படம் “பாவமன்னிப்பு”.

இப்படத்தில் முஸ்லிம் வாலிபராக பாத்திரம் ஏற்றிருக்கும் சிவாஜி கணேசனுக்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது. அதாவது, இந்தப் பாத்திரத்தை ஏற்று நடிக்கயில் எப்படி பேசுவது? முஸ்லிம் என்பதால் தூய தமிழில் பேச வேண்டுமா அல்லது “பட்லர் இங்கிலீஷ்” போன்று “பட்லர் தமிழில்” பினாத்த வேண்டுமா?

இந்த சந்தேகத்தை யாரிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்வது? சிவாஜிக்கு இப்போது நீதிபதி மு.மு. இஸ்மாயில் ஐயா ஞாபகம் தான் வந்தது. அவரிடம் சென்று கேட்கிறார். “ஐயா நான் முஸ்லிம் இளைஞர் பாத்திரம் எற்று நடிக்கிறேன். இந்த வேடத்திற்கு ஏற்றார்போல் ‘ஸ்லாங்காக பேச வேண்டுமா அல்லது நல்ல தமிழிலேயே பேச வேண்டுமா?

பொறுமையாக கேட்ட நீதியரசர் சொன்னார் “முஸ்லிம் பாத்திரங்களில் நடிக்கும்போது தாராளமாக எல்லோரும் உரையாடுவது போல இயல்பாகவே நீங்க பேசலாம். நல்ல தமிழில் பேசுவது எங்கள் சமுதாயத்திற்கு நீங்கள் செய்கிற பெருமை” என்றார்.
நெகிழ்ந்துபோன சிவாஜி கணேசன் அப்படியே செய்கிறேன் என்று நன்றி பெருக்கோடு கூறி பாவ மன்னிப்பு படத்தில் நடித்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews